பெப்ரவரி 04 ஒரு சுதந்திர நாளல்ல, அது ஒரு ‘கரி நாள்’ – சுமந்திரன்
நாடு தழுவிய இயக்கமொன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிப்பு
தமிழ் மக்களைப் பொறுத்தவரை சுதந்திர நாள் ஒரு ‘கரி நாள்’ எனப் பிரகடனப்படுத்துவதன் மூலம் இவ்வருட சுதந்திர நாட் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழ் மக்கள் இன்னமும் தமது நிறைவான சுதந்திரத்தைப் பெறவில்லையன்பதால் தாம் இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக த.தே.கூ. தெரிவித்துள்ளது. பெப்ரவரி 04 ஆம் திகதியை ஒரு ‘கரிநாள்’ எனத் தாம் பிரகடனப்படுத்தவுள்ளதாகவும் தமிழ்ருக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்வரை அத்ற்கான இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும், த.தே.கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“சுதந்திரம் வழங்கப்பட்டவுடனேயே ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும்பான்மை ஆட்சியாக அது மாற்றப்பட்டது. இதனால் தான் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்கள் தமது சுதந்திரத்தைப் பெற முடியவில்லை. பெளத்த – சிங்கள மக்கள் தமது சுதந்திரத்தைப் பெற்றுவிட்டோம் என எண்ணினார்கள். இருப்பினும் அவர்கள் கூட தமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை எனவே எண்ணுகிறார்கள்.
இதனால் தான், பெப்ரவரி 04 ம் திகதியன்று ஜனாதிபதி 75 ஆவது சுதந்திர நாளைக் கொண்டாடுகையில் இந்நாட்டில் வாழும் எவரும் இன்னும் முற்றாகச் சுதந்திரமடையவில்லை என நாம் பிரகடனப்படுத்தவுள்ளோம். எனவே இந்நாள் கொண்டாடப்படுகையில் அதை நாம் ஒரு ‘கரிநாள்’ எனப் பிரகடனப்படுத்துவதோடு நாடு முழுமையான சுதந்திரத்தைப் பெறும்வரை இதை ஒரு இயக்கமாக முன்னெடுக்கவுமுள்ளோம்” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.