Opinionசிவதாசன்

புலி வருகுது…புலி வருகுது…

சிவதாசன்

ரணிலாருக்குப் பிரதமர் கிரீடம் வழங்கப்பட்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத விதத்தில், எதிர்பாராத வேகத்தில் சட்டுப் புட்டென்று சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. இதன் சூத்திரதாரி யார், இனிமேல் என்ன நடக்கப் போகிறது என்பது பெரி மேசன் மர்ம நாவலில் வருவது போல் இருக்கிறது. அல்லது “இரண்டு கண்கள் பற்றை மறைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தன – மிகுதி அடுத்த வாரம்” என அத்தியாயத்தை முடிக்கும் கல்கியின் பாணியில் இருக்கிறது.

இந்த முடிச்சுக்களை அவிழ்ப்பதானால் ஒருவர் முதலில் ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிப் படித்திருக்க வேண்டும். சேர்ச்சிலை எனக்கு அறவே பிடிக்காது ஆனால் இரண்டாம் உலகப் போரில் அவர் ஸ்டாலினை உள்ளிழுத்த முறை வரலாற்றில் முக்கியமானது. ஹிட்லரை நேசப்படைகள் தோற்கடித்தமைக்கு ஸ்டாலினின் பங்களிப்பு மிக முக்கியமானது. இப்போது ரணிலை சேர்ச்சிலுடன் ஒப்பிடுவது பல வழிகளில் பொருத்தமானது என்று நானும் கருதுகிறேன்.

இறுதிப் போருக்கு முன்னர் ஒரு தடவை ரணில் பயணம் செய்த விமானமொன்றில், பயணம் செய்த கனடியத் தமிழர் ஒருவரிடம் சொல்லியிருந்தாராம் “போய் உங்கட நண்பர்களுக்குச் சொல்லும் எல்லாம் கெதியில முடியப் போகுதெண்டு”. அப்போது அதை என்னால் நம்பவோ, கிரகித்துப் பார்க்கவோ முடியவில்லை. புலிகளின் பலம் அப்படியிருந்ததென எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்த காலம் அது. ரணிலின் தந்திரமான காய் நகர்த்தல்களில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று கருணா அம்மானின் பிரிவு. ஆனால் அதற்கு முன்னர் பல தடவைகள் அவர் தனது தந்திரங்களைப் பாவித்து வெற்றிகண்டுமிருக்கிறார். ஆனால் அதுவெல்லாம் தமிழருக்கு எதிரானவையென்றோ அல்லது சுயநலத்தின் பேரில் செய்யப்பட்டவையென்றோ கூறுவதற்கான ஆதாரங்களுமில்லை.

ராஜபக்சக்களைப்போல் ரணில் விக்கிரமசிங்க குறுக்கு வழியில் பணம் சேர்க்க அரசியலைப் பாவித்தார் எனவும் கூற முடியாது. ஆனால் ஒப்பீட்டளவில், ராஜபக்சக்களை விட நாட்டின்மீது அக்கறை கொண்டவர் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. அதற்காக அவர் எந்தப் பேயுடன் எப்போ சேரவேண்டும், எப்போ அதைக் கழற்ற வேண்டும் என்ற குறுக்குவழிகளை அறிந்துகொணடவராகவும் அவற்றைப் பிரயோகப்படுத்துவதில் நரியின் தந்திரங்கள் அனைத்தையும் கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.

ராஜபக்சக்கள் 2015 இல் தூக்கியெறியப்பட்டு, நல்லாட்சியில் சிரிசேனவுடன் சதா பிடுங்குப்பட்டு பின்னர் ஆட்சியை மட்டுமல்ல பாராளுமன்ற ஆசனததையும் இழந்த பின்னரும் ராஜபக்சக்களைப் போல வெளிநாடுகளுக்கு ஓடிவிடாமல், எந்தவித கசப்புகளுமின்றி தொடர்ந்தும் நாட்டின் மீதும் அதன் மக்களின் மீதும் அக்கறையோடு, கேட்பாரில்லாதவிடத்தும், அவ்வப்போது ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டிருந்தவர் ரணில். ராஜபக்சக்களோ தொடர்ந்தும் தமது இயலாமைகளுக்கு அவர் தலை மீதே பழிகளைப் போட்டு வந்தனர். இருப்பினும் அவர் தனது ஆட்சி பறிபோனதற்கோ அல்லது பதவி பறிபோனதற்கோ சிறிசேன மீதோ அல்லது ராஜபக்சக்கள் மீதோ பழி கூறாது வாயை மூடிக்கொண்டிருந்தார். அந்த விடயத்தில் அவர் எப்போதும் ஒரு ‘ஸ்டேட்ஸ்மன்’ ஆகவே தன்னைக் காட்டி வருபவர்.

