Sri Lanka

புல்மோட்டை காணி அபகரிப்பில் பிக்குகள் அட்டகாசம்

தமிழரசுக்கட்சியினர் பிரதேச மக்களுடன் சந்திப்பு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள் எனக்கூறி இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் பலவந்த காணி அபகரிப்பு செய்யப்படுவதை எதிர்த்து பொல்மோட்டை மக்கள் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் இம் மக்கள் போராட்டங்களையடுத்து தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் சாணக்கியன், சுமந்திரன் மற்றும் குகதாசன் ஆகியோர் அக்கிராம மக்களைச் சந்தித்துள்ளனர்.

கடந்தவாரம் நடைபெற்ற சம்பவமொன்றில் பிக்கு ஒருவர் பொதுமக்களைத் தாக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இக்காணி அபகரிப்பு தொடர்பாக மக்களின் எதிர்ப்பு அதிகரித்துவந்த காரணத்தால் தொல்லியல் திணைக்களம் அக்கடமையைப் பிக்குகளிடம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது இப் பிக்குகளுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச சபைப் பிரிவில் காணி அபகரிப்புகள் அதிகரித்து வருகின்றன எனவும் இதில் பொதுமக்களுக்கு அஞுகூலமாக இருக்கக்கூடிய சட்டங்களையும் புறக்கணித்து இப் பிக்குகள் தமது அடாவடித்தனத்தைக் காட்டுகின்றனர் எனவும் பொதுமக்கள் விசனம் தெர்வித்துள்ளனர்.

காணிகளுக்கான உறுதிகள் மற்றும் பேர்மிட்டுகள் இருந்தும்கூட பெரும்பாலான பொதுமக்களது காணிகள் அபகரிக்கப்பட்டோ அல்லது அபகரிக்ககப்டும் நிலையிலோ இருக்கிறது எனத் தமிழரசுக்கட்சி பா.உ. எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வபகரிப்புக்கான உத்தரவை தொல்லியல் திணைக்களம் பிக்குகளிடம் கொடுத்திருப்பதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்திற்கும் வெளி உலகுக்கும் தாம் தெரியப்படுத்தவுள்ளதாகவும், புதுவருடக் கொண்டாட்டங்கள் முடிவுற்றதும் ஜனாதிபதி விக்கிரமசிங்க இவ்விடயம் தொடர்பாகக் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் காணி அபகரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன எனவும் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு அவர்கள் எதிர்நோக்கும் பாரிய அபாயத்தைத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டுமெனவும் பா.உ. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்னரும் இக்குறிப்பிட்ட பிக்கு வேதுச்சேனையில் காணி அபகரிக்க முற்பட்டபோது மக்களால் துரத்தப்பட்டவர் என்பதையும் சாணக்கியன் நினைவுகூர்ந்தார். நல்லிணக்கம் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தும் வேளையில் முகுது மஹா விகாரை மற்றும் புல்மோட்டை பகுதிகளில் காணி அபகரிப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளமை விசித்திரமாக உள்ளது என சாணக்கியன் மேலும் தெரிவித்தார். (படம்: சிலோன் ருடே)