News & AnalysisUS & Canadaமாயமான்

பூர்வகுடிகள் விவகாரம்: ‘ஐயாத்துரை’ மன்னிப்புக் கேட்டார்!


மாயமான்

பாவம் ‘ஐயாத்துரை’க்குக் காலம் சரியில்லை. ஒரு தடவை எக்லிங்டன் தெரு தெலுங்குச் சாமியார் ஒருவரிடம் கூட்டிக்கொண்டுபோய் கையில் ‘மந்திரித்த’ நூலைக் கட்டிவிடுவது நல்லது. அதைப் படமாக எடுத்து அடுத்த தேர்தலுக்கும் பாவிக்கலாம்.

வாக்காளர்களை முட்டாள்களாக நினைப்பது அநேகமாக உலக அரசியல்வாதிகளுக்கு எல்லாம் உள்ள பொதுவான குணம். இலங்கை முதல் அமெரிக்காவரை அது சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் கனடா கொஞ்சம் வித்தியாசம் தான். அதுக்கு 3 இலட்சம் தமிழர்தான் காரணமென்று யாராவது ஆய்வறிக்கை விட்டுவிடமாட்டர்கள் என்று நம்புகிறேன்.

நம்ம பொஸ்ஸு ட்றூடோடாஸு’ ஐயாத்துரை அவசரம் அவசரமாக, பசில் ராஜபக்ச ஸ்டைலில் கொண்டுவந்த அதிரடித் தேர்தல் மேற்படி ‘முட்டாள் தியறி’ யின் பிரகாரமே நடந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்துக் கருத்துக்கணிப்புகளும், ஊடகக் கருத்துக்களும் ஒன்றைக் கூற ஐயாத்துரை தன் பாட்டுக்கு தேர்தலை அறிவித்து, விழுந்தெழுந்து, வியர்வை ததும்ப ‘மீசையில் மண்படவில்லைத் தானே’ என்று வீரப்பிரதாலத்துடன் வெற்றித் தடியைச் சுழற்றிக்கொண்டு ‘மக்கள் ஆணையிட்டு விட்டார்கள்’ என்று தெருவெல்லாம் சுற்றி மக்கள் கைகளை வலுவாக இழுதெடுத்துக் குலுக்குவது எந்த ரகம்? சரி போகட்டும்..

பூர்வகுடிகளுக்கு செய்யப்பட்ட அநியாயங்களுக்குப் பரிகாரம் தேடுமுகமாகப், பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக செப்டமபர் 30 ம் திகதியை தேசிய விடுமுறை நாளாக அறிவித்தமைக்காக ஐயாத்துரைக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அதே வேளை அன்றைய நாளில் அம்மாவின் கரங்களை இறுகப்பற்றிக்கோண்டு ரொஃபீனோ நதி தீரத்தில் ஒய்யாரமாகப் போய்க்கொண்டிருந்தது நியாயமில்லைத் தான். அலுவலகத்தில், “ஒட்டாவா நகரில் பூர்வகுடி விவகாரம் பற்றிப் பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்” எனப் பதிவிட்டுவிட்டு ரொஃபீனோ நதிக்கரையில் கும்மாளமிட்டது படு பிழை. இத்தனைக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 215 குழந்தைகளைப் பறிகொடுத்த பூர்வகுடியினரின் அழைப்பை (இரண்டு தடவைகள்) நிராகரித்துவிட்டு அதே மாகாணத்தில் இன்னுமொரு இடத்தில் விடுமுறையைக் கொண்டாடுவது படு அநியாயம். ரொஃபீனோ கும்மாளம் தமக்கு வேதனை தருவதாக பூர்வகுடிகளின் தேசியத் தலைவர் ஆர்ச்சிபோல்ட் தெரிவித்திருக்கிறார்.

கனடிய பூர்வகுடிகளின் தேசியத் தலைவர் ஆர்ச்சிபோல்ட் (Image Credit: Global News)

பொய் சொல்வதற்கும், பூசி மெழுகுவதற்கும் ஐயாத்துரை மகா கெட்டிக்காரர். தன்னுடைய பிரச்சினைகளை வேறு யார்ன் தலைகளிலாவது ஏற்றிவிட்டுத் தப்பிக்கொள்ளும் வல்லமையை அவரது ஜாதகம் கொடுத்திருக்க வேண்டும். எஸ்.என்.சீ. லவலன் விடயத்தில் இரண்டு, மூன்று தலைகளைப் பலி கொடுத்துவிட்டுத் துரை தப்பியிருந்தார். தேர்தல் முடிவுகளின் பின்னர் அவரதௌ தலையைக் கேட்டு யாரும் முன்வரவில்லை; துரை தப்பிவிட்டார். இப்போது பூர்வீக குடிகள் விடயத்தில் ஐயா தடாலென்று விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இந்தத் தடவையும் அவரது மீசையில் நிச்சயம் மண் பட மாட்டாது. அவர் எழுந்து எதுவுமே நடைபெறவில்லை என்பதுபோல் எகத்தாளமான சிரிப்புடன், துடிப்பான நடையுடன் மக்கள் முன் பவனி வரப்போகிறார். ‘யாரிலும் தவறிலை, யாவரும் கேளீர்’ என மக்கள் அவரை மன்னித்து விடுவார்கள்.

நினைவுக் கூட்டங்களில் பங்குபற்றும்படி அழைப்பை விடுத்த பூர்வகுலத் தலைவர் றோஸான் காசிமிருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு / மன்னிப்புக் கோருதலுடன் விவகாரம் முடிவுக்கு வந்தது. இது ஒரு ‘ஹொலோகோஸ்ட்’ விவகாரமாக இருந்திருப்பின் ‘ சோஃபீ டார்லிங், ரொஃபீனோவுக்கு அடுத்த வாரம் போகலாம். இது முக்கியமான சமாச்சாரம்’ என்று விட்டு, கருப்பு சூட்டுடன் மேடையில் விக்கி விக்கி அழுதிருப்பார் நம்ம ஐயாத்துரை.

அதுதான் கனடிய ஐயாத்துரைகளின் 200 வருட கால ஒழுக்க வரலாறு. உலக மீளொழுங்கை இயற்கை மீளஸ்தாபிக்கும் வரைக்கும் அதற்கு நாம் பழகிக்க் கொள்ள வேண்டியதுதான்.