பெற்றோல் விலையுயர்வு, தட்டுப்பாட்டுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்

19 ஆவது திருத்தத்தை மீளக் கொண்டுவர தயார் – மஹிந்த ராஜபக்ச

பெற்றோல் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களும் வீதி மறியல்களும் இன்று (19) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ரம்புக்கணை, ஹிங்குராகொட, திகண, கம்பளை, ரத்தினபுரி, தெல்தெனிய ஆகிய சிறுநகரங்களில் தற்போது மக்கள் வீதிமறியல்களில் ஈடுபட்டு வருகின்றனரென நியூஸ் ஃபெஸ்ட் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரம்புக்கணையில் ரயில் பாதையை மக்கள் மறித்துப் போராடுவதால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளனவெனத் தெரிகிறது. இங்கு நகர் மத்தியிலுள்ள பல வியாபார நிலையங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக மூடப்பட்டுள்ளன. அவிசாவளையில் அவிசாவளை-கொழும்பு பிரதான வீதியிலுள்ள ‘நிற வெளிச்ச சந்தி’ யில் தெருவை மறித்து மக்கள் வாகனப் போக்குவரத்தைத் தடைசெய்துள்ளனர். நாட்டின் பெரும்பாகங்களிலும் போக்குவரத்து இடைஞ்சல்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்துக்கு எதிராகவுள்ள பிரதான வீதி மக்களால் முடக்கப்பட்டுள்ளது எனவும் தெல்தெனிய நகரத்தை ஊடறுத்துச் செல்லும் கண்டி-மஹியங்கன வீதி முற்றாக மறிக்கப்பட்டுள்ளதெனவும் தெரியவருகிறது.

காலி நகரத்தில் காலி-கொழும்பு பிரதான வீதி முடக்கப்பட்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது வண்டிகளை வீதிகளுக்கு குறுக்கே தரித்து போக்குவரத்தைத் தடைசெய்துள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

மாத்தறை நகரத்திலும் ஒரு வீதிமறியலுக்கு மக்கள் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

காலிமுகத்திடல் போராட்டம்

இதே வேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைப் பதவி விலகும்படி கேட்டு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 11 ஆவது நாளாகத் தொடர்கிறது.

ஆர்ப்பாட்டக்காரரைச் சந்திக்க பிரதமர் மஹிந்த முன்வைத்த கோரிக்கையை ஆர்ப்பாட்டக்காரர் நிராகரித்ததுடன், அப்படிச் சந்திப்பதானால் கோதாபய ராஜபக்ச பதவி விலகுவதுடன், அனைத்து ராஜபக்ச குடும்பமும் தமது பதவிகளைத் துறக்கவேண்டுமென்பதை அவர்கள் நிபந்தனையாக முன்வைத்ததுடன் அதைக் கடிதம் மூலம் ராஜப்கசக்களுக்கு அனுப்பியிருந்தனர். 1980 களில் ஜே.வி.பியனர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு நடந்தவை போன்ற விளைவுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும் என எச்சரித்ததன் பின்னர் காலிமுகத் திடல் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு மேலும் வலுத்து வருகிறது.

19 ஆவது திருத்தத்தை மீளக்கொண்டுவர மஹிந்த ராஜபக்ச தயார்

நாட்டில் வலுத்துவரும் போராட்டங்கள் ஆளும் தரபினரிடையே குழப்பத்தை ஏற்படுத்திவரும் நிலையில் “நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க ஸ்திரமான அரசியல் நிலைநிறுத்தப்படவேண்டுமெனவும் அதற்காக உடனடியாக அரசியலமைப்புத் திருத்தத்தைச் செய்யத் தான் தயாராக உள்ளதாகவும் இன்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன் முதலாவது படியாக ஜனநாயக ரீதியில் 19 ஆவது திருத்தம், தேவையான திருத்தங்களுடன் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படுமென அறிவித்துள்ளார். இதை நிறைவேற்றுவதற்கு, கட்சி பேதங்களைத் தாண்டி அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.