பெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள்

Spread the love

ஜனவரி 20, 2020

சட்டத்தரணி அஜித் பிரசன்னா

“மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிலிருக்கும் சுனில் ரத்நாயக்கா உட்பட்ட பல இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டால், அவர்களுடன் சேர்த்து சிறையிலிருக்கும் 70 விடுதலைப் புலிகளையும் ஜனாதிபதி விடுதலை செய்யவேண்டும்” என பொதுஜன பெரமுன கட்சியைச் ச்ர்ந்த வழக்கறிஞர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.

கருணா அம்மானும், கே.பி. யும் சுதந்திரமாக நடமாட முடியுமானால் 70 முன்னாள் விடுதலைப் புலிகளும் அதற்கு உரித்துடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

“றோயல் பார்க்’ வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த கோடீஸ்வரர் ஒருவரின் மகனான அந்தோனி என்பவரை முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். இதை எதிர்த்து இருவர் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரியுள்ளனர். ஏனைய மரண தண்டனைக் கைதிகள் இருக்கும்போது அந்தோனி மட்டும் எப்படி மன்னிக்கப்பட்டார்? அது தவறு என்பது உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியும். தற்போது மைத்திரிபால சிறீசேன இவ் வழக்கில் சம்பந்தப்படுகிறார்”

இப்போது ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவும் இதற்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. இன் நாட்டின் நீதிமன்றம் போரில் ஈடுபட்ட இரு பக்கத்தினருக்கும் தண்டனை வழங்கியுள்ளது. சுனில் ரத்னாயக்கா, மேஜர் டிக்சன் ராஜமந்திரி, கோர்ப்பரல் பிரியந்த ராஜகருணா, சமந்தா புஷ்பகுமாரா ஆகியோர் மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் முன்னாள் அங்கத்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நால்வரும் மன்னிக்கப்பட்டால் மேலும் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படும். விடுதலைப் புலி உறுப்பினர்களை ஏன் மன்னிக்க முடியாது? சிங்கள பெளத்தர்களை மட்டுமா நாம் மன்னிக்க வேண்டும்? கருணா அம்மானும், குமரன் பத்மநாதனும் சுதந்திரமாக உலாவ முடியுமானால் அந்த 70 பேரை விடுதலை செய்வதால் நாடு கவிழ்ந்து போய்விடுமா?. எனவே பெப்ரவரி 4 ம் திகதி, இராணுவத்தினருடன் சேர்த்து, முன்னாள் விடுதலைப் புலிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென நான் மாட்சிமை தங்கிய ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கிறேன்” என அஜித் பிரசன்னா நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசும்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>