HumourLIFENewsWorld

பெல்ஜியம் | சிம்பான்சியை மணக்க விரும்பும் பெண்


மனித காதலால் குலத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட குரங்கு

சீதா, பெல்ஜியம் நாட்டின் அன்ட்வேர்ப் மிருகக்காட்சிச் சாலையிலுள்ள ஒரு கட்டுமஸ்தான சிம்பான்சி இன ஆண் குரங்கு. அதன்மீது தீராக் காதல் கொண்ட ஏடீ ரிம்மெர்மான்ஸ் என்ற பெல்ஜியப் பெண் அதைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.

இவர்களது உறவினால் அங்குள்ள இதர சிம்பான்சிக் குரங்குகளிடையே கடும் பிரச்சினை உருவாகிறது என்ற காரணத்தால் இத் திருமணத்துக்கு மிருகக்காட்சிச் சாலை இணங்க மறுத்துவிட்டது. அத்தோடு அப் பெண் மிருகக்க்கட்ட்சிச் சாலைக்கு வருவதையும் அது தடை செய்துவிட்டது. இதனால் ரிம்மெர்மான்ஸ் மிகவும் மனமுடைந்துபோயிருக்கிறார்.

“அவர்களிடையே இருக்கும் உறவு அங்குள்ள ஏனைய சிம்பான்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சீதாவை ஏனைய குரங்குகள் இப்போது சேர்த்துக்கொள்வதில்லை. பெரும்பாலான நாட்களை அது தனிமையிலேயே கழிக்கிறது” என்கிறது மிருகக்காட்சிச் சாலை.

“நான் சீதாவை மனமாரக் காதலிக்கிறேன். அதுவும் என்னைக் காதலிக்கிறது” என்கிறார் ரிம்மெர்மான்ஸ்.

ரிம்மெர்மான்ஸ், கடந்த நான்கு வருடங்களாக, ஒவ்வொரு வாரமும் தவறாது சீதாவைப் பார்க்க வருகிறார். ஒவ்வொரு தடவையும் இக் காதல் சோடி காற்றில் முத்தங்களைப் பரிமாறிக்கொள்வதும் கைகளை அசைத்துப் பேசிக்கொள்வதுமுண்டு. இதனால் ஏனைய சிம்பான்சிகளிடையே பொறாமை நிரம்பி வழிகிறது. அவை சீதாவை ஒதுக்கி விடுகின்றன.



“சீதாவைச் சுற்றி பார்வையாளர்கள் அதிகம் குழுமியிருந்தால், மற்றைய குரங்குகள் சீதாவை ஒதுக்கி விடுகின்றன. சீதா தமது குலத்தில் ஒருவன் என்பதை அவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றன” என்கிறார் மிருகக்காட்சிச் சாலை அதிகாரி சேறா லஃபோட். இதனால், பார்வை நேரம் தவிர்ந்த வேளைகளில், சீதா 15 மணித்தியாலங்களைத் தனிமையிலேயே கழிக்கவேண்டியுள்ளது.

“மனிதரில் அதிக கவனம் செலுத்தும் சிம்பான்சிகளை அவற்றின் சகபாடிகள் அதிகம் மதிப்பதில்லை. இயலுமானவரை சீதா ஒரு சிம்பான்சியாக இருப்பதையே நாம் விரும்புகிறோம்” என சேறா மேலும் தெரிவித்தார்.

சீதாவைப் பார்ப்பதை அனுமதிக்காமை ரிம்மெர்மான்ஸின் இதயத்தை உடைத்துச் சுக்குநூறாக்கிவிட்டது. “எனக்கு சீதாவைத் தவிர இந்த உலகத்தில் யாருமில்லை. ஏன் அவர்கள் அதை என்னிடமிருந்து பிரிக்கிறார்கள்? எனக் கதறுகிறார் ரிம்மெர்மான்ஸ்.