பெருமைக்குரிய தமிழர்கள் | யாழ். ஜெட்விங் ஓட்டலின் பொது முகாமையாளர் கிறிஸ் பொன்னுத்துரை

பெருமைக்குரிய தமிழர்கள்

ஜெகன் அருளையா

[ஜெகன் அருளையாவின் இக் கட்டுரை டிசம்பர் 23, 2020 ‘லங்கா பிசினெஸ் ஒன்லைன்’ பத்திரிகையில் வெளிவந்த பத்தியின் தமிழாக்கம்]

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தின் காரணமாக 1984 இல் அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து, மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு 2015 இல் திரும்பி வந்து யாழ்ப்பாணத்தின் முதலாவது ஆடம்பர ஓட்டல் ஒன்றை ஸ்தாபித்த ஒருவருக்கு கொடுக்கும் ஒரு பிரியாவிடை இது.

தனது வாழ்வின் ஐந்து வருடங்களை அர்ப்பணித்து யாழ்ப்பாண ‘ஜெட் விங்’ (Jet Wing) ஓட்டலைத் தனது கைவினை முகாமைத்துவத்தினால் உருவாக்கியவர் அந்த மனிதர்.

1983 இல் இனக் கலவரத்தினால் துரத்தப்பட்டவன். எனது பிள்ளைகளை நான் அவுஸ்திரேலியாவில் வளர்த்திருக்கிறேன். அவர்கள் இப்போது வளர்ந்து சுயமாக வாழத் தொடங்கிவிட்டார்கள். எனது தாய்நாட்டுக்கு எதையாவது திருப்பிக் கொடுக்க வேண்டுமென விரும்பியிருந்தேன். 64 வயதில் அச்சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

– கிறிஸ் பொன்னுத்துரை, யாழ். ஜெட் விங் ஹொட்டேல் பொது முகாமையாளர்

1951 இல், கொழும்பில் 8 பிள்ளைகளில், ஏழாவதாகப் பிறந்தவர் கிறிஸ் பொன்னுத்துரை. அவரது தந்தையார் ஒரு பாடசாலை பரிசோதகர் (school inspector). மாற்றலாகி நாடு முழுவதும் அவர் பணிபுரிய நேரிட்டபோதெல்லாம் அவரது குடும்பமும் இடம் மாறிக்கொண்டது. இளம் வயதில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி என்றலைந்து இறுதியாக கொழும்பின் மதிப்பு மிக்க இசிப்பத்தான கல்லூரியில் கிறிஸ் தனது பாடசாலை வாழ்வை நிறைவு செய்தார். அங்கிருந்து அவர் ‘சிலோன் ஹொட்டேல் ஸ்கூலில்’ தனது தொழிற் கலவியைத் தொடங்கினார்.

‘ஹொட்டேல் ஸ்கூல்’ அவரது முதலாவதோ, இரண்டாவதோ அல்லது மூன்றாவதான தேர்வாகக்கூட இருக்கவில்லை என்பதை கிறிஸ் ஒப்புக்கொள்கிறார். உயர்தர வகுப்பில் இரசாயன பாடத்தில் சித்தியெய்த முடியாமையால்தான் அவர் பல்கலைக்கழகம் சென்று எஞ்சினியராகவோ அல்லது டாக்டராகவோ வர முடியவில்லை. இலங்கை விமானப்படையில் இணைவதற்கு மூன்று நேர்முகப்பரீட்சைகளை வெற்றிகரமாகக் கடந்தார். மூன்றே மூன்று வெற்றிடங்களுக்கான தெரிவில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. மீண்டும் ஒருமுறை தோற்றுப்போன கிறிஸ் பெற்றொருக்குத் தெரியாமல் கொட்டேல் ஸ்கூலிற்கு விண்ணப்பித்தார். “சமையற்காரனாக இருக்கப்போகிறாயா?”, “ஏன் உயர்தரப் படிப்பில் மினக்கெட்டாய்”. “ஏன் அக்கவுண்டன்சி செய்யக்கூடாது” என்றெல்லாம் பெற்றோரிடமிருந்து கேள்விகள் கிடைக்குமென எதிர்பார்த்தே அவர் எவருக்கும் சொல்லாமல் ஹொட்டேல் கல்வியைத் தேர்ந்தெடுத்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு பெற்றுக்கொண்ட டிப்ளோமாவுடன், 10,345 தொன் சரக்குக் கப்பலான லங்கா ராணியில் முதன்மை மேற்பார்வையாளர் (Chief Steward) பணியில் இணந்துகொண்டார்.

