பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக அனுட்டிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட இயக்கத்திந் தந்தை, பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த நாள் இம்மாதம் 17ம் திகதி வருகிறது. அவரின் பிறப்பை மகிமைப்படுத்துவதற்காக அவரது பிறந்த நாளை ஒவ்வொருவருடமும் நினைவுகூருவதற்கு தமிழக அரசு முன்வந்திருக்கிறது.
இந் நாளைச் ‘சமூக நீதி நாளாகக்’ கொண்டாடவுள்ளதாக செப்டம்பர் 6 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“சமூக நீதி, சுய மரியாதை, பகுத்தறிவு, சமத்துவம் ஆகிய சித்தாங்களை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் பெரியார் தான் கடந்த நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர். அதையே நானும் தொடர்ந்து எதிர்காலத்துக்கான பாதையை வகுத்துத் தருவேன்” என ஸ்டாலின் சட்ட சபையில் தெரிவித்தார்.
இன்நாளின்போது, ஒவ்வொரு வருடமும் மாநிலச் செயலகம் உட்பட, அனைத்து அரச அலுவலகங்களிலுள்ள பணியாளர்களும், பெரியாரின் சித்தாந்தங்களான சமத்துவம், சகோதரத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றைப் பின்பற்றுவோமென உறுதிமொழியெடுப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் முதலாவது திருத்தச் சட்டத்தின் மூலம் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவற்கு மூலகாரணமாக இருந்தவர் தந்தை பெரியார் எனபதை முதலமைச்சர் சபையில் நினைவுகூர்ந்தார்.
ஈரோட்டில் 1879ம் ஆண்டு பிறந்த பெரியார் முதலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை ஆரம்பித்தார். பின்னர் தமிழின அடையாளத்தை மீளப் பெறும் பொருட்டு அவர் திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால், 1949 இல் அவரது நண்பர் சி.என்.அண்ணாத்துரை அவரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.
பெரியார் இறந்து 45 வருடங்கள் ஆகியும், தமிழரின் உரிமைகளுக்காகப் போராடிய அவரைத் தமிழ் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தபோது, சபையில் இருந்த பா.ஜ.க. உப தலைவர் நயினார் நாகேந்திரன் அவ்வறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்றதுடன் பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகளை பா.ஜ.க.ஏற்றுக் கொள்வதாகவும், முதலமைச்சரின் அறிவிப்பைத் தாம் வரவேற்பதாகவும் தெரிவித்தார். (பி.டி.ஐ.)