India

பெண் ஊடகவியலாளர் அவமதிப்பு: நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை

பெண் ஊடகவியலாளர்களை அவமதிக்கும் வகையிலான சமூக வலைத்தளப் பதிவொன்றைப் பகிர்ந்த காரணத்தால் நடிகரும் தமிழ்நாடு பா.ஜ.க. சட்டசபை உறுப்பினருமான எஸ்.வி.சேகருக்கு சென்னை நீதிமன்றம் ரூ.15,000 அபரதமும் ஒருமாத சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

இவ்விடயத்தில் ஆளுனர்தான் அப்பெண்ணைத் தொட்டதற்காக தனது கைகளை ஃபீனோல் போட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் மிகவும் மலிவான அருவருக்கும் பிறவிகள். தமிழ்நாட்டு ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பலரும் படிக்காத, மலிவான, பொது அறிவே இல்லாதவர்கள். இப்பெண் வித்தியாசமானவரல்லர்

திருமலை சா

2018 இல், அப்போதைய தமிழ்நாடு ஆளுனராக இருந்த பன்வரிலால் புரோஹித் ஒரு பெண் ஊடகவியலாளரது கன்னத்தில் செல்லமாகத் தட்டியதைத் தொடர்ந்து வெளிவந்த முகநூல் பதிவொன்றை சேகர் தன்னுடைய அவமானக் குறிப்புகளுடன் சேர்த்து பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊடகவியலாளர் பாதுகாப்பு நலன்புரிச் சங்கம் செய்த முறைப்பாட்டை அடுத்து சேகர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விண்ணப்பித்தபோது நீதிமன்றம் அதற்கு மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து திங்களன்று (பெப் 19) சென்னை விசேட நீதிமன்ற நீதிபதி ஜி.ஜயவேல் இவ்வழக்கை விசாரித்து மேற்கண்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

பெண் ஊடகவியலாளரது கன்னத்தைத் தட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து ஆளுனர் புரோஹித் மன்னிப்புக் கோரியிருந்தாலும் நடிகர் சேகரின் நண்பரான திருமலை சா என்பவர் அவரது முகநூலில் “அப்பெண்ணின் குறி ஆளுனரும் பிரதமர் மோடியுமே. இவ்விடயத்தில் ஆளுனர்தான் அப்பெண்ணைத் தொட்டதற்காக தனது கைகளை ஃபீனோல் போட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் மிகவும் மலிவான அருவருக்கும் பிறவிகள். தமிழ்நாட்டு ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பலரும் படிக்காத, மலிவான, பொது அறிவே இல்லாதவர்கள். இப்பெண் வித்தியாசமானவரல்லர்” என எழுதியிருந்தார். இப்பதிவு பலராலும் பகிரப்பட்டதுடன் தமிழ்நாட்டின் பெண் ஊடகவியலாளர்கள் படுக்கை தாவுகிறவர்கள் என்பது போலப் பின்னூட்டங்களும் இணைக்கப்பட்டன. “சமீப காலங்களில் பெண் ஊடகவியலாளர்களைத் தரம் தாழ்த்தி அவர்கள் தமது முதலாளிகளுடன் படுக்கையறைகளுக்குச் செல்லாது போகில் அவர்களால் ஊடகவியலாளர்களாக வர முடியாது என்பது போன்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. இதைப்பற்றி ஆளுனரிடம் கேள்விகளைக் கேட்கவே அவர்கள் வந்திருந்தனர்” என அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்பதிவுக்கு ‘மதுரைப் பல்கலைக்கழகம், ஆளுனர், கன்னிப் பெண்ணின் கன்னம்’ என்ற குறிப்பையும் இணைத்து மூன்று பெருவிரல் மற்றும் நான்கு இந்தியக் கொடி இமொஜிகளுடன் நடிகர் சேகர் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். இவ்விடயம் பரவலாகி எதிர்ப்புகள் குவியத் தொடங்கியதும் “இப்பதிவு திருமலை சா வினால் அனுப்பப்பட்டது; அதை வாசிக்காமலேயே தான் பகிர்ந்து விட்டேன்; இப்பதிவின் உள்ளடக்கத்துடன் நான் இணங்கவில்லை; பெண்களையும் பெண் ஊடகவியலாளர்களையும் மதிக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன் நான்” எனக்கூறி சேகர் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

சேகரின் இப்பதிவுப் பகிர்வு காரணமாக அவர் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளார்.