பெண்களில் இருதய நோய் -

பெண்களில் இருதய நோய்

Dr. S.ரகுராஜ், MD
Dr.S.Raguraj, MD

‘இருதய நோய்’ என்று பலராலும் பொதுவாக அழைக்கப்படுவது, தனியே இருதயத்தில் ஏற்படும் நோயல்ல. இரத்தச் சுற்றோட்டத் தொகுதியில் சாதகமற்ற சூழ்நிலை ஏற்படக் காரணமான சகல நிகழ்வுகளும் ஒட்டுமொத்தமாக ‘இருதய நோய்’ என்னும் பதத்திற்குள் குவிக்கப்படுகிறது.

இருதயத்தின் தொழிற்பாடு

உடலுக்குத் தேவையான வழங்கல் தொழிற்பாட்டைச் (distribution system) செய்வதே இருதயத்தின் முக்கிய தொழில். இதைப் பொதுவாக இரத்தச் சுற்றோட்டம் (blood circulation) என அழைப்பர்.

இரத்தச் சுற்றோட்டத் தொகுதியின் முக்கிய அம்சங்களாக, இருதயம், நாடிகள், மற்றும் நாளங்கள் எனப்படும். உயிர் வாழ்தலுக்கு அத்தியாவசியமான உணவையும், அதி எரித்து சக்தியாக்குவதற்கான உயிர் வாயுவையும் (ஒக்சிஜன்), இச்செயற்பாடுகளையெல்லாம் செவ்வனே நிறைவேற்றுதற்குத் தேவையான ஆதார பதார்த்தங்களையும், இச்செயற்பாடுகள் நடைபெறும் கலங்களுக்குக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய்கள் நாடிகள் எனப்படும்.

செயற்பாடு முடிந்ததும் கலங்களிலிருந்து வெளியேறும் கழிவுகளைச் சுத்திகரிப்பு நிலையங்களான சுவாசப்பை போன்றவற்றிற்கு எடுத்துச் செல்லும் குழாய்கள் நாளங்கள் எனப்படும். இம் முழுச் செயற்பாட்டுத் தொகுதியும் இரத்தச் சுற்றோட்டாத் தொகுதி என அழைக்கப்படுகிறது.

இருதய நோய்

இச் செயற்பாடுகளில் குழப்பநிலையை ஏற்படுத்துவதற்குக் காரணமான நிகழ்வுகள் பொதுவாக ‘இருதய நோய்கள்’ எனப்படும். பலதரப்பட்ட இருதய நோய்களில் முக்கியமானவை இருதயத்துக்கும் இதர உறுப்புக்களுக்கும் இரத்தத்தை வழங்கல் செய்யும் நாடிகளில் அடைப்பு ஏற்படுதல் மற்றும் இருதயம் ஒழுங்காகச் செயற்படாமை ஆகியவையாகும். உடல் முழுவதுக்கும் இரத்தத்தைப் பம்ப் செய்யும் இருதயம் இயங்குவதற்கும் உணவும் உயிர்வாயுவும் தேவை. அவற்றை வழங்கும் நாடிகள் இருதய நாடிகள் (coronary arteries) எனப்படுகிறது.

அறிகுறிகளையும் ஆபத்துக் காரணிகளையும் அறிந்து வைத்திருத்தல்

இருதயவியாதி பொதுவாக ஆண்களைப் பீடிக்கும் ஒரு வியாதி ஆனாலும் அமெரிக்காவில் இருதயவியாதியால் பெண்கள் மரணிக்கும் விகிதம் அதிகம்.

பெண்களில் ஏற்படும் இருதய வியாதிகளின் அறிகுறிகள் சில தனித்துவமானவை. பலரும் இவ் வியாதியின் அறிகுறிகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமையும் ஒரு காரணம். எல்லோரது அறிகுறிகளும் ஒருமாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. அறிகுறிகளைச் சரியாக உய்த்துணர்ந்து உரிய காலத்தில் உரிய சிகிச்சையைப் பெறுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

பெண்களில் இருதயவியாதிக்கான அறிகுறிகள்

ஆண்களில் போலவே, பெண்களிலும் நெஞ்சு வலி மற்றும் தசையிறுக்கம் போன்ற அழுத்திப் பிடிக்கும் உணர்வு சில நிமிடங்களுக்கு நீடிக்கலாம். சில வேளைகளில் இடைக்கிடை வந்து வந்து போகலாம். அனேகம் பெண்கள் நெஞ்சு வலியைவிட நெஞ்சில் அழுத்தம், இறுக்கம் போன்ற அறிகுறிகளையே தெரிவிக்கிறார்கள். நெஞ்சு வலி ஏற்படாமலேயே மாரடைப்பு வரலாம் என்பதைப் பெண்கள் அறிந்திருக்க வேண்டும்.

