NewsTamil HistoryUS & Canada

பெருமைக்குரிய தமிழர்கள் | யோர்க் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெறும் 87 வயது தமிழ் மூதாட்டி


கனடியப் பல்கலைக் கழகமொன்றில் முதுகலைப் பட்டத்தைப் பெறும் முதலாவது அதிகூடிய வயதுடையவர்

ரொறோண்டோ, கனடாவைச் சேர்ந்த 87 வயதுடைய தமிழ் மூதாட்டியான வரதலெட்சுமி சண்முகநாதன், ரொறோண்டோ யோர்க் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டத்தைப் (Masters) பெறுகிறார். இப் பல்கலைக் கழகத்தில் முதுகலைக் கல்வி கற்றுப் பட்டம் பெறும் அதிக வயதுடைய மாணவர் என்ற பெருமையும் அவரைச் சேர்கிறது.

வரதா சண்முகநாதன் (படம்: யோர்க் பல்கலைக்கழகம்)

ரொறோண்டோ புறநகர்ப் பகுதியான வாண் நகரில் வசிக்கும், வரதா என அழைக்கப்படும், வரதலெட்சுமி சண்முகநாதன் அவரது மகளின் அழைப்பின் பேரில், 2004 இல் கனடாவில் குடியேறினார். வரதா, யாழ் தீபகற்பத்தின் தீவுப்பகுதியிலுள்ள வேலணை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டாம் நிலைக் கல்வியில் திறமையான பெறுபேறுகளைப் பெற்றிருந்தும், தமிழராக இருந்ததால், இலங்கையில் உயர் கல்வியைக் கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. இதனால் அவரது ஆசிரியர்களின் ஆலோசனையின் பேரில் வரதாவின் பெற்றோர்கள் அவரை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அங்கு தமிழ்நாடு, சென்னை பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தை அவர் பெற்றார்.

தமிழ்நாட்டில் பெற்ற பட்டக் கல்வியுடன் இலங்கைக்குத் திரும்பிய அவர், கிராமியப் பாடசாலை ஒன்றில் ஆங்கிலம், வரலாறு ஆகியவற்றைப் போதித்துக்கொண்டிருந்தார். அத்தோடு அவரது தொடர் முயற்சியின் பயனாக, இலங்கைப் பல்கலைக் கழகத்தின் டிப்ளோமா பட்டம் (Dip. in Education) ஒன்றையும் பெற்றார். திருமணமாகியதும் அவர், ஆசிரியரான கணவருடன் வெளிநாடு ஒன்றிற்குப் பயணமாகினார். எதியோப்பியா, சியெறா லியோன், நைஜீரியா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் அவரது நாடு கடந்த வாழ்வு தொடர்ந்தது.

தனது ஐம்பதாவது தசாப்தத்தின் நடுப்பகுதியில் லண்டன் பல்கலைக் கழகத்தின் பேர்க்பெக் கல்லூரியில் இணைந்து வரதா தனது முதலாவது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து அங்குள்ள உயர் பள்ளியில் ஆங்கிலம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கற்பித்தார். அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் போதிக்கும் பதவி அவருக்குக் கிடைத்தது. வேலையும் வாழ்வுமாகக் கடந்தபின் 2004இல், கனடிய பிரஜையான அவரது மகளின் அழைப்பின் பேரில் கனடா வந்தார்.இலங்கையில் கல்வி, அரசியல் ஆகியவற்றில் காட்டிய ஆர்வம் அவரைத் தொடர்ந்து கனடாவுக்கும் வந்தது. 30 வருடங்களின் பின்னர் அவர் மீண்டும் தனது கல்வித் தேடலில் ஆர்வம் கொண்டார். அப்போது, யோர்க் பல்கலைக் கழகம் மூதாளர்களுக்கு கட்டணம் அறவிடாமல் பட்டப்படிப்பைத் தொடர வழி செய்வதை உறவினர் ஒருவரின் மூலமாக அறிந்து கொண்டார். அவரது மகளும் யோர்க் பல்கலைக் கழகத்தின் ஷூலிக் வணிக பீடத்தில் கற்று MBA பட்டத்தை பெற்றிருந்தார். மகள் தந்த உற்சாகத்துடன், 2019 இல், வரதா யோர்க் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் (Political Science) முதுகலைக் கல்வியைப் பெற விண்ணப்பித்தார். “எனக்கு 5 வயதாக இருக்கும்போது இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமாகியிருந்தது. போரும் வன்முறையும் எப்படிக் கடல் கடந்து உலக நாடுகளைப் பாதிக்கும் என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. எனவே போரும் சமாதானமும் பற்றிக் கற்றுக்கொள்வதில் நான் ஆர்வாமாக இருக்கிறேன்” என அவர் யோர்க் பல்கலைக்கழக விண்ணப்பத்தில் கூறியிருந்தார். இந்த வலுவான கூற்று அவருக்குப் பல்கலைக் கழகக் கற்கைக்கான இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கையில் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் அஹிம்சை வழியில் பெற்றுக்கொள்வதற்கான வழிகளைக் கற்றுக்கொள்வதே அவரது யோர்க் பல்கலைக் கழகக் கல்வியின் அடிநாதமாக இருந்ததென அவர் கூறுகிறார்.