லங்கா ராணி

பணியாளர்கள், அதிகாரிகளின் மனைவிகள் என 60 பேரைக் கொண்ட கப்பலின் உணவு மற்றும் இணைந்த சேவைகளுக்குப் பொறுப்பதிகாரியாக கிறிஸ் நியமிக்கப்பட்டார். அடுத்த 6 மாதங்கள் கடலிலேயே அவரது வாழ்வு கழிந்தது. முதற் பயணம் இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்குச் சென்று மீண்டும் இலங்கை வருவதாக அமைந்தது.

மூன்று வருடங்கள் தொடர்ந்த கடல்மேல் வாழ்வின் பின்னர், நீர்கொழும்பிலுள்ள பிரவுண்ஸ் பீச் ஹொட்டேலில் இரண்டாம் நிலைச் சமையற்காரராகப் (sous-chef) பதவி கிடைத்தது. பின்னர் தொடர்ச்சியாகக் கிடைத்த பணியுயர்வுகளோடு அவர் ‘பிறைட்டன் றெஸ்ட்’, ‘ரில்லீஸ் பீச்’, ‘வோர்ணெல்ஸ் றீஃப் ஹொட்டேல்ஸ்’ என மாற்றலாகினார். கடைசி இரண்டு பதவிகளும் பொது முகாமையாளர் தரத்திலானவை. 1978 இல் கரோலின் (ராங்கோ) நதானியல் என்பவரை மணம் செய்து தனது சாதனைகளை அவர் மெருகூட்டிக்கொண்டார். இரண்டு ஆண் குழந்தைகள் அவர்களது ஆனந்தத்தை மிகைப்படுத்தினர்.

1983 இனக்கலவரங்களின்போது அவரது வீடும், வேறு பல தமிழர்களின் வீடுகளும், வியாபார நிலையங்களும் எரியூட்டப்பட, 1984 இல் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவிற்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரினார். அப்போது அவரது குழந்தைகளில் மூத்தவருக்கு இரண்டரை வயது மற்றவருக்கு 11 மாதங்கள். ஐ.நா. அகதிகள் அமைப்பின்படி, அது மேற்குலகத்தின் மிகப்பெரிய அகதிகள் இடப்பெயர்வெனப் பெயர்கொண்டது.

அவரது 32வது வயதில், அவுஸ்திரேலியாவில் கிறிஸ் பெற்றுக்கொண்ட முதல் வேலை, மெல்போர்ண் ‘சிலோன் ரீ செண்டரில்’ சமையறை உதவியாளர் பணி. இலங்கையில் ஒரு ஹொட்டேல் முகாமையாளராக, சகல பணிகளையும் நிர்வகித்து வந்த கிறிஸ் அவுஸ்திரேலியாவில் கழிப்பறைகளையும், சமையலறைகளையும் கழுவவேண்டி ஏற்பட்டது. தனது குடும்பத்தை ஓரளவு ஸ்திரப்படுத்திக் கொண்டதன் பின்னர் அவர் மெல்போர்ண் றீஜெண்ட் ஹொட்டேலில் சமையல் பணியில் (cook) இணைந்தார் (1996 முதல் இந்த ஹொட்டேல் ஸோஃபிரெல் மெல்போர்ண் என அழைக்கப்பட்டு வருகிறது) இந்த ‘6 நட்சத்திர ஹொட்டேலின் அப்போதய விருந்தினர்களில் எலிசபெத் ரெய்லர், ஜோன் மக்கென்றோ போன்றவர்களும் அடங்கினர். லிஸ் ரெய்லர் கொண்டுவரும் தனது சொந்தமான மீனுணவுத் தயாரிப்பு மற்றும் அவரது எதிர்பார்ப்புகள், மக்கென்றோவின் பின்னிரவு மாட்டிறைச்சி உணவு ஆகியன இந்த மிகை ஆடம்பர ஹொட்டெலின் விருந்தாளிகளிகளுக்கு அசாதாராணமானவையல்ல.

