பெற்றோல் தட்டுப்பாட்டின்போது மோட்டார் சைக்கிள் ஊர்வலம் – விளையாட்டு அமைச்சு பின்னணியில்?

சம்பந்தமில்லை என மறுக்கிறார் அமைச்சர் நாமல்

நேற்று மீரிகாமத்திலிருந்து கல்பிட்டி வரை நடைபெற்று முடிந்த மாபெரும் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் ராஜபக்சக்களுக்கு மேலும் ஒரு தலையிடியைக் கொடுத்திருக்கிறது.

மார்ச் 17 முதல் 19 வரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த மாபெரும் மோட்டர் சைக்கிள் ஊர்வலம் இரண்டு நிகழ்வுகளாக நடைபெறுவதெனத் திட்டமிடப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் மீரிகாமத்தில் ஆரம்பித்து அனுராதபுரத்தில் முடிவடையவிருந்த இவ்வூர்வலத்தின் முதல் பாகம் நேற்று (17) மீரிகாமத்தில் ஆரம்பித்து கல்பிட்டியில் முடிவடைந்திருந்தது. இரண்டாவது பாகம் நாளை கல்பிட்டியில் ஆரம்பித்து அனுராதபுரத்தில் முடிவடையவிருந்தது. ஆனால் மக்களின் பலமான எதிர்ப்புக் காரணமாக இரண்டாவது பாகம் அமைப்பாளர்களினால் கைவிடப்பட்டிருக்கிறது எனவும் இதற்குக் கொடுக்கப்பட்டிருந்த அனுமதியைப் பொலிசார் மீளப்பெற்றுவிட்டதாகவும் தெரிய வருகிரது.

இவ்வூர்வலத்தை விளையாட்டு அமைச்சு ஒழுங்கு செய்திருந்தது எனவும் பின்னர் மக்கள் எதிர்ப்பு வலுக்கவே அது தனிப்பட்டவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட நிதி சேகரிப்பு நிகழ்வு எனப் பெயர் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ‘Spin Rider Club’ எனப்படும் விளையாட்டுக் கழகம் இவ்வூர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தது எனத் தற்போது பொலிசார் தெரிவித்துள்ளனர். இக் கழகம் சட்ட பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட ப்ரு அமைப்பு என்பதனாலும், இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதி பொது நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்படவிருந்தது என்னும் காரணத்தினாலும் தாம் இந் நிகழ்வுக்கு அனுமதி கொடுத்திருந்ததாகப் பொலிசார் மேலு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், நாடு மிக மோசமான எரிபொருள் தட்டுப்பாட்டில் இருக்கும்போது இது ஊதாரித்தனமானது என மக்கள் அரசாங்கத்தையும் பொலிஸ் திணைக்களததையும் கண்டித்ததன் காரணமாக இரண்டாம் கட்ட ஊர்வலத்தைப் பொலிஸ் தடைசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அனுராதபுரத்தை மையமாகக் கொண்டு தமது விழாக்களை நடத்திவருவது ராஜபக்சக்களின் உத்திகளில் ஒன்றாக இருந்துவருவதனாலும், எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட எழுச்சி ஊர்வலத்துக்கு மாற்றாக அமைச்சர் நாமல் தனது அமைச்சின் மூலம் இவ்வூர்வலத்தை உழுங்கு செய்திருந்தார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்திருக்கிறார்.