பெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு!

Spread the love

ஜனவரி 21, 2020

Rajinikanth, periyar, rajinikanth periyar remark, rajinikanth periay row, rajini, Tamil Nadu
நடிகர் ரஜனிகாந்த்

ஜனவரி 14 அன்று நடைபெற்ற ‘துக்ளக்’ சஞ்சிகையின் 50 வருட நிறைவு நிகழ்வில் பேசிய நடிகர் ரஜனிகாந்த், 1971இல் சேலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நிர்வாணமான ராமர், சீதை பொம்மைகளைக் கொண்டு சென்றதாகவும், பெரியார் அவர்கள் பாதணிகளை அணிந்தபடியே அப்பொம்மைகளுக்கு மாலைகளை அணிவித்தார் எனவும் துக்ளக்கில் செய்தி வந்ததாகக் கூறியிருந்தது, பெரும் எதிர்ப்பலைகளைக் கிளப்பி வருகிறது.

ரஜனிகாந்தின் பேச்சைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகம் அவர் மீது 6 மானநஷ்ட வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கழகமும் ரஜனிகாந்தின் வீட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்றைச் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தனது பயஸ் கார்டன் வீட்டிற்கு வெளியே ஊடகவியலாளருக்குப் பேட்டியளித்த ரஜனிகாந்த், பல சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இது பற்றி வந்த செய்திகளின் கத்தரிக்கப்பட்ட துண்டுகளையும், சஞ்சிகையில் வந்த செய்திப்பக்கத்தை நகலெடுத்தும் அவர்களுக்கு ஆதாரமாகக் காட்டியதுமல்லாது பெரியார் மீது தான் கூறிய கருத்துக்கள் மீது மன்னிப்புக் கேட்கப் போவதில்லை எனவும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

“இது ‘அவுட்லுக்’, இந்து ஊடகம். 1971 இல் வெளியிடப்பட்ட செய்தியில் ‘பொம்மைகள் நிர்வாணமாக ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்பட்டன” எனக்கூறப்பட்டவற்றையே நான் வாசித்தேன். இதற்காக நான் மன்னிப்புக் கேட்க முடியாது. நான் மரியாதையாக உங்களுக்குக் கூறவிரும்புவது என்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என்பதே” என அவர் தெரிவித்தார்.

கொளத்தூர் மணி உட்படப் பல திராவிடர் கழக உறுப்பினர்கள் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்டதாகவும் அதில் எந்தவொரு இந்துக் கடவுளின் பொம்மைகளும் நிர்வாணமாகக் கொண்டுசெல்லப்படவில்லை எனக் கொளத்தூர் மணி கூறியதாகவும் அதற்குப் பதிலளிக்குமுகமாகவே ரஜனிகாந்த் கூட்டத்தில் அப்படிப் பேசினார் எனவும் அறியப்படுகிறது.

திராவிடர் கழகத் தலைவர்கள் ‘அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை எனக் கூறுகிறார்களே” எனக் கேட்டதற்கு ” அது மறுக்கப்படக்கூடிய அல்லது மறக்கப்படக்கூடிய சம்பவம் அல்ல” என ரஜனிகாந்த் கூறியிருக்கிறார்.

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற அவ்வூர்வலத்தை, அப்போதைய ‘துக்ளக்’ சஞ்சிகையின் ஆசிரியர் சோ, எதிர்த்துத் தனது சஞ்சிகையில் பல கட்டுரைகளை எழுதியிருந்தார் என ரஜனிகாந்த் குறிப்பிட்டிருந்தார். அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அரசு அச்சஞ்சிகையைத் தடைசெய்திருந்தது. அப்படியிருந்தும் சோ திருட்டுத்தனமாக பல்லாயிரம் பிரதிகளை அச்சிட்டு கருப்புச் சந்தையில் விற்றார் எனவும் பேசப்பட்டது.

தனது பேச்சை நியாயப்படுத்த நடிகர் ரஜனிகாந்த் எடுக்கும் முயற்சி பற்றிக் கருத்துக்கூறிய கொளத்தூர் மணி, “ரஜனி அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது அதுபற்றிய ‘துக்ளக்’ பிரதிகளை ஆதாரமாகக் காட்ட வேண்டும். அவர் அடிப்படை நாணயமுள்ளவராக இருந்தால் ‘துக்ளக்’ கின் ஒரிஜினல் பிரதியைக் கொண்டுவந்து காட்ட வேண்டும். ‘துக்ளக்’ குழுவோடு அவர் நெருங்கிய தொடர்புடையவர். அச் சஞ்சிகையை எடுப்பதற்கு அவருக்கு அதிகம் சிரமமில்லை. அதை விட்டுவிட்டு இன்னுமொரு சஞ்சிகையின் நகலைக் காட்டித் தன் பேச்சை நியாயப்படுத்துவது பெரியாரையும் அவர் தமிழ்நாட்டில் முன்னெடுத்த பேரியக்கத்தையும் அவமதிப்பதாகும்” எனத் தெரிவித்தார்.

“இதர பா.ஜ.க. தலைவர்களைப் போலவே, ரஜனிகாந்தும் தனது பிழையான பேச்சுக்காக மன்னிப்புக் கேட்க மறுக்கலாம். ஆனால் அவர் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பை நிலைநிறுத்த வேண்டுமானால், அவர் ஒரிஜினல் ‘துக்ளக்’ பிரதியைக் காட்ட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>