5 நட்சத்திரங்களுக்கு மேற்பட்ட தகமையுள்ள ஹொட்டேல்களில் சமையல்காரராகவிருந்து முகாமைத்துவ நிலைக்குப் போவதற்கெல்லாம் முன்தீர்மானிக்கப்பட்ட நடைமுறைகளென்று எதுவுமிருக்கவில்லை. இரண்டே வருடங்களில் றீஜெண்ட் ஹொட்டேல் கிறிஸ், 4 நட்சத்திர ‘சத்தோ மெல்போர்ணுக்கு’ கடமை மேலாளராகப் (Duty Manager) பதவியுயர்ந்தார். பி.ப. 2:00 மணி முதல் அதிகாலை 2:00 மணிவரையிலான கடமைக் காலம் அவருக்கு வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்குப் பல பணியாளர் வீடு சென்றதும் அவர்களின் பணிகளையும் சேர்த்தே கிறிஸ் கையாளவேண்டி இருக்கும். இரவு கணக்கு வழக்கைச் சரி செய்வது முதல், பாரில் குடிகாரரிடையே எழும் சண்டைகளைத் தீர்த்துவைக்கும் பணிவரை எல்லாமே அவருடையது தான். நல்ல வேளை சண்டை மிதமீறிப் போனால் ஒரு பொத்தானை அழுத்தியவுடன் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் பறந்து வந்துவிடும் எனபது மட்டும் நம்பிக்கையான ஒன்று.

களைத்துப் போன கிறிஸ் ஹொட்டேல் தொழிலை விட்டுவிட்டு மெல்போர்ண் கேஏஃப்சீ யின் (KFC) முகாமையாளாராகப் பணி மாறினார். இதன் பிறகு, சொந்தமாக ‘தி பெங்கால் டைகர்’ (The Bengal Tiger) என்ற பெயரில் ஒரு உணவகத்தை ஆரம்பித்தார். அவ்வுணவகம் வங்காளத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய இராணுவக் கப்டன் ஒருவரால் முன்னர் நடத்தப்பட்டு வந்தது. கிறிஸும் அப்பெயரிலேயே தொடர்ந்தார்.

தி பெங்கால் டைகர் உணவகம் – மெல்போர்ண், அவுஸ்திரேலியா

இந்த உணவகத்தை நிர்வகிக்கும்போதே கிறிஸ் வரியிறுப்பு, கணக்காள்மை ஆகியவற்றில் கல்விகர்று டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். இதன் பலனாக அவர் அவுஸ்திரேலிய வரித் திணைக்களத்தில் வேலை பெற முடிந்தது. 12 வருடங்களுக்குப் பிறகு, கிறிஸ் தனது 60 களில், வரித் திணைக்கள வேலையிலிருந்து ஓய்வு பெற்றதுமல்லாது தி பெங்கால் டைகர் உணவகத்தையும் விற்றுவிட்டார்.

