பெருமைக்குரிய தமிழர்கள் | சின்னத்துரை ஜெயக்குமார், வளரும் வடக்கின் ஒரு உதாரணம்

By Jekhan Aruliah

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

2020 இல், சின்னத்துரை ஜெயகுமாரை நான் யாழ். ஜெட்விங் ஓட்டலின் அழகான உணவகத்தில் தான் முதலில் சந்தித்தேன். வைனுடனும் நல்ல உணவுடனும் அன்றைய பொழுது இனிதாகவே கழிந்தது. உணவு பரிமாறுபருக்கு (வெயிட்டர்) நன்றியைத் தெரிவித்துவிட்டு எழும்போது சமையற்காரரை ஒரு தடவை சந்திக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார் அந்த வெயிட்டர்.

சிறிது நேரத்தில் அச் சமையற்காரர் எங்கள் முன் நின்றிருந்தார். அழகான புன்முறுவலுடன், சுறுசுறுப்பான அந்த சமையற்காரர்தான் சின்னத்துரை ஜெயக்குமார். எங்கள் உணவு தயாரிப்பு, பரிமாறல் எல்லாவற்றுக்கும் அவர் தான் பொறுப்பு. உண்மையில் ஜெயகுமார் இரண்டாவது நிலை சமையற்காரர். அவருக்கு மேலுள்ள முதலாம் நிலை சமையற்காரருக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நிர்வாகச் சமையற்காரர் கொழும்பிலிருக்கிறார். 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், பின்னர் கோவிட்-19 தாக்குதல்கள் என்று வருமானமின்மையால் இப்போது அந்த சங்கிலி உடைந்துவிட்டது. இப்போது எல்லாமே ஜெயக்குமார் தான்.

ஜெட்விங் யாழ்ப்பாணம்

எவரையும் இலகுவில் கவரும் தோற்றமுள்ள அந்த இளைஞன் எங்கள் முன் நின்றான். அவனைப்பற்றிக் கேட்டு அறிந்துகொண்டோம். அவனுடைய ஆங்கில மொழிப் பிரயோகம் அவனது தன்னம்பிக்கையைக் காட்டியது. யாழ். ஜெட்விங் பொது முகாமையாளராகவிருந்த நண்பர் கிறிஸ் பொன்னுத்துரையிடம் ஜெயக்குமாரை பேட்டிகாண விரும்புவதாகத் தெரிவித்தேன். அம்மாக்களினதும் அன்ரிகளினதும் ஏளனத்துக்குள்ளாகும் கடுமையான தொழிலொன்றுக்குள் நுழைய விரும்பும் ஒரு யாழ்ப்பாணத்து இளைஞன், இளைய தமிழ்ச் சந்ததிக்கு ஒரு உதாரணம்; சவால்களைப் புரட்டிப்போட்டுக்கொண்டு சந்தர்ப்பங்களைக் கையகப்படுத்திக்கொண்டு முன்னேறும் அவனைப்பற்றி நான் எழுத வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டேன். சில வாரங்களுக்குப் பின்னர் கிடைத்த அந்தப் பொழுதில் தான் அறிந்தேன் – அவனது குடும்பப் பின்னணியிலிருந்து கொண்டு அவன் சாதித்தவை அபாரம்.

ஜெயக்குமார் 1994 இல் ஊரெழுவில் பிறந்தான். யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சுன்னாகத்திற்கு அருகேயுள்ள ஒரு சிறிய கிராமம் அது. அவனது தந்தையார் ஒரு சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார். அத்தோடு அருகிலிருந்த தேவாலயமொன்றில் இரவு நேரக் காவல்காரனாகவும் கடமையாற்றினார். குடும்பத்தைத் தாயாரே வளர்த்தார். நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி; ஜெயக்குமார் தான் கடைக்குட்டி.

இலங்கையின் கொடிய யுத்தம் உச்சமடைந்தபோது அவன் பள்ளிக்கூடம் போனான். குண்டுகளில் சிக்காதிருப்பதற்காக அவன் விடுதியில் தங்கிப் படிக்க நேர்ந்தது. 2009 இல் போர் முடிவுற்றதும் அவன் படிப்பையும் முடித்துக்கொண்டான். ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கற்று, உயர்தரப்பரீட்சையில் B, இரண்டு C தரங்களுடன் கல்வியை முடித்துக்கொண்டான்.

