ArticlesColumnsசிவதாசன்

பெரும் படம் பார்த்தல்

துரும்பரைப்  பற்றி எழுத ஆரம்பித்ததிலிருந்து எனது நட்பு வட்டம் சுருங்கிக்கொண்டு போகிறது என்பதை ஒத்துக்கொண்டே  ஆகவேண்டும் .

துரும்பர் விடயத்தில் எனது பார்வை, அவதானிப்பு, நோக்கம் என்பன பற்றிய ஒரு சிறு அரும்பட விளக்கம் தான் இக் கட்டுரை.

வெள்ளை ஆண்  வர்க்கம்  ஆள்வதற்குத் தகுதியானது என்ற மூர்க்க எண்ணத்தின் அடிப்படையே துரும்பரை இவ்வளவு தூரம் தள்ளிக்கொண்டு வந்தது.

ஒரு காலத்தில் ஜனநாயக கட்சியின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் வெள்ளைத் தீவிரவாதியாக மாறியது சந்தர்ப்பவாதமாக இருப்பினும் அது ஒரு விபத்தல்ல. வெள்ளைத் தீவிரவாதம் நீண்டகாலமாக வெந்துகொண்டிருந்த ஒரு எரிமலை. புகையும் தருணத்தில் துரும்பர் அதைத் தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு வியாபாரி. வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாதிகள். சரியான சந்தர்ப்பங்களைத் தேர்ந்தெடுப்பவனே வெற்றி பெறுபவன். துரும்பர் வியாபாரத்தில் பெற்ற வெற்றியை அரசியலிலும் பெற முனைகிறார்.

இப்படியான துரும்பரின் சித்தாந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அவர் வெல்ல வேண்டும் என்பதற்கான நான் வைத்த காரணங்கள் தெளிவானதாகவில்லை. எனவேதான் இந்த அரும்பட (ஆம் எழுத்துப் பிழையல்ல ) விளக்கம்.

துரும்பரின் ஆரம்பகால பிரச்சாரக் கூட்டங்களில் பங்கு பற்றிய ஒரு பெண் ஆதரவாளரிடம்  ஒரு ஊடகவியலாளர் கேள்வி கேடடார். “துரும்பர் பெண்களை இழிவு படுத்திப் பேசியது உனக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதா?” அதற்கு அப் பெண் சொன்ன மறுமொழி “No, I am looking at the big picture’. அந்த ‘பெரும் படம் பார்த்த’லே எனது துரும்பர் ஆதரவுக்கான காரணமும்.

அப்பெண் சொன்ன அந்தப் பெரும் படம் – ‘துரும்பரின் வரவு அமெரிக்காவிற்கு பெரு நன்மையைப் பெற்றுக்  கொடுக்குமானால் பெண்மையை இழிவுபடுத்துவதைக்கூட நான் சகித்துக் கொள்வேன்’என்பதுவே.

நீண்டகாலமாகத் தகித்துக் கொண்டிருக்கும் ‘ஒடுக்கப்பட்ட’ வெள்ளையினத்தின் பிரதிநிதி அந்தப்பெண். அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வாழும் அடிமை விடுதலைக்குப் பின்னான எசமான் மனநிலைகளிலிருந்து விடுபட முடியாமல் தகிக்கும், தம் பொற்கால மீட்ப்பிற்காக  அலையும் செங்கழுத்து வெள்ளையரின் மோசஸ் தான் நமது துரும்பர். இவர்களின் தேடலைச் சரியாக அறிந்து சந்தர்ப்பத்தை அறிந்து அரசியல் செய்ய வந்தவர் தான் துரும்பர்.

அதற்கும் என்னுடைய பெரும் படத்திற்கும் என்ன சம்பந்தம்?

இன்றய உலக மகா பிரச்சினைகளுக்கெல்லாம் தாயான பிரச்சினை மத்திய கிழக்குப் பிரச்சினைதான். இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணமே மேற்கு ஐரோப்பா தான். வியாபார காரணங்களுக்காகவும் அரசியற் காரணங்களுக்காகவும் குழப்பப்பட்ட குழவிக்கூடுதான் இன்றய மத்திய கிழக்கு. ஆப்கானிஸ்தானின் ரஷ்ய ஆதரவு -இடதுசாரி நஜிபுல்லா அரசைக் கவிழ்க்கவென உருவாக்கப்படட முஜாஹிதீனின் இன்றய வடிவம் தான் ஐசிஸ்.  இந்த ஐசிஸ் உருவாக்கத்தில் ஒபாமாவிற்குப் பங்கிருக்கிறது என்று துரும்பர் பகிரங்கமாகக்  குற்றம் சாட்டுகிறார். புட்டினுடன் சேர்ந்து ஐசிஸ் பயங்கரவாதிகளைப்  பஸ்பமாக்கிவிடுகிறேன் என்கிறார். மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு என்ன வேலை என்கிறார். பல உலக நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் அமெரிக்க சுய உற்பத்தியையும், வேலைவாய்ப்புகளையம் பாதிக்கின்றன என்கிறார். மொத்தத்தில் இன்று இருப்பதாக நாம் கருதும் இடதுசாரி நாடுகள் வரித்துக் கொள்ளும்  கொள்கைகள் பலவற்றைத் துரும்பரும் கொண்டிருக்கிறார்.