இவற்றிலிருந்து ஓய்வு பெற்றாலும் கிறிஸினால் உண்மையில் ஓய்வு பெற முடியவில்லை. சவால்களை எதிர்கொள்ளும் பழக்கத்தை அவரால் விட்டுவிட முடியவில்லை. இலங்கையில் போர் முடிந்து 3 வருடங்களுக்குப் பிறகு, 2012 இல், ஜெட் விங் ஹொட்டேல் குரூப் யாழ்ப்பாணத்தில் புதிய ஹொட்டேல் ஒன்றைக் கட்டும் துணிச்சலான முயற்சியை மேற்கொண்டது. ஏழு மாடிகளில், 55 ஆடம்பர அறைகளுடன் கட்டப்பட்ட இந்த ஹொட்டேல் அப்போது யாழ்ப்பாணத்தின் அதியுயர் கட்டிடமாக இருந்தது. இப்போதும், இந்திய அரசினால் உவந்தளிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையம் ஒன்றே இதை விட உயரமானதாக இருக்கிறது. இலங்கையின் சுற்றுலாத் துறையின் பிரபல அடையாளமான ஜெட்விங், போரின் மனவடுக்களைக் களையமுடியாமல் இன்னும் திணறிவரும், அபிவிருத்திகளில் பின்தங்கிய ஒரு சமூகத்தில், ஒரு நம்பிக்கையைத் தரும் மகத்தான செய்தியைச் சொல்லும் ஒன்றாக இருக்கிறது. யாழ். நூலகத்தின் அயலில், யாழ் கோட்டையிலிருந்து 5 நிமிட நடைதூரத்தில், யாழ்ப்பாணத்தின் இன்னுமொரு புதிய கட்டிடமான கார்கிள்ஸ் மோலிற்கு அடுத்ததாக இருக்கும் யாழ்ப்பாண ஜெட்விங், போருக்குப் பின்னான யாழ்ப்பாண நகரத்தின் ஒரு மைல்கல்.

ஒரு ஹொட்டேலைக் கட்டுவதென்பது, உருக்கையும், மண்ணையும், சீமந்தையும், கண்ணாடியையும் பீங்கான்களையும் பொருத்திக்கொள்ளும் ஒரு விடயமல்ல. 2015 இல், 64 ஆவது வயதில், யாழ்ப்பாண ஜெட்விங் ஹொட்டேலின் பொது முகாமையாளராகப் பதவியேற்பதற்கு கிறிஸ் ஒப்புக்கொண்டார். யாழ்ப்பாண நகரின் முதலாவது நவீன ஆடம்பர ஹொட்டேல் ஒன்றை அமைப்பதற்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் சுமை அவரில் விழுந்தது. 2018 இல் யாழ். ரயில்வே நிலையத்துக்கு அருகே அமைக்கப்பட்ட ஆடம்பர ‘நோர்த்கேட் ஹொட்டேலின் (Northgate Hotel) முகாமைத்துவத்தையும் ஜெட்விங்க் இணைத்துக் கொண்டது. தற்போது அது நோர்த்கேட் பை ஜெட்விங் (Northgate By Jetwing) என்ற பெயரில் இயங்குகிறது. இதன் இணைப்பில் கிறிஸ் முக்கிய பங்கை வகித்தார்.

அவுஸ்திரேலிய தரத்தில் ‘பிச்சைச் சம்பளம்’ தரும் ஒரு வேலைக்காக, ஒய்வு பெற்ற வயதில் ஏன் இப்படியான கடுமையான பணியொன்றை எடுக்க இங்கு வந்தீர்கள் என்று நான் கிறிஸிடம் கேட்டேன். “நான் எனது 32 வயதில், 1983 இல் இனக் கலவரத்தினால் துரத்தப்பட்டவன். எனது பிள்ளைகளை நான் அவுஸ்திரேலியாவில் வளர்த்திருக்கிறேன். அவர்கள் இப்போது வளர்ந்து சுயமாக வாழத் தொடங்கிவிட்டார்கள். 64 வயதில் நான் எனத் தாய்நாட்டுக்கு எதையாவது திருப்பிக் கொடுக்க வேண்டுமென விரும்பியிருந்தேன். அவுஸ்திரேலியாவில் ஓய்வு பெற்றுச் சுதந்திரமாக இருந்த எனக்கு அதிர்ஷ்டவசமாக ஜெட்விங் பொது முகாமையாளர் பதவி வந்து சேர்ந்தது” என்கிறார் கிறிஸ்.