ஒரு ஆசிரியாகுவதே ஜெயக்குமாரது எண்ணம். ஆனால் போர் முடிந்த கையோடு அத் தொழிலுக்காக நின்றவர்களின் வரிசை மிகவும் அகலமாகவும் நீளமாகவும் இருந்தது. இதனால் அவனது கனவும் அவனை விட்டுப் போனது.

2014 இல் அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது. ஒரு ஓட்டலில் ‘ஸ்ரூவார்ட்’ பணி அது. இக் கட்டுரைக்காக அந்த ஓட்டலின் பெயரை ‘EL ஓட்டல்’ என அழைக்கிறேன். அவனது குடும்ப நிலை காரணமாக அவன் ஏதாவது ஒரு வேலையை எடுத்தேயாகவேண்டும் என்ற நிலை. இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமென்று அவன் நம்பவில்லை. ஒன்றரை வருடங்களாக, இந்த ஓட்டலில் அவன் அறைகளையும், சமையலறைகளையும் கழுவினான். சில காலத்துக்குப் பிறகு, கழுவல் வேலை இல்லாதபோது ‘பிட்சா’, ”ஃபிறைட் றைஸ்’ போன்றவற்றைத் தயாரிக்கும் பணியும் அவனுக்குக் கிடைத்தது.

ஒருநாள், பத்திரிகையொன்றில் வந்த விளம்பரம் அவனது கவனத்தை ஈர்த்தது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் விருந்தோம்பல் முகாமைத்துவத்துவ கற்கை நெறிக்கான (Hospitality Management Course) நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுமென அதில் இருந்தது. அன்றய நாளில் அவனுக்கு வேலை இருந்த காரணத்தால் அதற்குச் சமூகமளிக்க முடியாமல் போய்விட்டது. பின்னொருநாள், அவனுக்கு ஓய்வு கிடைத்தபோது, காரைநகரிலிருந்த தொழிற்பயிற்சி நிலையத்துக்கு (Vocational Training Agency (VTA)) நேரே சென்றான். ஜேர்மனி அரசாங்கத்தின் GIZ மற்றும் ஜெட்விங் ஓட்டல் குழுமமும் இணைந்து நடத்துவது இப் பயிற்சி நிலையம். இங்குதான் அவன் முதன் முதலாக, ஜெட்விங் ஓட்டலின் முதல் பொது முகாமையாளாக இருந்த கிறிஸ் பொன்னுத்துரையைச் சந்திக்கிறான். கிறிஸ் ஜனவரி 2021 இல் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் ஜெயக்குமாரின் விதி வேறு வழியில் வந்து குறுக்கே நின்றது. இத் தொழிற்பயிற்சி வேலையில்லாத இளைஞர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒன்று. ஜெயக்குமாருக்கு அப்போது வேலை இருந்த படியால் அவனுக்கு அப்பயிற்சிக்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை.

காரைநகர் VTA தொழிற்பயிற்சிக் கல்லூரி மாணவர்கள்

EL ஓட்டல் கார்கிள்ஸ் மோலினுள் ஒரு பெட்டிக் கடையை (outlet) வைத்திருந்தது. அதை நிர்வகிக்கும் பொறுப்பு ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது. அதிகாலை ஓட்டலில் கழுவல், துடையலை முடித்து, விருந்தாளிகளுக்கு காலை உணவைப் பரிமாறிவிட்டு நேரே பெட்டிக்கடைக்குப் போக வேண்டும். அங்கு காலை இரண்டு பணியாளர்கள், மாலை இரண்டு பணியாளர்களை மேற்பார்வை செய்வதோடு, கழுவல், துடையல், சமையல், கல்லாப்பெட்டி அத்தனையும் ஜெயக்குமார் பார்க்கவேண்டும்.

கார்கிள்ஸ் மோலின் இரண்டாம் மாடிக் கழிப்பறை யன்னலூடு பார்த்தால் அருகே புதிய கட்டிடமொன்று எழுவது தெரியும். அங்குள்ள பாதுகாவலர் மூலம் அங்கு என்ன வரப்போகிறது என்பதை அறிந்துகொண்டான் ஜெயக்குமார். காரைநகர் பயிற்சி நிலையத்தில் கேள்விப்பட்ட ஓட்டல் தான் இதுவென்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். கிறிஸ் பொன்னுத்துரையோடு இரண்டாவது தடவை பேசிப் பார்த்தான். ஜெயக்குமாரின் விடா முயற்சி வெற்றி பெற்றது. இந்த அசாதாரணமான இளைஞன் கிறிஸின் மனதில் இடம் பிடித்துக்கொண்டான். பயிற்சி நிலையத்தில் பயின்ற ஒருவர் நின்றுவிட்டதால் அந்த இடத்துக்கு ஜெயக்குமார் தெரிவாகிறான்.