2019 இல், அவரது 85 ஆவது வயதில், இலையுதிர்/கார் பருவ வகுப்பில் இணைந்த வரதா, இரண்டு வருடக் கல்வியின் பின்னர் 2021 கார் பருவத்தில் தனது கனவை நிறைவேற்றிக் கொள்கிறார். “பல்கலைக் கழக வளாகத்துக்குப் போவதே ஒரு பெரிய மாற்றம். மண்டப நடைபாதைகளில் நடப்பது முதல், நூலகத்தில் இருந்து படிப்பது வரை, ஏனைய இளைய பராயத்தினரைப் போல நடந்துகொள்வது எல்லாம் ஒரு புதிய அனுபவமாகவும் எனக்கு விருப்பமான ஒன்றாகவும் இருந்தது. வளாகத்தில் இருக்கும் ஒவ்வொரு தடவையும் ஏதோ கோவில் ஒன்றில் இருப்பது போன்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது; அது ஒரு அமைதியானதாகவும், புத்துணர்ச்சி தருவதாகவும் இருந்தது. மூதாளர்கள் தமக்கு சமூகத்தால் விதிக்கப்பட்ட தடைகளையும் தாண்டி அறிவைத் தேடிக்கொள்ள வேண்டும், நாங்கள் எப்போதுமே வாழ்நாள் மாணவர்கள் என நான் கருதுபவள்” என்கிறார் வரதா.

இப்போது அவர் ஒரு அரசியல் விஞ்ஞான, முதுகலைப் பட்டதாரி. தனது பெரும்பாலான கற்கையை அவர் இணையவழியாகவே பெற்றுக்கொண்டார். அவரது ஆய்வுக் கட்டுரை இலங்கையின் போருக்கான காரணங்கள் பற்றியது. “போர் முடிந்துவிட்டதெனினும், அங்கு சமாதானம் இன்னும் நிலைநாட்டப்படவில்லை. தமிழர்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை, அவர்களது அபிலாட்சைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதிகாரப் பகிர்வும், அரசியலமைப்பில் பங்கீடுமே உண்மையான சமாதானத்தைக் கொண்டுவரும். அடிவானத்தில் சமாதானம் தெரிகிறது ஆனால் அதை அடைய மிக நீண்ட காலம் எடுக்கும்” என்கிறார் வரதா.நவம்பர் 2, 2021 அன்று, வரதா சண்முகநாதன், தனது பேரப் பிள்ளைகளின் வயதையொத்த, சுமார் 4,000 மாணவர்களுடன் இணைந்து தனது யோர்க் பல்கலைக் கழகப் பட்டமளிப்பைக் கொண்டாடினார். துர்ப்பாக்கியமாக, வழமையான மாணவர்களும் உறவினர்களும் இணைந்து பல்கலைக்கழக மண்டபத்தில் கொண்டாடி மகிழும் நிகழ்வாக இது அமையாமல், இணைய வழியாகக் கொண்டாடப்பட்டது மிகவும் துன்பம் தருவது. ஆனாலும் யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறும் அதிகூடிய வயதுடைய மூதாட்டி என்ற பெயரும், கனடியப் பலகழகமொன்றில் முதுகலைப் பட்டம் பெறும் மூதாட்டி என்ற பெயரும் வரதா சண்முகநாதனுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலுமுள்ள தமிழருக்கும், இனங்களைக் கடந்து பெண்குலத்தார் அனைவருக்கும் நிலைத்து நின்று பெருமை தரும் ஒரு விடயமாகும். அவர் திறந்துவிட்ட இப் பாதையில், அவர் கூறியது போல, ‘சமூகத்தினால் தடைகள் விதிக்கப்பட்ட’ பலர் இனிவரும் காலங்களில் பயணிப்பார்கள் என நம்பலாம்.

வரதா சண்முகநாதனுக்கு ‘மறுமொழி’ தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

(நன்றி: குளோறியா சுஹாசினி, ஊடகத் தொடர்புகள், யோர்க் பல்கலைக் கழகம்)