• Post category:INDIA
  • Post published:September 6, 2020
Spread the love

கோவிட்-19 நோய்த் தொற்று அச்சம் காரணமாக, சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்கு 90 நாள் தற்காலிக விடுதலை வழங்கும்படி அவரது தாயார் அற்புதம்மாள் செய்த விண்ணப்பத்தைத் தமிழ்நாடு அரசு நிராகரித்திருக்கிறது.

இது தொடர்பான அறிவித்தலை வெள்ளியன்று (செப். 04), தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அனுப்பியிருக்கிறது.

நீதிபதிகள் என்.கிருபாகரன், வீ.எம்.வேலுமணி ஆகியோர் முன் வெள்ளியன்று இவ்விண்ணப்பம் சமபந்தமான வழக்கு எடுக்கப்பட்டபோது, மேலதிக பொது வழக்குத் தொடுநர் ஆர்.பிரபாவதி, தமிழ்நாடு அரசு அற்புதம்மாளின் விண்ணப்பத்தை நிராகரித்திருப்பதாகத் தெர்வித்தார். சிறைச்சாலைகள் சட்டத்தின்படி சாதாரண விடுப்பு எடுப்பதற்கான தகுதி பேரறிவாளனுக்கு இல்லை எந்ற காரணத்துக்காக அரசு இவ்விண்ணப்பத்தை நிராகரிக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் திணைக்கள்ம் கொறோணாவைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை முறைப்படி பின்பற்றுவதால் அற்புதம்மாள் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட காரணம் செல்லுபடியாகாது என, விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான காரணமாக, உள்ளகத் திளைக்களத்தின் மேலதிக முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.

2017, 2019 வது ஆண்டுகளில் பேரறிவாளனுக்கு தற்காலிக விடுதலை கொடுக்கப்பட்டிருந்தபடியால் இந்த வருடத்தில் அவருக்கு விடுப்பு வழங்க முடியாது என ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் சிறைச்சாலைகள் திணைக்களமும் அறிவித்திருந்தது.

தமிழ்நாடு அரசின் தீர்மானத்தைக் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 8 வரை ஒத்திவைத்துள்ளனர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களெனக் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் மற்றும் நளினி, முருகன், சாந்தன், றொபேர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜயகுமார் ஆகியோர் கடந்த 30 வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.

Print Friendly, PDF & Email