News & AnalysisSri Lanka

புலம் பெயர்ந்த அமைப்புகளைத் தடைசெய்துவிட்டு அவர்களிடம் எப்படி உதவி கேட்கலாம்? – சாணக்கியன் ராஜபுத்திரன்

[சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர். கொழும்பிலிருந்து வெளிவரும் Daily Mirror On-Line தனது 25ம் திகதிப் பதிப்பில் அவரை நேர்காணல் செய்து பிரசுரித்திருந்தது. கீழே காணப்படுவது அந்நேர்காணலின் சில பகுதிகள். தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து மிக நீண்ட காலத்திற்குப் பிறகு தென்னிலங்கை வாசகர்களுக்கு வழங்கப்பட்ட துணிச்சலான, கருத்தாழமுள்ள, அனுபவ முதிர்ச்சியுள்ள இவ்வுரையாடல் அனுபவக் குறைவான 29 வது இளைஞரிடமிருந்து வர்கிறது என்பது மிகவும் ஆச்சரியத்துக்குரியது. நீண்ட பதிவு. முழுமையாக வாசிப்பது பரிந்துரைக்கப்படுகிறது – ஆசிரியர்]

கே: தற்போதைய கோவிட் அலை உண்மையில் ‘துறைமுக நகர அலை’ எனச் அமீபத்தில் நீங்கள் அழைத்திருந்தீர்கள். கோவிட் கட்டுப்பாட்டை அரசாங்கம் எப்படிக் கையாள்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின்போது கோவிட் தொற்றாளர்களின் எண்ன்இக்கை 2,500. துறைமுக நகரச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக முடக்கம் தளர்த்தப்பட்டவுடன் எண்ணிக்கை 3,500 ஆகியது. கோவிட் பரம்பலின் உண்மையான நிலவரத்தை அறிந்தவர்கள் டாக்டர்களும், இதர மருத்துவப் பணியாளர்களுமே. அவர்கள் தான் இந்நோயின் கோரத்தை எதிர்கொள்பவர்கள். கோவிட் தொடர்பாக அவர்கள் எதையும் பேசக்கூடாது என அரசாங்கம் சுற்றறிக்கை விட்டிருக்கிறது. கோவிட் பரிசோதனை இன்னுமொரு பிரச்சினை. கிழக்கு மாகாணத்தில் 2 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 1,000 பேர் பரிசோதனை செய்யப்பட்டார்கள்; 500 பேரின் பெறுபேறுகள் மட்டுமே வெளியிடப்பட்டது. காரணம்?, கிழக்கு மாகாணம் முழுவதற்கும் ஒரே ஒரு PCR இயந்திரமே இருக்கிறது. இந் நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,500 என்பது நம்பக்கூடியதா?

முதலாவது அலை, தேர்தலினால் கொண்டுவரப்பட்டது. ஆகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதம் மட்டும் அரசாங்கத்தின் காலக்கெடு இருந்தது. அப்படியிருந்தும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அவசரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டாவது அலை 20 வது திருத்தத்தினால் கொண்டுவரப்பட்டது. அப்போது தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்த மினுவாங்கொட, பேலியகொட தொற்றுக்கள் பற்றி ஜனாதிபதிக்கு மிக நன்றாகவே தெரியும். 20 வது திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டவுடன் மீண்டும் ஒரு குறுகிய முடக்கம். அதுவரை 500 பேர் வரை மரணமடைந்திருந்தார்கள். ஒட்டு மொத்தமாக, 6.9 மில்லியன் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் கோவிட்டைக் கையாளும் முறை அருவருக்கத்தக்கது. தனதும், தனது கட்சியினதும் அதிகாரத்துக்காக அவர் செயற்படுகிறாரே தவிர, மக்களுக்காக அல்ல. எனவே இச் சூழலில், மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக்கொள்வதே நல்லது.