துரும்பர் சொல்லும் மெக்சிக்க எல்லைச் சுவரைப் பார்ப்போம்.

நீண்ட காலமாக பல வறிய மெக்சிக்கர்கள் களவாக அமெரிக்காவில் புகுந்து மிக குறைந்த சம்பளத்தில் நாட்க்கூலிகளாக வேலைபார்த்துவிட்டுத் திரும்பிவிடுவார்கள். அமெரிக்க எல்லை மாநிலங்களில் பல முதலாளிகள் இப்படியானவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பெரும் லாபத்தை ஈட்டி வந்தனர். மெக்சிக்கர்களின் கள்ளக்  குடிவரவைத் தடுக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட  போது அதை எதிர்த்தவர்கள் இந்த முதலாளிகள். இந்த முதலாளிகள் துரும்பரையும் எதிர்க்கிறார்கள்.

சரி. துரும்பர் அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் வரூவதைக் கட்டுப்படுத்துவேன் என்கிறார். மதில் கட்டுவேன் என்கிறார். அதையெல்லாம் நம்பி – இவர் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்க நற்பெயர் கெட்டுவிடும் என்கிறார்கள். அப்போ துரும்பர் சொல்லும் ஏனையவற்றையும் நம்பியேயாக வேண்டும். மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறும். புட்டினுடன் சேர்ந்து ஐசிஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதையெல்லாம் நம்பியேயாகவேண்டும்.

அல்ஜீரியாவில்,எகிப்தில், லிபியாவில், சிரியாவில், இராக்கில்  இடப்பட்ட மூலதனங்களின் அறுவடையே  இன்றய உலகின் பயங்கரவாதம். சாதாரண மக்களின் உயிர்கள்தான் உலக வணிகர்களின் நாணயங்கள். இந்த வணிகர்களின் கூடாரத்தில்தான் இரண்டு கட்சிகளும் உறங்குகின்றன. இருவருக்கும் தீனி போடுவது வால்ஸ்ட்ரீட் பெருவணிகர்கள். அமெரிக்க வரலாற்றில் இவர்களின் கடடளையை  மீறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளர் துரும்பராகவே இருக்கும் (பேர்ணி சாண்டர்ஸ் இறுதியில் சறுக்கிவிட்டார் என்கிறார்கள்).

சரி, துரும்பர் ஜனாதிபதியாக வந்தால் என்ன நடக்கும்? மதில் கட்டப்படலாம், முஸ்லிம்கலின் குடிவரவு தடுக்கப்படலாம். ஐசிஸ் தொல்லை ஒழியலாம். மத்திய கிழக்கு சுதந்திரமடையலாம்.

இவற்றை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நான் நம்பவில்லை.

ஆனால் எது நடக்கலாம் என நான் நம்புவது இதுதான்.

அமெரிக்க உற்பத்தி பெருக வேண்டுமானால் மலிவு விலை இறக்குமதி கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதன் பெறுபேறு: பொருட்களின் விலை அதிகரிப்பு அதனால் பண வீக்கம், அதனால் வட்டி வீத அதிகரிப்பு அதனால் பொருளாதார பாதிப்பு – இது  ஒரு பக்கம்.

துரும்பரின் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இப்பொழுது தகித்துக் கொண்டிருக்கும் நாஜிகளினதும் பாசிஸ்ட்டுகளினதும் மீளெழுச்சி ஊக்கம் பெறும். இதனால் வெளியுறவுக் கொள்கைகளில் அமெரிக்கா சிக்கலான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும்- இது இன்னொரு பக்கம்.

இந்த இடைவெளியில் உலக ஒழுங்கு அமெரிக்க கட்டுப்பாட்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு புதிய ஒழுங்கொன்றுக்கு வித்திடப்படலாம். அமெரிக்க சாம்ராஜ்யத்தின் சரிவு ஆரம்பிக்கும். அதற்கான சுழியை  துரும்பரே போடுவார்.

மாறாக, நீங்கள் விரும்பியபடி கிளிண்டன் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க மேலாதிக்கம் இன்னும் வலுப்பெறும்.

தொட்டிலும் ஆடும் பிள்ளையும் கதறும்.

This is my big picture.

இக்கட்டுரை செப்டம்பர் 20116 ஈ குருவி  பத்திரிகைக்காக எழுதப்பட்டது.

பிற்சேர்க்கை:
விமர்சகர்களுக்கு ஊரெல்லாம் எதிரிகள். எனது எழுத்து ஒரூ சமூக அவதானிப்பு எனவே நான் கருதுகிறேன். விமர்சகர்கள் சமூக அளவுகோல்களை வைத்துக்கொண்டு நடப்புகள் மீது கருத்துக் சொல்பவர்கள். என்னிடம் எந்த அளவுகோல்களும் இல்லை. அளவுகோல்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. புலன்களின் மதிப்பீடுகள் எல்லாமே subjective வகைக்குள் அடங்குவன.