அடுத்த 6 மாதங்களுக்கு ஜெயக்குமாருக்குக் கடுமையான வேலை. EL ஓட்டலில் சம்பளக் குறைப்போடு நேரக்குறைப்பையும் தந்தார்கள். அந்நேரத்தில் அவனால் காரைநகர் பயிற்சி நிலையத்திற்குச் சென்று வகுப்புகளில் பங்குபற்ற முடிந்தது. அதிகாலை எழுந்து EL ஓட்டலில் விருந்தாளிகளுக்கு காலை உணவைத் தயாரித்துவிட்டு 8 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் தனது மோட்டார் சைக்கிளைத் தரித்துவிட்டு, அங்கிருந்து புறப்படும் பஸ்வண்டியில் காரைநகருக்குச் செல்ல வேண்டும். அங்கு வகுப்புக்களை முடித்துக்கொண்டு திரும்பி வந்து பி.ப. 4:30 மணிக்கு கார்கிள்ஸ் மோல் பெட்டிக்கடை; அதைத் தொடர்ந்து இரவு 10:00 மணிக்குத் திரும்பவும் EL ஓட்டலில் கழுவல் துடையல்; அதன் பின்னர்தான் வீட்டுக்குப் போகலாம்.

காரைநகர் பயிற்சி நிலையத்தில் ஆங்கில மொழிப் பிரயோகத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஆங்கில வகுப்புகள் இருக்கும். அங்குள்ள பெரும்பாலான மாணவர்கள் தமிழில்தான் பேசினார்கள். தமிழ் தெரியாத நான் ஜெயக்குமாரோடு மேற்கொண்ட உரையாடல் அந்த ஆங்கிலப் பயிற்சியின் செயற்திறனைக் காட்டியது. 6 மாதங்கள் முடிந்ததும் அம் மாணவர்களைப் பல ஜெட்விங் ஓட்டல்களுக்கும் அனுப்பி அங்கு கைவினையாற்றல் மூலம் அவர்கள் அனுபவத்தைப் பெறவேண்டுமென்பதே ஜெட்விங் குழுமத்தின் திட்டம். இதன்படி, ஜால ஜெட்விங் ஓட்டலில் ஜெயக்குமார் 5 மாதப் பயிற்சியை எடுக்கவேண்டி வந்தது. யால தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாவாசிகள் இலங்கையின் தென்பகுதிக் கரையோரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆடம்பர ஓட்டலுக்கு வருவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மேட்டுக்குடிகள்.

யால ஜெட்விங்கில், இறைச்சி, மீன், மரக்கறிகள் வெட்டுவது, தேங்காய் துருவுவது, உருளைக்கிழங்கு கழுவுவது என ஜெயக்குமாருக்குப் பல வேலைகள். வித்தியாசமான சமையற் பாத்திரங்களைக் கையாள்வது, ஒம்லெட் போடுவது, ரொட்டி, தந்தூரி வேகவைப்பது போன்ற சிறிய வேலைகளும் கொடுக்கப்பட்டன. மிக முக்கியமாக, ஒரு உயர்தர ஓட்டலில் இருக்கக்கூடிய நிர்வாகம், சகபாடிகள், விருந்தினர் ஆகியோரின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களையும் அவன் இங்கு கற்றுக்கொண்டான். இதர பணியாளர்கள் துணையோடு சிங்களமும் பேசக் கற்றுக்கொண்டான். கிடைக்கும் இடைவேளைகளில் கடற்கரைக்குப் போய் கைப்பந்து விளையாடுவதும், கடலில் நீந்துவதும் அவனது பொழுதுபோக்குகளாகின. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அந்த சகபணியாளர்களுடன் முகநூல் மூலம் தொடர்புகளைப் பேணிவருகிறான். யால ஜெட்விங்கில் ஜெயகுமாரின் இறுதிக் கடமை டிசம்பர் 25, 2015, நத்தார் தினத்தன்று காலை உணவு தயாரிப்பது. 26ம் திகதி ஜெயக்குமாரும் சக பயிற்சியாளர்களும் யாழ்ப்பாணம் ஜெட்விங்கிற்குத் திரும்பி கிறிஸ் பொன்னுத்துரையின் கீழ் பணிகளை ஆரம்பிக்கிறார்கள்.