கே: வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகள் கோவிட் தொற்றை எப்படிக் கையாள்கின்றன? போதுமான வசதிகள் அங்குண்டா?

பொதுவாக இலங்கை முழுவதிலுமே வைத்தியசாலைகளில் வசதிகள் போதுமான தரத்தில் இல்லை. ‘இது போன்ற பெருந்தொற்றை நாடு முன்னர் சந்தித்ததில்லை; இது ஒரு அபிவிருத்தியடைந்துவரும் நாடு’ எனப் பல காரணங்களை அரசாங்கம் சொல்லலாம். இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்ணாண்டோபிள்ளை உள்ளக, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் நன்கொடைகள் கேட்டு வருகிறார் என அறிந்தேன். இதே அரசாங்கம் தான் அவர்களை ‘NGO காரயாக்கள்’ எனக்கூறி, சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் உட்படப், பலரைப் போரின் இறுதிக்காலங்களில் நாட்டை விட்டுத் துரத்தியது. உலக தமிழ் புலம்பெயர் அமைப்புகள் பற்றித் தவறான கருத்துக்கள் இங்கு நிலவுகிறது. அவர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளின் அமைப்புக்கள் அல்ல. அவர்கள் இலங்கைக்கு வெளியே வாழும் இலங்கையர்கள். 1983 கலவரத்தின்போது அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் இடம் பெயர்ந்தவர்கள்.இவர்களில் பலர் வெளி நாடுகளில் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். இவர்களிடையே தான் எங்கள் இலங்கையர்களின் வலையமைப்பு இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அவர்களைத் தடை செய்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்பட்ட தோல்விக்கு அவர்களைக் காரணமாகக் காட்டியிருக்கிறது. இப்போது எப்படி நாங்கள் அவர்களிடம் போய் உதவிகளைக் கேட்பது?

கோவிட் பெருந்தொற்று இல்லாத காலங்களில்கூட எமது வைத்தியசாலைகள் வசதிகள் குறைந்தவையாகவே இருந்துவந்துள்ளன. காரணம் அரசாங்கம் பெருந்தொகையான பணத்தைப் பாதுகாப்புக்காகச் செலவிடுகிறது. 2 மில்லியன் சனத்தொகைக்கும், எம்மிடமுள்ள நிலப்பரப்பிற்கும் நாம் பெருந்தொகயான இராணுவத்தைக் கொண்டுள்ளோம். ஆனால் எங்கள் இராணுவத்தால் சீன இராணுவத்தோடு சண்டை போட முடியாது. சீனர்களோடு சண்டை செய்து அவர்களைத் துரத்தவேண்டிய நாளொன்று வரும். ஒப்பீட்டளவில், மருத்துவ தேவைகளுக்காக ஒதுக்கப்படும் செலவீனம் போதாது. எல்லா அரசாங்கங்களும் ஒன்றுதான். பாதுகாப்புக்காக யார் அதிகம் செலவிடுவது என்றும், யார் சிறந்த தேசியவாதி என்பதற்குமான போட்டிதான் அவர்களிடையே உள்ளது. எமக்குத் தேவையான போட்டி, யார் மக்களுக்கான சிறந்த அரசாங்கம் என்பதே.

ஒருநாள் நான் கண் விழிக்கும்போது நாட்டின் தலைவராக ஒரு இராணுவ அதிகாரி இருக்கப் போகிறார் என்பதே. அது விரைவில் நடக்கலாம். பராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாது போனால் என்ன நடக்குமென்று தெரியாது. இவையெல்லாம் எச்சரிக்கை சமிக்ஞைகள்.

கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளானாலும் அவர்களும் யாரோ ஒருவருக்கு மகன், மகள், சகோதரன், சகோதரியாக இருக்கலாம். அவர்களை நினைவுகூர ஒரு பொதுநாள் குறிக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் கொல்லப்பட்ட நாளை ‘வெற்றி நாள்’ என எப்படி அழைக்க முடியும்?

சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம், பா.உ. ,த.தே.கூ.

கே: இராணுவமயமாக்கல் என்பது தற்போதைய அரசின் குழப்பம்தரும் ஒரு விடயம். வடக்கு கிழக்கு மக்கள் தமது வாழ்வின் பெரும்பாகத்தை இப்படியான சூழலில்தான் கழித்திருக்கிறார்கள். ஜனநாயக கருத்துருவாக்கத்தில், இராணுவமயமாக்கலின் பாதிப்பு எப்படியிருக்குமெனக் கருதுகிறீர்கள்?

அமைச்சு செயலாளர்கள் முதல் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் முன்னாள் இராணுவ அதிகாரிகள். வடக்கு கிழக்கு ஒருபுறமிருக்க, கோவிட் முடக்க நாட்களின்போது கொழும்பில் ஆறு அல்லது ஏழு மோட்டார் சைக்கிள்களில் இராணுவத்தினர் துப்பாக்கிகள் சகிதம் பவனி வந்தார்கள். எதற்காக? கோவிட்டைச் சுட்டுவிடலாமென அவர்கள் நினைத்தார்களா? இக் காலங்களில் மக்கள் வீடுகளில் இருக்கிறார்களா என்பதைப் பொதுச் சுகாதார பரிசோதகர்களோ அல்லது சுகாதார அதிகாரிகளோ அல்லது பொலிஸ்காரரோ தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில், அரசாங்கம் மக்களிளிடையே இழந்துவரும் மதிப்பின் வேகத்தைப் பார்க்கும்போது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க அதற்குச் சிரமமாக இருக்கலாமெனவே நான் அஞ்சுகிறேன். அடுத்த தடவை, ஜனநாயக வழியில் நடத்தப்படும் தேர்தல் மூலம் அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது போனால் அவர்கள் இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்வார்களோ தெரியாது. இலங்கை அரசாங்கம் மியன்மாரின் சட்டவிரோதமான இராணுவ ஆட்சியை அங்கீகரித்திருக்கிறது. தேவையேற்படின் இவர்களும் அவ்வழியை நாடலாம்.

இராணுவம் தற்காலிக வைத்தியசாலைகளை அமைக்கிறது. அரசியல்வாதிகள் அவற்றின் திறப்புவிழாக்களை நடத்துகிறார்கள். தற்காலிக வைத்தியசாலகள் குறித்து நாம் வெட்கப்பட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து திரும்புவர்களைத் தனிமைப்படுத்த நாம் வேறு வழிகளைக் கையாளவேண்டும். இது ஒரு மாஃபியாவாக வளர்ந்திருக்கிறது. இராணுவமயமாக்கல் ஒருபுறம் நடக்கிறது அதே வேளை மக்கள் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்த இராணுவம் பாவிக்கப்படுகிறது. இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பலருக்கு என்ன நடந்ததென்றே தெரியாது. இதுவெல்லாம் கட்டுக்கதைகளென அரசாங்கம் கைவிரித்து விடுகிறது. அப்படியானால் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு உண்மை தெரியும். எனவே எனது அச்சமெல்லாம், ஒருநாள் நான் கண் விழிக்கும்போது நாட்டின் தலைவராக ஒரு இராணுவ அதிகாரி இருக்கப் போகிறார் என்பதே. அது விரைவில் நடக்கலாம். பராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாது போனால் என்ன நடக்குமென்று தெரியாது. இவையெல்லாம் எச்சரிக்கை சமிக்ஞைகள்.