இப்போது அவர் ராஜபக்சக்களிடம் தஞ்சம் அடைந்திருப்பதும் அவருடைய தந்திரத்தின் இன்னுமொரு வெளிப்பாடு. இதுவும் நாட்டின் மீதுள்ள அக்கறையால் தான் என நம்பவேண்டியிருக்கிறது. #கோதாகோகம போராட்டக்காரர்கள் மீது கைவைக்க மாட்டேன் என அவர் உறுதியளித்திருப்பதன் பின்னால் இப்படியொரு தந்திரமும் இருக்கிறது. இதற்கு இரண்டு உதாரணங்களை முன்வைக்கலாம்.

ஆகஸ்ட் 28, 1963 இல் அமெரிக்க கறுப்பின மக்களின் குடியுரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்க் வரலாற்றில் பிரபலமான வாஷிங்கடனுக்கான நெடும் பயணத்தை அலபாமாவிலிருந்து ஆரம்பித்தார். பேர்மிங்கம், அலபாமாவில் உரிமைப் போராட்டக்காரர் மீது வெள்ளை இன வெறியர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு நீதிவேண்டி இந் நெடும்பயணம் முன்னெடுக்கப்பட்டது. 250,000 உரிமைப் போராட்டாக்காரர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சத்தில் அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜோன் எஃப் கென்னெடி போராட்ட அமைப்பாளர்களிடம் ஊர்வலத்தைக் கைவிடுமாறு கேட்டுப் பார்த்தார். டாக்டர் கிங்கும் அவரது நண்பரான ரண்டொல்ஃபும் அதற்கு மறுத்துவிட்டனர். கென்னெடிக்கு இப்போது இரண்டு வழிகளே இருந்தன. ஒன்று ஊர்வலத்தைத் தடைசெய்வது மற்றது அவர்களை வரவேற்று உபசரித்து அனுப்புவது. ஜனாதிபதியின் தம்பி ரோபேர்ட் எஃப் கென்னெடி அப்போது சட்டமா அதிபராக இருந்தார். அவரது ஆலோசனையின் பேரில் ஊர்வலத்தில் வருபவர்களுக்கு உணவு, மலசலகூட வசதிகளைச் செய்து உபசரிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. அங்குதான் உலகப் பிரசித்திபெற்ற “I have a dream” பேச்சை டாக்டர் கிங்க் நிகழ்த்தினார். வன்முறை எதுவுமில்லாதது மட்டுமல்ல ஊர்வலத்தின் நோக்கமும் நிறைவேறவில்லை.

இதே போன்று தனிச்சிங்களச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் கச்சேரியை நோக்கி தமிழரசுக்கட்சியும் ஒரு ‘நெடும் பயணத்தை’ ஒழுங்குசெய்திருந்தது. அப்போது சிறிமாவோ பண்டாரநாயகா பிரதமராக இருந்தார். ஊர்வலத்தை அனுமதிக்கக்கூடாது என சிங்கள தீவிரவாதிகள் அழுத்தத்தைக் கொடுத்தனர். அப்போது சிறிமாவோ வயதில் இளையவரான ஒருவரைத் தேர்ந்தெடுத்து யாழ்ப்பாணத்துக்கு அரசாங்க அதிபராக நியமித்தார். பல எதிர்ப்புக்களின் மத்தியிலும் அந்த அரசாங்க அதிபர் (பெயர் ஞாபகம் வரவில்லை) தனது திட்டத்தைத் தீட்டியிருந்தார். கொழுத்தும் வெயிலில் மக்கள் பதாகைகளுடன் ஊர்வலத்தில் கச்சேரியை நோக்கி வந்தார்கள். கச்சேரியில் அரசாங்க அதிபர் இல்லத்தின் முன்னால் வரவேற்பும், தாகம் தீர்ப்பதற்கு பழரசங்களும் காத்திருந்தன. “I have a dream” என்பது போன்ற பேச்சு அங்கு இடம்பெறவில்லையாயினும் ஊர்வலம் அமைதியாகக் கலைந்துபோனது. அந்த அரசாங்க அதிபர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ஊர்வலத்தை வரவேற்று உபசரிப்பது எனது முதல் திட்டம் (Plan A) அதே வேளை அது கலவரமாக வெடிக்குமானால் அதை அடக்குவதற்கு என்னிடம் இரண்டாவது திட்டமும் இருந்தது (Plan B). அதற்காக கோட்டையினுள் இராணுவத்தைத் தயார் நிலையிலும் வைத்திருந்தேன். ஆனால் தமிழரசுக் கட்சியிடம் Plan B இருக்கவில்லை”

