பெகாசஸ் | சீமான், திருமுருகன் காந்தி உட்படப் பல திராவிட இயக்கத் தலைவர்கள் வேவு வலையில் – ‘The Wire’

உலகின் பல அரசியல் தலைவர்களைப் பின்தொடர்ந்து அவர்களது நடவடிக்கைகளை அவதானிக்கிறது எனக் கூறப்படும் இஸ்ரேலிய மென்பொருளான ‘பெகாசஸ்’ (Pegasus) பற்றி முதன் முதலில் தகவலை வெளிக் கொணர்ந்த ஊடக நிறுவனமான ‘தி வயர்’ மேலுமொரு அதிர்ச்சி தரும் செய்தியை வெளிக்கொணர்ந்துள்ளது.

ஜூலை 27 அன்று பிரசுரமான அதன் பதிப்பில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘மே 17 இயக்கம்’ திருமுருகன் காந்தி, திராவிட கழகம் குமரேசன், தந்தை பெரியார் திராவிட் கழகம் கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் பெகாசஸ் மென்பொருள் பிரயோகத்தால் வேவு பார்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. ‘தி வயர்’, தனது சர்வதேச ஊடகப் பங்காளிகளுடன் சேர்ந்து இவ் வேவு நடவடிக்கை பற்றி அம்பலப்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை இவ்வேவு வலையில் சிக்கிய 155 பேர்களின் பெயர்களை அது வெளியிட்டுள்ளது.

மோடி அரசு இந்த ‘பெகாசஸ் வேவு வலையை’ப் பாவித்து தன்னுடைய அரசியல் எதிரிகளை வேவு பார்க்கிறது எனச் சில நாட்களுக்கு முன்னர் ராஹுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்துத்வா சித்தாந்தத்தை விமர்சிப்பவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதற்கு இஸ்ரேலிய அரசு தனது வேவு நடவடிக்கைகளுக்காக உருவாக்கிய இந்த மென்பொருளை மோடி அரசு பாவிக்கிறது என்பது பரவலான குற்றச்சாட்டு.

இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட NSO Group எனப்படும் நிறுவனம் தயாரித்த இம் மென்பொருள் ஒருவரது ‘ஸ்மார்ட் ஃபோனில்’ குடிகொண்டிருந்துகொண்டு அந்த ஃபோனின் உரிமையாளர் செல்லும் இடம், அவர் சந்திக்கும் நபர்கள், அவர்கள் மேற்கொள்ளும் உரையாடல்கள் போன்ற தகவல்களைச் சேகரித்து உடனுக்குடன் ‘தலைமையகத்துக்கு’ அனுப்பிவிடும்.

NSO குழுமம், அரசியல்வாதிகளை மட்டுமே இலக்கு வைத்து தகவல்களைச் சேகரிக்கிறது என்பதல்ல. விஞ்ஞானிகள், தொழில் முகவர்கள், இராணுவ அதிகாரிகள், எனப் பலதரப்பட்டவர்களினதும் நடமாட்டங்களை இவ்வேவு மெந்பொருள் சேகரிக்கிறது. இத்தனையும் செய்வதற்குNSO குழுமத்திற்குத் தேவையானது ஒருவரது தொலைபேசி இலக்கம் மட்டுமே.

இப் பெகாசஸ் மெந்பொருளின் வேவு நடவடிக்கைகளைப் பற்றிய விசாரணைகளை ‘தி வயர்’ மற்றும் அதன் சர்வதேச ஊடக பங்காளிகளுடன் இணைந்து ‘தி பெகாசஸ் புரொஜெக்ட்’ என்ற பெயரில் செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் 37 கைத்தொலைபேசிகளை ஆராய்ந்ததில் இத் தொலைபேசிகளில் உரையாடலை மேற்கொண்டு சில விநாடிகளில் இத் தொலைபேசி உரிமையாளர்களின் பெயர்கள்NSO குழுமம் சேகரிக்கும் பெயர்ப் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுகின்றன எனக் கண்டறிந்துள்ளனர். ஒருவரைப் பற்றி தகவல் சேகரிக்கவேண்டுமானால் அவரது பெயரைNSO Group பட்டியலில் சேர்த்துவிட்டால் அவரைப் பற்றிய தகவல்களை அந்நிறுவனம் சேகரித்துக் கொடுக்கும்.

மோடி அரசு இஸ்ரேலுடன் அரசியல் ரீதியாக மிக நெருக்கமாக இருப்பதால் இவ்வேவு நிறுவநத்தின் சேவைகளை மோடி அரசு தனது அரசியற் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நடிகை கங்கானா ரெணோ சமீபத்தில் தனது ருவீட் மூலம் கிண்டலடித்திருந்தார்.

டிசம்பர் 2020 இல், ரொறோண்டோ பல்கலைக் கழகத்தில் இயங்கும் வேவு ஆராய்ச்சி அமைப்பானCitizen Lab வெளியிட்ட அறிக்கையில் அரச உளவு நிறுவனம் எப்படி ‘பெகாசஸ்’ மென்ருளைப் பாவித்து 36 ‘அல் ஜசீரா’ ஊடகவியலாளரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்டது என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளை, செல் பேசி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர் பற்றிய விபரங்களை சேகரித்து வைக்கவென HLR (Home Location Register) ஒரு டிஜிட்டல் பதிவேட்டைக் கையாள்கின்றன. அதே வேளை இரண்டு செல் பேசி நிறுவனங்கள் தம்மிடையே இத் தகவல்களைப் பரிமாற SS7 எனப்படும் பாதுகாப்பான பொறிமுறையொன்றைப் பாவிக்கின்றன. இஸ்ரேலிய தயாரிப்பான பெகாசஸ் இந்த SS7 ஐ ஊடறுத்து தகவல்களைத் திருடுகிறது என பெகாசஸ் ப்ரொஜெக்ட் சந்தேகப்படுகின்றது.

தனது பெயர் வேவுப் பட்டியலில் இடம் பெற்றமை பற்றித் தான் ஆச்சரியப்படாவிட்டாலும் இத் தகவல்களை அவர்கள் பெறும் முறை தன்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது என சீமான் தெரிவித்துள்ளார். “என்னைப் பொறுத்தவரையில் நான் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. வெளியில் பேசுவதையே நான் பிரத்தியேகமாகவும் பேசுகிறேன். ஒரு அரசாங்கம் தனது மக்களைச் சந்தேகப்படுகிறதானால் அது தான் நேர்மையற்ற முறையில் எதையோ மறைக்க முயல்கிறது” எனச் சீமான் தெரிவித்தார்.