கே: வடக்கு கிழக்கு மக்கள் நினைவு நாட்களை நடத்த முடியாமலிருக்கிறது. நினைவுத் தூபிகள் அகற்றப்படுகின்றன. இச் சம்பவங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

அதுவும் பாரபட்சமான ஒன்றே. ஜே.வி.பி. தனது தலைவரையும், மரணித்த போராளிகளையும் நினைவுகூர பெரிய நிகழ்வொன்றை நடத்தினார்கள். இதை நாங்கள் சுட்டிக் காட்டியபோது, ‘அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடவில்லை, நாட்டுக்காகப் போராடியவர்கள்’ என்கிறார்கள். வடக்கு கிழக்கில் தனிநாடு கேட்டு விடுதலைப் புலிகள் போராடினர். இப்போது அவர்களது நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. யாழ் பல்கலைக் கழகத்தில் அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை துணைவேந்தர் மீள நிர்மாணித்தார். கோவிட் பெருந்தொற்றின் மத்தியில் முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்ட நினைவுச்சின்னத்தை அழித்தார்கள். இவையெல்லாம் அவதானத்தைத் திருப்பும் செயற்பாடுகள். இந்த அரசாங்கம் தமது தீவிர ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்த இவற்றைச் செய்கிறது.

யார் யாரை நினைவுகூர்கிறார்கள் எனபதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு மக்களை எடுத்துக்கொண்டால், ஒவ்வொருவருக்கும் ஒரு உறவினராவது கொல்லப்பட்டிருப்பார்கள். இறுதி நாட்களில் தகவல் சாதனங்கள் துண்டிக்கப்பட்டதால் ஒருவர் எங்கு எப்போது கொல்லப்பட்டார் என்ற தகவல்களைக்கூட அறியமுடியாதுள்ளது. எனவே இறந்தவர்களை நினைவுகூர்வதற்கு ஒரு பொது நாள் குறிக்கப்படவேண்டும்.

போரின் இறுதிநாட்களை ‘மனிதாபிமான நடவடிக்கைச் செயற்பாடு’ என்றார்கள். போரென்றால் இரண்டு பக்கமும் பலர் கொல்லப்படலாம். அது இராணுவமாகவோ, விடுதலைப் புலிகளாகவோ அல்லது பொதுமக்களாகவோ இருக்கலாம். பல்லாயிரக் கணக்கான பொதுமக்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியாது. பொதுமக்கள் கொல்லப்படவில்லை என அரசாங்கம் தொடர்ந்து கூறிவருவதை நிறுத்த வேண்டும். அது குழந்தைப்பிள்ளைத் தனமானது. அந்த நாளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள்கூட யாரோ சிலரின் மகனாகவோ, மகளாகவோ, சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்கலாம். நாங்கள் ஒரு பொதுவான புரிதலுக்கு வந்தாக வேண்டும். போரில் இறந்தவர்களைத் தெற்கு நினைவுகூரட்டும். ஆனால் அதை ‘வெற்றி நாள்’ என நீங்கள் கோர முடியாது. பொதுமக்கள் கொல்லப்பட்ட ஒரு நாளை நீங்கள் ‘வெற்றி நாள்’ என்று எப்படிக்கூற முடியும்? சிங்களத் தாய்மார்கள் கொல்லப்பட்ட பிள்ளைகளை நினைவுகூர வேண்டும். இரண்டு தரப்பும் தாம் நேசித்தவர்களை நினைவுகூர வேண்டும். ஏன் அவர்கள் நினைவுச் சின்னங்களை அழிக்கிறார்கள்? எதையாவது மறைக்க எண்ணுகிறார்களா? அவர்கள் வீடுகளில் எலும்புக்கூடுகள் இலாவிட்டால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.

கே: துறைமுக நகரச் சட்டவரைவு பற்றி. திடீரென இச் சட்டவரைவு பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது, உச்ச நீதிமன்றம் இதை விசாரித்து தீர்மானிக்க கால அவகாசம் கொடுக்கப்படவில்லை, இறுதியில் சட்டம் நிறைவேறுகிறது.