இப்போது ரணில் விக்கிரமசிங்க #கோதாகோகம ஆர்ப்பாட்டக்காரர் விடயத்தில் முன்வைத்திருக்கும் முதலாவது திட்டமே (Plan A) அவர்களுக்குப் பாதுகாப்புத் தருவதாக உறுதியளித்திருப்பது. அவரது Plan B என்னவென்று யாருக்கும் தெரியாது. அதை ரகசியமாக வைத்திருக்கக்கூடிய இலங்கையின் ஒரே ஒரு அரசியல்வாதியும் அவரே தான்.

ரணிலின் இக்குணாதிசயங்களை மூத்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் நன்கு அறிந்தவர்கள். சந்திரிகாவும் ரணிலும் பலதடவைகள் மாறி மாறி இடறுப்பட்டாலும் இறுதியில் ரணில் அவரை வெற்றிகரமாக வீட்டுக்கு அனுப்பியவர். சிறிசேனவை இப்போது ஓரம்கட்டியிருக்கிறார். இவர்களைப் போலவே சம்பந்தர் ஐயாவுக்கும் இந்த நரியை நன்றாகத் தெரியும். இவர்கள் எல்லோரையும் உச்சிக்கொண்டு இந்த நரி தனியனாகத் தப்பித்துக்கொண்டு வருகிறது. இப்போது இந்த நரி ராஜபக்சக்களை வளைத்து வலைக்குள் போட்டிருக்கிறது. இதன் நோக்கம் நோக்கம் ராஜபக்சக்களை வீழ்த்திவிட்டு நாட்டையும் காப்பாற்றி ஐ.தே.கட்சியையும் மீள நிர்மாணிப்பதாகவும் இருக்கலாம். இதைச் சாதிப்பதற்கு அவர் பாவிக்கும் இரண்டு தந்திரங்கள் ஒன்று: திட்டமிடுவதை இறுதிவரை இரகசியமாக வைத்திருத்தல். மற்றது: தன்னைச் சுற்றியுள்ளவர்களையோ அல்லது கட்சிக்காரரையோ ஆலோசிக்காது அல்லது அவர்களது ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காது தனக்குச் சரியென்று படுவதைச் செய்வது. பெரும்பாலான தருணங்களில் அவரது முடிவுகள் வெற்றியளித்திருக்கின்றன. அதற்கு முழுமுதல் காரணம் தன்னுடைய இயங்கு சூழலை அவதானித்து செயற்படுவது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, ஆட்சியாளர் சர்வதேசங்களிடமிருந்து அன்னியப்பட்டமை, நாட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டமை போன்ற இயங்கு சூழ்நிலை அவருக்குச் சாதகமாக இருக்கிறது. அவர் அதைப் பயன்படுத்தியிருக்கிறார். அதில் அவர் வெற்றி காண்பதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.

2000 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்தபோது அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைத் தயாரித்திருந்தார். அதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான அதிகாரப் பகிர்வு முக்கிய அம்சமாக இருந்தது. ஆரம்பத்தில் ரணில் இதற்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் உள்ளடக்கங்களை அறிந்த சிங்கள தீவிரவாத சக்திகளும், கட்சிகளும் அதை எதிர்த்ததன் காரணமாக ரணில் இறுதி நேரத்தில் தன் ஆதரவை மீளப்பெற்றுவிட்டார்.

