புலிகளுக்கெதிரான வெற்றியைத் தடுக்க முற்பட்ட சக்திகளே தற்போதய ஆர்ப்பாட்டங்களுக்கும் காரணம் – சாகர காரியவாசம்
கடந்த சில வாரங்களாக தொழிற்சங்கங்களாலும், சிவில் சமூக அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் பின்னால் உள்ளவர்கள், முன்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது எமது இராணுவ வெற்றியைத் தடுக்கப் பின்னணியில் செயற்பட்ட மர்ம விசைகளே என பாராளுமன்ற உறுப்பினரும், சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளாருமான சாகர காரியவாசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“எமது இராணுவ வெற்றியைத் தடுப்பதற்கென செயற்பட்ட அதே குழுக்கள் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆர்ப்பாட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் உருவாக்கி எமது நாட்டில் குழப்பநிலையை உருவாக்க முயல்கின்றன” என நேற்று ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது காரியவாசம் குறிப்பிட்டார்.
இலங்கையில், கடந்த இரண்டு மாதங்களாக, எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களால் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தங்களும் முந்நெடுக்கப்பட்டு வருகின்றன. இரசாயனப் பசளை இறக்குமதித் தடை விடயம், ஆசிரியர் சம்பள வேறுபாடு விவகாரம், ஆகியன காரணமாக விவசாயிகள், தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றனர். ஆசிரியர்கள் இணையவழி வகுப்புக்களை நடத்தமாட்டோமென்று கடந்த 16 நாட்களாகப் பணிப்புறக்கணிப்புச் செய்து வருகின்றனர். நோய்க்கட்டுப்பாட்டு விதிகளைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்தமை அரசாங்கத்தின் மீது பலத்த விமர்சனத்தைக் கொண்டுவந்துள்ளது.
நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைப் பாவித்து அமைதிவழிப் போராட்டக்காரர்களைக் கைதுசெய்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பு (The Bar Association of Sri Lanka (BASL) ) தெரிவித்துள்ளது.
“நாட்டின் நலனை முன்வைத்து, கபட நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படும் இப்போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதை மக்கள் நிறுத்த வேண்டும்” என காரியவாசம் கேட்டுக்கொண்டுள்ளார்.