19 வது திருத்தம் பற்றிய பல புகார்கள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. மக்களுக்குத் தேவையான கால அவகாசம் அதற்குக் கொடுக்கப்பட்டது. 20 வது திருத்ததின் மூலம் இக் கால அவகாசம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து சில வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றம் சென்று அதை ஒரு வாரத்தால் நீடிக்கச் செய்தார்கள். துறைமுக நகரச் சட்ட வரைவு விவாதத்தில் அரசாங்கம் மிகவும் கபடத்தனமாகச் செயற்பட்டிருக்கிறது. சில காரணங்களுக்காக, ஏப்ரல் 12 ஐ மக்கள் ஒரு பொது விடுமுறை தினமாக என்ணிச் சோர்வகற்றப் போய்விட்டார்கள். இதனால் உச்சநீதிமன்றத்துக்குப் போகக்கூடிய ஒரு நாள் வீணாகப் போய்விட்டது. இருந்தும் பலர் இரவுபகலாக உழைத்து உச்ச நீதிமன்றத்தில் 23 புகார்களைச் செய்தார்கள். உச்சநீதிமன்றத்தின் கருத்துப்படி, சட்ட வரைவின் 75 சரத்துக்களில் 25, அரசியலமைப்புக்கு முரணானவை. அவற்றில் 16 சரத்துக்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், 9 சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அரசாங்கம் அவற்றில் திருத்தங்களைச் செய்து 113 வாக்குகளின், சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றிவிட்டது. 149 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம். அவர்கள் 21 மில்லியன் மக்களின் ஒரு பங்கையே பிரதிநிதிதுவம் செய்கிறார்கள். இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இச் சட்டத்தினால் வரக்கூடிய விளைவுகளைப்பற்றி மக்களிடையே நாம் விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும். சீன அரசாங்கம் படிப்படியாக இந் நாட்டை அபகரிப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

கே: துறைமுகச் சட்ட வரைவின்படி, அதன் சில பாகங்கள் இலங்கைக் கடலில் சீனா தனக்கான தனி நாடொன்றை உருவாக்குவதற்கு அனுமதியளிக்கிறது. இது விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஈழக் கோட்பாட்டைவிட மோசமானது என சில அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் விமர்சிக்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

இதில் என்னால் பார்க்கக்கூடிய ஒரு விடயம், அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியற் கட்சிகள் உட்பட்ட அனைத்துத் தமிழ் மக்களும், அதிகாரப் பரவலாக்கத்தையே விரும்புகிறார்கள். மத்திய அரசிடம் தேவைக்கு அதிகமான அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரப் பரவலாக்கத்தின் ஆரம்பம் மாகாணசபைகள். ஒன்பது மாகாணங்களிலும் அவை இப்போது இயங்குகின்றன. இலங்கைத் தமிழர்களான நாங்கள், இந் நாட்டில் இதர மக்களைப் போலவே நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறோம். இதற்கு மாறாக, சீனாவுக்கு ஒரு பிரதேசத்தை நாம் கொடுத்திருக்கிறோம். அதில் யார் வாழப் போகிறார்கள் என்பது இதுவரை எவருக்குமே தெரியாது. அங்கு எல்லைக் கட்டுப்பாடுகள் இருக்கும், அங்கு நிர்வகிக்கப்படவிருக்கும் சட்டங்கள் தெளிவற்றவை. இச் சட்டத்தின் மூலம் துறைமுக ஆணையத்தில் உறுப்பினராக சீனரும் இருக்கலாம். தமிழீழத்துக்காகப் போரிட்டவர்கள் எத்தனை பேர்? விடுதலைப் புலிகளை சீனாவுடன் ஒப்பிடப் போகிறோமா? விடுதலைப் புலிகளிடம் இருக்காத பலம் சீனாவிடம் இருக்கிறது.

கே: 13 வது திருத்தத்துக்கு மிகவும் ஆதரவாக த.தே.கூ. இருக்கிறது. மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும்படி இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கிறது. தேவையற்ற செலவுகள், மோசமான ஊழல் ஆகியவற்றைக் காரணம் காட்டி மாகாணசபை முறைமை ஒழிக்கப்படவேண்டுமென சிலர் விரும்புகிறார்கள். இம் முறைமையில் சீர்திருத்தம் செய்யப்படவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா?

