புலம் பெயர் சமூகம் எனது அழைப்பைச் சாதகமாகப் பரிசீலிக்கும் என நம்புகிறேன்- உதவி ஐ.நா. செ. நாயகத்திடம் ஜனாதிபதி ராஜபக்ச
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் காளிட் கியாரியை நேற்று (25) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த கோதாபய ராஜபக்ச ” இனங்களுக்கிடையேயான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஏராளமான காரியங்களைச் செய்துவருகிறது என உறுதியளித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் பங்குகொள்ள நியூ யோர்க் வந்தபோது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோணியோ குத்தெரெஸுடன் மேற்கொண்ட வெளியரங்குச் சந்திப்பின் தொடர்ச்சியாக கியாரியின் வரவு அமைந்திருந்தது.
சுற்றுச் சூழல் மீது ஜனாதிபதி காட்டும் அக்கறையையும், ஈடுபாட்டையும் மெச்சிய உதவி செயலாளர் நாயகம், மில்லேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்களை எட்டுவதற்கு இலங்கைக்கு ஐ.நா. உதவிகளிச் செய்யுமென உறுதியளித்ததோடு, பலவழிகளிலும் ஐ.நா. இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சூழல் பாதுகாப்பு விடயத்தில், இலங்கையின் கடற்படையின் உதவியுடன் 100,000 கண்டல் தாவரங்களை நடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதுடன் சூழல் பாதிப்பைத் தடுக்கப் பலவிதமான சூழல் பேண் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2009 போரின் முடிவில் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குத் துரித அபிவிருத்தியைக் கொண்டுவந்துள்ளன எனவும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் தான் புலம்பெயர் மக்களுக்கு விடுத்த அழைப்பை அவர்கள் சாதகமாகப் பரிசீலிப்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் ஜனாதிபதி உதவி செயலாளர் நாயகத்திடம் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையையுடனும்,, சுமுகமான உறவுடனும் வாழக்கூடிய சூழல் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதெனவும் நாட்டின் நீதி அமைச்சர் ஒரு முஸ்லிமாக இருப்பதும், சட்டமா அதிபர் ஒருவர் தமிழராக இருப்பதும் வேறு பல சமூகத்தவரும் பல உயர் பத்விகளிலிருப்பதும் இதற்கு உதாரணங்கள் என ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஒழிக்கப்பட்ட வழிகளையும் அதனால் கற்றுக்கொண்ட பாடங்களையும் இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவது பற்றித் தாம் சிந்தித்துவருவதாகவும் அதற்கு ஐ.நா.வின் உதவிகள் கிடைக்குமெனத் தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.