பேரறிவாளனை விடுதலை செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனது தண்டனை ஒத்திவைக்கப்பட்டு அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று, மே 18, நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவால் மற்றும் ஏ.எஸ்.போப்பண்ணா ஆகியோர் அரசியலமைப்பின் 142 ஆவது சரத்தின் பிரகாரம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
2018 இல் தமிழக அரசு பேரறிவாளனை மன்னித்து விடுதலை செய்யும்படி கட்டளையிட்டிருந்தும் அது ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ளது எனக்கூறிக் தமிழக ஆளுனர் அதை நிறைவேற்ற மறுத்து வந்திருந்தார். சரத்து 161 இன் பிரகாரம், இக்கட்டளையைத் தாமதிக்க ஆளுனருக்கோ, ஜனாதிபதிக்கோ அருகதையில்லை எனக்கூறி தற்போது உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டமைக்காக 1998 இல் தடா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்ட 7 பேர்களில் பேரறிவாளனும் ஒருவர். 2014 இல் உச்ச நீதிமன்றம் இம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருந்தது.
ரஜீவ் காந்தியைக் கொன்ற குண்டுகளை இயக்குவதற்குப் பாவிக்கப்பட்ட மின்கலங்களை பேரறிவாளனே வாங்கிக் கொடுத்தார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் 2017 இல் சீ.பி.ஐ. அதிகாரி அளித்த எழுத்துமூலமான சாட்சியத்தில் “இம் மின்கலங்கள் எதற்காகப் பாவிக்கப்படப் போகின்றன என்ற விடயம் தனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை” என்ற பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென சீ.பி.ஐ. 2021 இல் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனாலும் தமிழ்நாடு ஆளுனர் அது ஜனாதிபதியின் அதிகாரத்துக்குள் வருவது எனக்கூறி நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தார். ஆனால் இவ் விடயத்தில் ஜனாதிபதிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை எனக்கூறி ஆளுனர் மீது தமது அதிருப்தியையும் வெளியிட்டதோடு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.