அடுத்த மூன்று வருடங்களில், மேசைகள் துடைக்கும், பாத்திரங்கள் கழுவும், நிலம் கூட்டும் சமையலறை உதவியாளர் பதவியிலிருந்து, விருந்தாளிகளுக்கு உணவு தயாரிக்கும் இரண்டாம் நிலை சமையற்காரராக (2nd Commis Chef) ஆக ஜெயக்குமார் பதவி உயர்த்தப்பட்டான். 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சுற்றுலாத்துறையைச் சுழற்றியடித்திருந்ததிலிருந்து சகல பதவியுயர்வுகளும் நிறுத்தப்பட்டன. ஆனாலும் சிகிரியாவுக்கு அண்மையிலுள்ள ஜெட்விங்கின் முதன்மை ஓட்டல்களில் ஒன்றான ஜெட்விங் வில் உயனவில் ஒரு மாதத்தைக் கழிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

இங்கு மிகச் சிறந்த சமையற்காரரும், சமையல் கலையைக் கற்றுக்கொடுக்கும் ஆசானுமான முதன்மை சமையற்காரரான மஹேஷ் வன்னியாராய்ச்சியின் கீழ் மேற்கத்திய சமையல் முறைகளைக் கற்றுக்கொண்டான். ஜெயக்குமார் தனது குறுங்கால சமையற் தொழிலில் பல புகழ்பெற்ற சமையல்காரரின் கீழ் பணியாற்றியிருக்கிறான். ஆனாலும், ஒருகாலத்தில் சமையல் விற்பன்னரான கிறிஸ் பொன்னுத்துரையை அவன் விட்டுக்கொடுப்பதாயில்லை. அவரே “எனக்குச் சமையலைக் கற்பித்தவர்” என அடக்கத்தோடு சொல்கிறான்.

ஜனவரி 2021 இல் ஜெயக்குமாருக்கு வேறுவிதமான எண்ணங்கள் தோன்றின. ஜெட்விங் தொழிலைத் துறந்துவிட்டான். கோவிட் பெருந்தொற்றுக் கொண்டுவந்த பயணத்தடைகள் சுற்றுலாத்துறையைச் சீரழித்திருந்தது. புதிதாகக் கற்பதற்கு அவனுக்கு அங்கு ஏதுமில்லை. ஆர்வமும், துணிச்சலும் இன்னும் தளராமல் கொண்டிருந்த அவனது அனுபவத்தை அகலமாக்கவும் ஆழமாக்கவும் கொஞ்சக் காலத்துக்கு வெளிநாடு போவது ஒன்றே சரியெனப் பட்டது.

மீண்டும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வரவேண்டுமென்பதே ஜெயக்குமாரது எண்ணம். ஒரு உணவகத்தை நிறுவி அதன் உரிமையாளராகவும், சமையற்காரராகவும் இருக்கவேண்டுமெனபது அவனது திட்டம். அது யாழ்ப்பாண உணவையும் யாழ்ப்பாணக் கலாச்சாரத்தையும் சேர்த்துத் தரும் ஒரு உயர்தர உணவகமாக இருக்குமென்பதையும் அவன் இப்போதே தீர்மானித்து விட்டான்.

சந்தர்ப்பம், திறமை, அணுகுமுறை ஆகியன ஒரு வசதியற்ற இளைஞனுக்குக் கிடைக்கும்போது அவனால் எவற்றையெல்லாம் சாதிக்க முடியுமென்பதற்கு ஜெயக்குமார் ஒரு சிறந்த உதாரணம். வட மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கை முழுவதிலும், மிகவும் தாழ்மையான ஆரம்பங்களிலிருந்து தளைத்தெழும் விருட்சங்களை உருவாக்க முடியும்.

ஜெயகுமாரோடு தொடர்புகொள்ள விரும்புபவர்களுக்காக அவரது இணைய முகவரி இங்கே தரப்படுகிறது: sinnaththuraijeyakumar@gmail.com


(இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் ஜெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். jekhan@btinternet.com – தமிழாக்கம்: சிவதாசன்)