கிறிஸிற்குப் பைத்தியம் என அவரது மனைவியும் பிள்ளைகளும் திட்டிக் கொண்டார்கள். அவரால் யாழ்ப்பானத்தில் ஒரு வருடத்தைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாது என அவர்கள் கூறினர். அவர்களைப் பொய்யாக்கி, ஐந்து வருடங்களைக் கிறிஸ், யாழ்ப்பாணத்தில் கழித்து விட்டார். இந்த 5 வருடங்களில் வடக்கின் பல இளைய தலைமுறையினரை இந்த விருந்தோம்பல் தொழிலுக்குக் (hospitality industry) கொண்டு வந்திருப்பது கிறிஸின் சாதனைகளில் ஒன்று. இலங்கை அரசின் தொழில் பயிற்சி அதிகாரசபை (Vocational Training Authority (VTA)) மற்றும் ஜேர்மனி அரசாங்கத்தின் உதவித் திட்டமான GiZ இன் உதவியுடன் வடமாகாணம் முழுவதிலுமிருந்து 500 பேருக்கு வேலை வழங்குவதற்காக ஜெட்விங் விளம்பரம் செய்தது. இதன் பயனாக காரைநகரிலுள்ள தொழிற் பயிற்சிக் கல்லூரியில் 68 பேர் பயிற்சிகளைப் பெற்றார்கள். இவர்களில் 50 பேருக்கு வேலைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 20 பேர், 5 வருடங்களுக்குப் பிறகும் ஜெட்விங்கில் இன்னும் பணி புரிந்து வருகிறார்கள்.

ஜெட்விங்கில் வேலைக்குச் சேர்ந்தவர்களில் 90% மானவர்கள், மீனவ, விவசாயத் தொழிலகளைச் செய்யும் வறிய குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களில் பலர் ஏற்கெனவே இதர தொழில்களை முயற்சித்துத் தோல்வி கண்டவர்கள். இவர்களில் எவரும் மேற்கத்தையை கழிப்பறைகளைக் கண்டிராதவர்கள், சிங்களம் அல்லது ஆங்கிலத்தைப் பேசியிராதவர்கள், ஒரு ஆடம்பர ஹொட்டேலின் அழகு வேலைப்பாடுகளைக் கண்டதோ அல்லது அவற்றின் விருந்தோம்பல்களை அனுபவித்தவர்களோ இல்லை. இவர்களில் இருவரோ அல்லது மூவரோ தான் யாப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் கல்வி கற்றவர்கள். போர், இடப்பெயர்வு, வறுமை, அவமானம் ஆகியன இந்த இளையவர்களின் தன்னம்பிக்கையை முற்றாகவே சிதைத்திருந்தன. யாழ்ப்பாணத்தையும், வடக்கையும் பின்னிழுத்து வைத்திருப்பதே இந்த நம்பிக்கையீனம்தான். இவர்கள் மனங்களில் நம்பிக்கையை ஊட்டுவதே தனது பெரும் சவாலாக இருந்தது என்கிறார் கிறிஸ்.

யாழ்ப்பாணத்தில் வதிய ஆரம்பித்ததிலிருந்து, கடந்த ஐந்து வருடங்களில் நான் ஜெட்விங் உணவகம், மொட்டைமாடி மதுபான நிலையம் ஆகியனவற்றின் வாடிக்கையாளராகியிருந்தேன். கிறிஸின் உழைப்பின் வெற்றியை அப்போதுதான் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஹொட்டேல்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மைகளைக் கொண்டவை. ஆனால் ஜெட்விங்க் அவற்றுள் வசீகரமானது. பணியாளர்கள், கட்டிடம் ஆகியன விருந்தினர்களின் பார்வையில் இதத்தையும், சாந்தத்தையும், நம்பிக்கையையும் தரும் உன்னதமானதொரு கலவை என்பது தெளிவு. பணியாளர் தெரிவு விடயத்தில் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, ” அது பயிற்சியில் தங்கியுள்ளது. ஒரு மூலப் பொருளை எடுத்துத் தேய்த்துத் தேய்த்து மெருகூட்டி வந்தால் அது ஒருநேரத்தில் ஒளிவிடும்” என்கிறார் கிறிஸ்.

