EntertainmentSri Lanka

பூமி ஹரேந்திரன் | இலங்கையின் முதல் பால்மாற்றம் (transgender) பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்


கொழும்பு ஜூலை 18, 2020: இலங்கையின் ஊடக வரலாற்றில், தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியொன்றை நடத்தும் முதலாவது பால்மாற்றம் பெற்ற பெண்ணெனும் பெருமையைப் பெறுகிறார் பூமி ஹரேந்திரன்.

பூமி ஹரேந்திரன்

லங்காதீப பத்திரிகையால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ‘அரசியல் கதை’ (Politikal Katha) எனத் தலைப்பிடப்பட்ட இன் நிகழ்ச்சி வெள்ளியன்று (நேற்று) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடும் முறையில் அமைந்த இந் நிகழ்ச்சியின் முதலாவது அதிதியாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா கலந்துகொண்டிருந்தார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக இந் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

இதுபோன்று பல சூடான உரையாடல்கள் நிகழ்ச்சிகள் இலங்கை ஊடகங்களிலும், யூ டியூப் சனல்களிலும் வெளிவருகிறது எனினும், பூமி ஹரேந்திரன் இறுக்கமான கலாச்சாரச் சூழலை உடைத்துக்கொண்டு வரும் புதிய தலைமுறையினர் என்ற வகையில் அவரது நிகழ்ச்சிக்கு பார்வையாளர் அதிகம் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பெளத்த சிங்களத் தேசிய ரசிகர்கள் மத்தியில் இவரது நிகழ்ச்சி வரவேற்கப்படுமா என்பது கேள்விக்குறியேயாயினும், நகர்ப்புற ரசிகர்களுக்கு அது ஆச்சரியத்தைத் தரமாட்டாது.

பூமி ஊடக வட்டங்களில் பெருமளவு அறியப்பட்டவர். இலங்கையின் மாற்றுப்பாலின சமூகத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயற்பட்டாளராகவிருப்பவர். HIV தடுப்பு செயற்பாடுகளில் தொண்டராகப் பலகாலம் செயற்பட்டு வருபவர். பாலின விடயங்களில் விளிம்புநிலையில் வாழும் மக்களின் பேச்சாளாராக இருப்பவர்.



பூமியின் சாதனைகளில் முக்கியமான் ஒன்றாகக் கருதப்படுவது, பாலின மாற்றம் பெற்றவர்கள் சட்ட ரீதியாகத் தமது பாலினத்தைப் பதிவு செய்வதற்கான சட்டத்தை 2016 இல் பாராளுமன்றம் மூலம் அறிவித்தமை. இலங்கையில் HIV , பாலியல் காரணமாகப் பரவும் தொற்றுநோய்கள் ஆகியவற்றின் ஒழிப்பில் முக்கிய பங்காற்றியமை.

பூமி, தற்போது இலங்கையின் தேசிய மாற்றுப்பாலின வலையமைப்பின் நிர்வாகப் பணிப்பாளராகவுள்ளார். அதே வேளை பிராங்கிபாணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விருதையும் பெற்றிருக்கிறார்.