பெயர் மாற்றம் பெறும் தமிழ்நாடு சிறப்பு அகதி முகாம்கள் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!


தமிழ்நாடு மாநிலத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளை வைத்துப் பராமரிக்கும் அகதி முகாம்கள் இனிமேல் ‘ இலங்கைத் தமிழர் புனர்வாழ்வு முகாம்கள் என அழைக்கப்படுமென தமிழ்நாடு முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வெள்ளியன்று (27) சட்டசபையில் இதுபற்றி அறிவித்துப் பேசியபோது ” அவர்கள் அனாதைகளல்ல. அவர்களுக்காக நாம் இருக்கிறோம். இன்றிலிருந்து அவர்கள் வாழிடங்கள் “இலங்கைத் தமிழர் புனர்வாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும்” என முதலமைச்சர் தெரிவித்தார். இம்முகாம்களில் வாழும் தமிழர்களின் நலத் திட்டங்களுக்காக 317.40 கோடி இந்திய ரூபாய்களை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்முகாம்களில் வாழும் தமிழர்களிந் மோசமான வாழ்நிலை குறித்துப் பெறப்பட்ட உள்ளக அறிக்கையைப் பின்னணியாகக் கொண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க முதமைச்சர் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

இத் திட்டத்தின் பிரகாரம் 231.54 கோடி ரூபா செலவில், மிகவும் சீரழிந்த நிலையில் இருக்கும் 7469 வீடுகளைச் செப்பனிட்டுக் கொடுக்கவும், மேலும் 108.81 கோடி ரூபா செலவில் 510 புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் தமிழக அரசு முன்வந்துள்ளது. அத்தோடு இம் முகாம்களில் வாழும் குழந்தைகளுக்குப் பல கல்வி மானிய உதவிகளைச் செய்யவும் அரசு முன்வந்துள்ளது.

ஆனாலும் “இப் பெயர் மாற்றங்களெல்லாம் அரசியல் இலாபங்களுக்காகச் செய்யும் கண்துடைப்பு நடவடிக்கைகள். தி.முக.வின் பங்காளியான காங்கிரஸ் கட்சியினால் வழ்ங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு இலங்கையில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது அது வாய்மூடி வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தது பற்றி இப்போது முதலமைச்சரது இதயத்தில் முள் குத்துகிறது போல” என அ.இ.அ.தி.மு.க. பேச்சாளர் கோவை சத்தியன் அரசின் இந்நடவடிக்கை குறித்து சபையில் ஏளனம் செய்தார்.

“”அகதிகள்” என்ற பெயரை அப்போது இருந்த அவர்களது கூட்டணிதான் கொடுத்தது. தமிழர்களை அகதிகள் என அழைப்பதை நிறுத்திவிடுவதன் மூலம் அவர்களது துன்பங்களோ அல்லது அவர்கள் தாய்நாட்டில் அனுபவித்த கொடுமைகளோ எங்கும் போய்விடாது. இப்படியான கவர்ச்சியான பெயர்களைச் சூட்டுவதாலும், விளம்பரங்களை வடிவமைப்பதாலும் தி.மு.க. ஒரு மகிமைப்படுத்தப்பட்ட விளம்பர நிறுவனம் போலச் செயற்படுகிறது” என கோவை சத்தியன் மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாடு சிறப்பு அகதி முகாம்களில் சமீபத்தில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட 21 ஈழத்தமிழ் அகதிகளின் தற்கொலை முயற்சிகள் பற்றி இரண்டு கட்சியினரும் எதுவும் குறிப்பிடவில்லை.