பேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமையுங்கள் – அரசுக்கு மன்னார் மீனவர் வேண்டுகோள்
செப்டம்பர் 7, 2019
பேசாலையில் ஒரு மீன்பிடித் துறைமுகத்தை அமைத்துத் தருமாறும், இலங்கையின் கடற் பிரதேசத்தில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிர்வேசித்து மீன்பிடிப்பதைத் தடைசெய்யுமாறும் மன்னார் மீனவர்கள் வர்த்தக தொழில்துறை அமைச்சர் றிசார்ட் பதியுதீன் மற்றும் விவசாய, நீர்ப்பாசன, மீன்பிடி, கிராம பொருளாதார விவகார நீர்வள அமைச்சர் பி.ஹரிசன் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
மன்னாரின் வங்காலை பிரதேசத்தில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வாழ்கின்றனர். வெளிநாட்டு மீனவர்கள் தங்களது கடற் பிரதேசத்துள் அத்துமீறிப் பிரவேசித்து தங்கள் மீன் வளங்களைச் சூறையாடுகிறார்கள் எனவும் அரசு இதை நிறுத்துவதற்கு முயற்சிகளை எடுக்கவேண்டுமெனவும் அவர்கள் அமைச்சர்களிடம் முறையிட்டார்கள்.
அத்தோடு, கடலரிப்பைத் தடுப்பதற்கு மண் அணையொன்றை உருவாக்க வேண்டுமெனவும் பேசாலையை மீண்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்யவேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அத்தோடு, தென்னிந்திய கடல் காவல் படையினரால் 1980-85 வருடங்களில் தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட 81 சமுத்திரப் படகுகளுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
மீனவரின் முறைப்பாடுகளைத் தான் கொழும்புக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என அமைச்சர் ஹரிசன் உறுதியளித்தார்.