பெண்களில் இருதய வியாதியை அறிவிக்கும் இதர அறிகுறிகள்:
 • கழுத்து, தாடை, தோள், பின் மேல் முதுகு ஆகியவற்றில் வலி
 • வயிற்றுக் கோளாறு (abdominal discomfort)
 • மூச்சிழுப்பு (shortness of breath)
 • ஒரு கையிலோ அல்லது இரண்டு கைகளிலுமோ வலி
 • குமட்டல் அல்லது வாந்தி (nausea or vomiting)
 • வியர்த்தல் (sweating)
 • தலைப்பாரமின்மை அல்லது தலைச்சுற்று (dizziness)
 • அதிகமான சோர்வு (unusual fatigue)
 • சமிபாடின்மை (indigestion)
Related:  முதுமை மறதி (Dementia)

மேற்பட்ட அறிகுறிகள் மாரடைப்பின்போது ஏற்படும் நெஞ்சு வலியைப் போல் மிக மோசமாக இருக்கவேண்டுமென்பதில்லை. இருதய நாடிகளின் சிறு கிளைகளில் ஏற்படும் அடைப்புகள் பொதுவாக மேற்பட்ட அறிகுறிகளைத் தரலாம். இதை சிறு குழாய் இருதய வியாதிகள் (coronary microvascular disease) என்பர்.

பெண்களில் ஏற்படும் இருதயவியாதிக்கான அறிகுறிகள் பெரும்பாலும் ஓய்வாக இருக்கும்போது அல்லது தூக்கத்தில் இருக்கும்போது ஏற்படுகிறது. உணர்ச்சிப் பெருக்கின் போதோ அல்லது மன அழுத்தத்தின்போதோ பெண்களுக்கு இது ஏற்படுவதுமுண்டு.

பெண்கள் தமது அறிகுறிகளை உதாசீனம் செய்வதாலோ அல்லது அதை முற்றாகப் புரிந்துகொள்வதனாலோ பெரும்பாலும் அவர்கள் மருத்துவ மனைக்குப் போகும்போது அவர்களது இருதயம் பழுதடைந்து விடுவதுண்டு. ஆண்களில் வரும் இருதயவியாதியைப் போல் பெண்களில் ஏற்படும் வியாதியை அடையாளம் காண்பது குறைவாக இருப்பதால் உரிய சிகிச்சை உரிய நேரத்தில் பெறப்படுவதில்லை.

மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று உணர்ந்தால் உடனடியாக அவசர சேவைகளை அழைத்து மருத்துவ உதவியைப் பெறுவது அத்தியாவசியமானது. நீங்களாகவோ அல்லது உறவினர் நண்பர்களினது வாகனங்களிலோ மருத்துவமனைக்குப் போவதைத் தவிர்த்துக்கொள்ளவும்.

இருதய வியாதி ஏற்படக்கூடிய ஆபத்துக் காரணிகள்
 • நீரழிவு – நீரழிவு வியாதியைக் கொண்டிருக்கும் ஆண்களை விடப் பெண்கள் இருதய வியாதிக்குள்ளாவதற்குரிய சாத்தியஙகள் அதிகம். அத்தோடு, நீரழிவு உள்ளவர்கள் இருதயவலி ஏற்படும்போது அதை உணர்வதில்லை (silent heart attack) என்பதும் ஒரு காரணம்.
 • மன அழுத்தம் – மன் அழுத்தம், ஆண்களை விடப் பெண்களின் இருதயத்தை அதிகமாகப் பாதிக்கிறது. மன அழுத்தத்தாற் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் இயல்பான வாழ்வியற் (lifestyle) பழக்க வழக்கங்களிலிருந்து பிறழ்வது வழக்கம்.
 • புகைத்தல் – புகை பிடிக்கும் பெண்கள், ஆண்களைவிட அதிகம் இருதயவியாதிக்கு ஆளாகிறார்கள்.
 • குறைவான உடற்பயிற்சி – பெண்கள் ஆண்களைவிட உடற் செயற்பாடு குறைவானவர்கள் எனப் பொதுவான நம்பப்படுகிறது. உடற் செயற்பாடு குறைந்த ஆண்களும் பெண்களும் இருதயவியாதிக்கு ஆளாகிறார்கள்.
 • மாதவிடாய் – மாதவிடாய் நின்றுபோன பெண்களின் ஹோர்மோன் சமநிலை பொதுவாகக் குழப்பநிலை அடைவது வழக்கம். மாதவிடாய் நின்றுபோனதும் எஸ்ட்றோஜென் எனப்படும் ஹோர்மோனின் அளவு குறைந்து போவதால் சிறுகுழாய்களில் ஏற்படும் இருதய வியாதி பெண்களைப் பாதிக்கிறது.
 • கர்ப்பிணிகளில் ஏற்படும் குழப்பநிலைகள் – பெண்கள் கர்ப்பமாகவிருக்கும்போது அவர்களது இரத்த அழுத்தம் அதிகரிப்பதோ அல்லது அவர்களுக்கு நீரழிவு வியாதி ஏற்படுவதோ வழக்கம். இதன் காரணமாகவும் பெண்கள் இருதயவியாதிக்கு ஆளாகிறார்கள்.
 • குடும்ப சரித்திரம் – ஏற்கெனவே குடும்பத்தில் வேறொரு பெண்ணொருவருக்கு இளமையில் இருதய வியாதி வந்திருப்பின் அக் குடும்பத்திலுள்ள இதர பெண்களும் அவதானமாகவிருப்பது நல்லது.
 • வாதம் – முடக்கு வாதம் (Rheumatoid arthritis), லூபஸ் (lupus) உள்ளவர்களுக்கு இருதய வியாதி ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம்.
Related:  பக்க வாதம் (stroke) - பாகம்2
வயது ஒரு காரணமா?

