• Post category:INDIA
  • Post published:November 21, 2020
Spread the love

ராஜிவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 30 வருடங்களாகச் சிறையில் வாடும் ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்யும்படி தமிழ்நாட்டின் பிரபல நடிகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பேரறிவாளன், ராஜிவ் காந்தி கொலை தொடர்பில் 1991 இல், மேலும் 6 பேர்களுடன் கைதுசெய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யப்படும்போது அவருக்கு 20 வயது.

இரண்டு ஆயுள் தண்டனைக் காலத்தை நிறைவேற்றியுள்ள பேரறிவாளனை விடுதலை செய்யும்படி நேற்று பல திரையுலகப் பிரமுகர்கள் களமிறங்கியுள்ளனர். தமது ருவீட்டர் மூலம் #ReleasePerarivalan என்ற குறியீட்டின் மூலம் இதற்கான செய்திகளை அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இவர்களில் விஜே சேதுபதி தமிழ்நாட்டு ஆளுனருக்கு விடுத்த காணொளிச் செய்தியில் “உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அனுசரித்து பேரறிவாளனை ஆளுனர் விடுதலை செய்ய வேண்டும். இவ்விடயத்தில் அற்புதம்மாளின் 29 வருடகால போராட்டத்தைக் கவனத்திலெடுத்து அவரை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள செய்தியில் ” கடந்த கால்நூற்றாண்டு காலமாகக் கண்னீருடன் போராடிவரும் அந்தத் தாயார் வருந்துவதைப் பாருங்கள். பேரறிவாளன் மட்டும் சிறையில் வாடவில்லை அவரின் தாயாரும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.



இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது செய்தியில் பேரறிவாளனை மட்டுமல்ல ஏனைய 6 பேரையும் விடுதலை செய்யும்படி கேட்டுள்ளார்.

தமிழ்க் கவிஞர் குயில்தாசன், அற்புதம்மாள் தம்பதிகளின் மகனான பேரறிவாளன், ராஜிவ் காந்தி கொலிஅக்குற்றத்தின் பேரில், ஜூன் 18, 1991 இல், அவருக்கு 20 வயதாகவிருக்கும்போது கைதுசெய்யப்பட்டிருந்தார். மே 1999 இல் தடா சட்டத்தின் கீழ் அவருக்கும் மேலும் அறுவருக்கும் உச்சநீதிமன்றம் மரணதண்டனை விதித்திருந்தது. 2014 இல் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறப்பட்டது.

இக் கொலைவழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.ரீ.தோமஸ், டி.பி.வத்வா, எஸ்.எஸ்.எம்.காத்ரி ஆகியோர் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் காரணமாக வைத்து அனைவருக்கும் மரணதண்டனையை விதித்திருந்தனர். இருப்பினும், இக் கொலையை விசாரணை செய்த சீ.பீ.ஐ. அதிகாரியான வீ.தியாகராஜன் 2017 இல் விடுத்த அறிக்கையில் பேரறிவாளன் சிவராசனுக்கு பற்றறிகளை வாங்கிக்கொடுத்தபோது அது எதற்காகப் பாவிக்கப்படப் போகிறது என்பது அவருக்குத் தெரியாது என்ற விடயத்தைத் தான் மேலதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறிவிட்டேன் எனக் குறுப்பிட்டிருந்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தியாகராஜனின் இந்த அறிக்கையைக் குறிப்பிட்டு, “தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி” எனக் காணொளி மூலம் பேரறிவாளனை விடுவிக்கும்படி கோரியுள்ளார்.

பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், எழுத்தாளர் மீனா கந்தசாமி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் பேரறிவாளன் விடுதலைக்குக் குரல்கொடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email