இக்காலகட்டத்தில், போராட்டம் காரணமாக, நாடு தற்போதுள்ள வகையில் பொருளாதாரத்தில் அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. வங்குரோத்து நிலையை எட்டும் நிலையில் இருந்த அரசாங்கத்துக்கு பெரிய வணிக நிறுவனங்கள் போரை நிறுத்தும்படி அழுத்தம் கொடுத்தன. சர்வதேச நணய நிதியம், தற்போது போல “உடனடியாகக் கடனைத் தரலாம் ஆனால் பாதுகாப்புக்கான செலவீனத்தை காத்திரமான அளவு குறைக்கவேண்டும்” என்பதை முக்கியமான நிபந்தனையாக முன்வைத்தது. 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதல் புலிகளின் மீது அழுத்தத்தைக் கொடுத்தது. வேறு வழியில்லாமல் இரண்டு தரப்பும் போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்படவேண்டியிருந்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரணில் ரகசியமாகத் தயாரித்தார். ஏற்கெனவே போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போதும் அது இன்னும் சில நாட்களில் காலாவதியாகப் போகவிருந்தமையால் ரணில் வவுனியாவுக்குச் சென்று தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் இதை ஜனாதிபதி சந்திரிகாவுக்கு மறுநாள் தான் ரணில் அறிவிக்கிறார்ர். காரணம் இவ் விடயம் வெளியே தெரிந்தால் சிங்கள தீவிரவாத சக்திகள் குழப்பி விடுவார்கள் என்பதால். இது தான் ரணில் விக்கிரமசிங்க. தேவையேற்படின் எதையும் செய்வார். ஆனால் ராஜபக்சக்களைப் போல அவரது தேவைகள் இதுவரை தனக்கானதாக இருக்கவில்லை. கருணாவைப் புலிகளிடமிருந்து கிளப்பியது அவராக இருப்பினும், அதனால் கிடைத்த இலாபம் முழுவதையும் அனுபவித்தது ராஜபக்சக்கள் தான். அப்படியிருந்தும் நாட்டைக் காக்கவென மீண்டும் குதித்திருக்கிறார். இந்தத் தடவை அவரது தந்திரம் எந்த வழியில் பாய்வதற்குக் காத்திருக்கிறது? ஊகிக்கவே முடியும்.

உடனடியாக அவரது திட்டங்கள் இரண்டு என நான் கருதுகிறேன். இரண்டும் சமாந்தரமாக நிறைவேற்றப்படும். ஒன்று ஜோன் எஃப் கென்னெடி பாவித்த ‘ஒத்துழைப்புத்’ தந்திரம். #கோட்டாகோகம போராட்டக்காரரைத் தாமாகவே நீர்த்துப்போக வைப்பது. இதற்கான உப திட்டங்களை அவர் வைத்திருக்கிறாரோ என்னவோ நாட்டு மக்களுக்கு அவர் முன்வைத்த பேச்சு ருவிட்டர் வெளியில் அவருக்கு நிறைய ஆதரவைக் கொண்டுவருகிறது. ஆர்ப்பாட்டக்காரரின் ஆதரவு, பெரும்பாலும் ருவிட்டர் வழியாகவே கிடைக்கிறது. இவ்வார்ப்பாட்டக்காரகளுக்கான பணமும் உதவியும் இதுவரை முன்னணி சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஜே.வி.பி. போன்ற இடதுசாரிகளிடமிருந்தே கிடைக்கிறது என ஊகிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரரோடு முரண்படாது, கலவரங்களை உண்டுபண்ணாது, அவர்களோடு சேர்ந்தியங்கி அவர்களின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதே அவரது நோக்கமாக இருக்கலாம்.

இரண்டாவது தந்திரம் ஆர்ப்பாட்டக்காரர்களை விழிப்பு நிலையில் வைத்திருப்பதன் மூலமே ராஜபக்சக்களை முகாம்களில் முடக்கி வைத்திருக்கலாம். இந்த இரண்டும் நிறைவேற வேண்டுமானால் மக்கள் வயிறுகள் கொதிக்கக்கூடாது. எனவே அதற்கு அள்ளிப் போடுவதற்காக அவர் தனது நட்பு நாடுகளைத் தயாராக வைத்திருக்கிறார்.