இல்லை. இருதய வியாதி வயது வந்த பெண்களை மட்டும் தாக்குவதில்லை. எனவே சக வயதுப் பெண்களும் மிகவும் கவனத்துடன் அறிகுறிகளைக் கையாள வேண்டும். குறிப்பாகக் குடும்பத்தில் வேறு யாராவது இருதய வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது 65 வயதுக்கு உட்பட்டவர்களோ, கட்டாயம் முறையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்தேயாக வேண்டும்.

இருதய வியாதியால் பீடிக்கப்படுவதைக் குறைக்கப் பெண்கள் என்ன செய்யலாம்?
 • புகைத்தலைத் தவிர்க்க வேண்டும்
 • ஒரு நாளைக்கு அரை மணித்தியாலமாவது தேகாப்பியாசம் செய்ய வேண்டும்
 • ஆரோக்கியமான உடல் எடையைப் பேண வேண்டும் (BMI 25க்கும் குறைய மற்றும் இடுப்பின் அளவு 35 அங்குலங்களுக்கும் குறைய இருக்க வேண்டும்)
 • ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும்
 • மன அழுத்தம் தராத வாழ்வியலைப் பேண வேண்டும்
 • மதுவைக் கட்டுப்பாட்டுடன் அருந்த வேண்டும்
 • சிகிச்சை பெறின் அதை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்
 • வேறு வியாதிகள் இருப்பின் அவற்றையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே, இருதய வியாதிக்கான சிகிச்சை முறைகளில் வேறுபாடுண்டா?

பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிகிச்சை முறை ஒரே மாதிரியானது தான். மருந்துகள், பலூன்களால் குழாய்களை விரித்தல் (angioplasty) மற்றும் ஸ்டெண்ட் வைத்தலும்(stenting) , மேலதிக இரத்தக் குழாய்களை இணைத்தல் (coronary bypass surgery) போன்றவை பொதுவானவை. ஆனாலும் மேலதிக இரத்தக்குழாய் இணைப்பு பெண்களில் சில வேளைகளில் சிக்கல்களை ஏற்படுத்திவிடுவதுமுண்டு.

இருப்பினும் இருதயவியாதி வருவதைத் தடுப்பதற்கு ஆண்களுக்கு வழங்கப்படும் ஸ்டட்டின் (statin) மருந்து வகைகளைப் பெண்களுக்குப் பரிந்துரைப்பது குறைவு. (இவ்வகை மருந்துகளினால் இரு பாலாருக்கும் ஒரே விளைவுகள் தான் ஏற்படுகின்றது)

இருதய வியாதி வந்தவர்களும் பரிந்துரைக்கப்பட்ட அப்பியாசங்களைச் செய்வதன் மூலம் இருதயத்தின் செயற்பாட்டை ஓரளவு மீட்டெடுக்க முடியும். ஆனாலும் பெண்கள் ஆண்களைவிட இவ்வகையான அப்பியாசங்களுக்கு அனுப்பப்படுவது குறைவு.

ஆஸ்பிரின் மாத்திரை பாவித்தல்

ஒரு தடவை மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதென்றால் உங்கள் மருத்துவர் பொதுவாக பலம் குறந்த ஆஸ்பிரின் (81mg) உட்கொள்ளும்படி பரிந்துரைப்பார். இரத்தம் இறுக்கமாகாமல் சிறு தடைகளையும் தாண்டி இலகுவாக ஓடுவதற்கு இது உதவி செய்கிறது. ஆனால் சிறு காயங்கள் ஏற்படும்போது இரத்தம் உறையாமல் இரத்தப்பெருக்கு ஏற்படும் ஆபத்தும் இதனால் ஏற்படும் சாத்தியங்களுமுண்டு. எனவே முன்னர் மாரடைப்பு வராத பெண்கள் தினமும் ஆஸ்பிரின் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்பிரின் எடுக்க விரும்புபவர்கள் மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)