ஜெட்விங் பணியாளர், நடுவில் நிற்பவர் கிறிஸ் பொன்னுத்துரை

யாழ்ப்பாணத்துக்கும், வடக்கிற்கும் நீங்கள் தரும் புத்திமதி என்ன என நான் கிறிஸை வினவினேன். அவர் கூறியவற்றில் முக்கியமான சில:

 1. 1. உட்கட்டமைப்பிலும், தொழில்நேர்த்திப் பயிற்சியிலும் முதலீடு செய்ய வேண்டும். இலக்கு வைத்த பயிற்சிகளை (targeted training) அரசாங்கத்தின் தொழிற் பயிற்சிக் கல்லூரி மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக சமையலில் பாவிக்கப்படும் வித்தியாமான பாத்திரங்களையும், கருவிகளையும், அடுப்புகள், சூளைகள் (oven), ஆழ் பொரியலுக்கான உபகரணங்கள் போன்றவற்றைக் கையாளப் பயிற்றவல்ல சமையலறைகளை அங்கு நிறுவ வேண்டும்.
 2. 2. தொழிற்சாலைகள், மென்பொருள் தயாரிப்பு நிறுவனஙகள், சுற்றுலாத் துறை ஆகியவற்றில் தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இங்குள்ள பெரும்பாலானவர்களுக்கு, மீன்பிடி, விவசாயம் ஆகியவற்றுக்குத் திரும்பிச் செல்லும் ஒரே தேர்வுதான் உள்ளது. இதனால் வடக்கின் பொருளாதாரம் பின்னோக்கித்தான் செல்ல முடியும்.
 3. 3. வெளிநாடுகளில் வாழும் தமிழர் தமது அனுபவங்களை இங்கு கொண்டுவந்து இங்குள்ள இளையவர்களைத் தீட்டி மினுக்க வேண்டும். அவர்களுக்கு கல்வியை, பயிற்சிகளை வழங்கி வழிநடத்தி அவர்களைத் திறமையானவர்களாகவும், பிரயோசனமுள்ளவர்களாகவும் உருமாற்றுவதன் மூலம் அவர்கள் தமது சுய தொழில்களைத் தாமே கட்டியெழுப்பி இயக்குவதற்கு உதவி செய்ய வேண்டும்.
 4. 4. முக்கியமாக, வடக்கிலுள்ள மக்கள் தங்களது எண்ணப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • அ) தன்னம்பிக்கையை வளர்த்து, சவால்களை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். சில தொழில்கள் தமது அந்தஸ்துக்குக் கீழானவை எனச் சிந்திப்பதிலிருந்து விடுபட வேண்டும். குறிப்பாக, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் நிறையச் சம்பாதிப்பதற்கும், பயணங்களை மேற்கொள்வதற்கும், திருப்தி தரும் தொழில்வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் நிறையச் சந்தர்ப்பங்கள் உண்டு.
  • ஆ) வெளிநாட்டுப் பணத்தில்தான் வாழ்க்கையை உருட்டலாம் என்ற நம்பிக்கையை உதறித் தள்ளவேண்டும். சொந்தக் கால்களில் நின்று தங்களை நிலைநிறுத்தப் பழகிக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். இங்குள்ளவர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதே வெளிநாட்டுப் பணம்தான், என்கிறார் கிறிஸ்.
 1. 70வது வயதை அண்மிக்கும் கிறிஸ் அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பிச் சென்று அமைதியான வாழ்வை வாழத் தீர்மானித்திருக்கிறார். விரைவில் ஒரு சுற்றுலாவாசியாகத் திரும்பி வரத் திட்டமேதும் உண்டா என்று கேட்டேன். ஒரு புன்முறுவலுடன் கூடிய தோளசைவே அவரது பதிலாக இருந்தது. உளைச்சல்களும், சவால்களும் நிறைந்த ஒரு தொழிலைக் கடந்த ஐந்து வருடங்களாக யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டதின் அசதி அவரில் தெரிந்தது. நன்றாகக் களைத்துப்போயிருப்பார் போலிருக்கிறது.
 2. எங்கள் தேசத்தில் தங்கள், திறமைகளையும், அனுபவங்களையும், நேரத்தையும் முதலீடு செய்பவர்களுக்கு யாழ்ப்பாணம், வடக்கு, இலஙகையிலுள்ள அனைவரும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ் பொன்னுத்துரை போன்ற பலர் இன்னும் வருவார்கள் என நாம் நம்புகிறோம்.
 3. (இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் ஜெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்)