இத் திட்டங்களைக் குழப்புவதற்கு இரண்டே இரண்டு சக்திகளாலேயே முடியும். ஒன்று தீவிர பெளத்த, சிங்கள சக்தி மற்றது தொழிற்சங்கங்கள். இந்த இரண்டு சக்திகளும் ஒன்றுசேர்வதன் மூலமே நாட்டில் பல ஒப்பந்தங்கள், தீர்வுகள் சாத்தியமற்றுப்போக நேரிட்டது. கோதாபயவைக் கைக்குள் போட்டுக்கொண்டதால் சிங்கள பெளத்த தீவிரவாதிகளையும், போராட்டக்காரருக்கு உதவிகளை வழங்கப் போவதாகக் கூறியதால் இடதுசாரிகளையும் அவர் ஏககாலத்தில் சமாளிக்கப் பார்க்கிறார். இந்த இரு பகுதியினருமே பொதுமக்களின் ஆதரவை நம்பியிருப்பவர்கள். மக்களது வயிறுகளை இந்தியாவும், மேற்கு நண்பர்களும் நிரப்புவார்களானால் ரணிலின் தந்திரம் இன்னுமொரு தடவை வெற்றி பெறும்.

இக்களேபரத்தில் தமிழர் தற்காலிகமாக மறக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கு இப்போதுள்ள முதலாவது எதிரி அரசாங்கமல்ல, இராணுவமும், பொலிசாரும் தான். எமது உரிமைப் போராட்டத்துக்கு அரசியல் தீர்வு கிடைப்பதற்குள் அவர்கள் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துவிடுவார்கள். அவர்களை முகாம்களுக்குள் வைத்திருக்கக்கூடிய திறமை ரணிலுக்கு உண்டு. 1948 இலிருந்து இடதுசாரிகளை நம்பி எதுவும் நடைபெறவில்லை. அது அவர்களது தவறல்ல. அதே காரணத்துக்காகவே #கோதாகோகம ஆர்ப்பாட்டக்காரராலும் அதைச்சாதிக்க முடியுமென நமபமுடியாமலிருக்கிறது. இராணுவமும், பெளத்த சிங்கள தேசியமும் எந்நேரமும் ஒன்றிணையலாம். 2002 இலும் 2022 இலும் வயிற்றிலடிக்கும்போதுதான் வளைந்து வருகிறார்கள். இந்த இரண்டு ஆண்டுகளிலும் ரணிலார் தான் முன்னுக்கு நிற்கிறார். அவரது இரகசியத் திட்டங்கள் என்ன என்பது தெரியாது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் நாடு சுபீட்சமடைய முடியாது என்பதை அவர் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அத் தீர்வுக்கான திட்டங்களை அவர் வெளியில் பேசுவார் என எதிர்பார்க்கவும் முடியாது. எமக்கான தீர்வு அவரது திட்டங்களின் விளைவுகளில் ஒன்றாக இருக்கலாமென மட்டும் என்னால் நம்ப முடிகிறது. பல விசைகளை ஏககாலத்தில் சமாளித்துப்போகும் வல்லமை அவரிடத்தில் மட்டும்தான் உண்டு.

இந்த நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகள் அங்கு என்ன செய்கிறார்கள் என ஆயிரம் குரல்கள் எழலாம். அவர்கள் தென்னிலங்கையில் சொல்வது ஒன்று, தமிழ் இலங்கையில் சொல்வது ஒன்று என்று நையாண்டி செய்வதற்கும் நிறையப்பேருண்டு. ஆடிற மாட்டை ஆடித்தான் கறக்கவேணும் என்பார்கள். எல்லாவற்றையும் எல்லோரிடத்திலும் சொல்வது தற்கால அரசியலுக்குச் சாத்தியப்படாது. அரசியலில் இதெல்லாம் சகஜம். அவர்களும் ரணிலின் பாதையைத்தான் பின்பற்றவேண்டுமென்றால் அது சூழலின் நியதி.

சமீபத்தில் ‘தி இந்து’ பத்திரிகையில் வந்ததாக ஒரு செய்தி வந்தது. “விடுதலைப் புலிகள் மீளிணைகிறார்கள்” என்ற சாரத்தில், இந்திய புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்ட இச் செய்தியைத் தென்னிலங்கை ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து வருகின்றன. இதுவும் ரணிலாரின் பெரும் திட்டங்களில் ஒன்றாகவும் இருக்கலாம். ஏற்கெனவே வயிறொட்டிப் போயிருக்கும் சிங்கள் மக்கள் மனங்களில் மீண்டுமொரு அச்சத்தை எழுப்பி “ஏதாவது குடுத்துத் துலைச்சு விடுங்கோ” என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் ஒரு உளவியற் போராகவும் (Psy op) இருக்கலாம். யார் கண்டது? வருவதானால் வரட்டும் ஆனால் அது ரணில் வாயிலிருந்து மட்டும் வராது என்பது இப்போதைக்கு மகிழ்ச்சியானது.