13 ஆவது திருத்தம் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் தான் அதன் நிர்வாக முறைமை குறைபாடுகள் உள்ளதாகத் தெரிகிறது. மத்தியில் நீங்கள் அத்தனை அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு மாகாணங்களில் பொம்மை ஆட்சிகளை மட்டும் அனுமதிக்கிறீர்கள். அநேகமான விடயங்கள் இரட்டிப்புச் செய்யப்படுகின்றன. மாகாணசபையிடம் ஒரு கல்வி அமைச்சு, மத்தியிடம் ஒரு கல்வி அமைச்சு. ஆனால் வளங்களை மட்டும் மத்தி இறுகப்பிடித்துக்கொண்டிருக்கிறது. இதனால் மாகாணசபைகள் ஒரு போதும் பலம்பெற மாட்டா. மாகாணசபைகள் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே மத்திய அரசு அதை நசுக்கி வருகிறது. இதனால் அது ஒரு தோல்விகண்ட பரீட்சையாகக் காட்டப்படுகிறது. 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அது போதாது எனத் தமிழர்கள் கூறினார்கள். 1987 இல் 13 ஆவது திருத்தம் அமுலுக்கு வருமட்டும் சகல தமிழ் அரசியல் கட்சிகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருந்தன. 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரும்போது அது அதிகாரப் பகிர்வுக்கான முதற்படி என அவர்கள் நம்பினார்கள். கடந்த 30 ஆண்டு காலமாக இருந்த போர்ச்சூழல் மீண்டும் வரக்கூடாதெனின் நாம் அனைவரும் எல்லோரது அரசியல் விழுமியங்களையும் மதித்து அவர்களுக்கும் இந்நாட்டின் அரசியல் முறைமையில் பங்குண்டு என உணரக்கூடியவகையில் நடந்துகொள்ள வேண்டும். அல்லாது போனால் எமது நாடு ஒரு தோல்வியடைந்த நாடாகவே பார்க்கப்படும்.

கே: மாகாண சபைகளில் ஊழலும், பொருட்செலவும் அதிகம் எனக் கூறப்படுவதைப் பற்றி?

அப்படியானால ஜனாதிபதி செயலகம் மூடப்பட்ட பிறகே மற்றவை பற்றிப் பேசலாம். இலங்கை அரசியலில் ஊழல் பின்னிப் பிணைந்திருக்கிறது. உள்ளூராட்சிச் சபைத் தலைவரில் ஆரம்பித்து ஜனாதிபதி செயலகம் வரை குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மாகாண சபைகளைப் பற்றி வேண்டுமென்றே முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இவை.

கே: வடக்கு கிழக்கிலிருந்த மிகச்சிறந்த மூளைசாலிகள் போரின்போது புலம்பெயர்ந்து விட்டார்கள். தமது இளம் பராயத்தில் நாட்டைவிட்டுச் சென்றவர்களில் பலர் தற்போது கனடா, அவுஸ்திரேலியா, சிலிக்கன் வலி போன்ற இடங்களில் முக்கிய பதவிகளை வகிக்கிறார்கள். அவர்களைத் தாய்நாட்டுக்கு சேவை செய்வதற்கோ அல்லது முதலீடுகளைச் செய்வதற்கோ அழைப்பதற்குச் சிறந்த வழிமுறைகள் என்ன?

இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, ‘சிங்களம் மட்டும்’ சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது பேர்கர்களும் நாட்டைவிட்டு ஓடினார்கள். அவர்களில் பலர் இன்னும் சிறப்பான பணிகளில் இருக்கிறார்கள். தமது பூர்வீகம் இலங்கை என அவர்கள் இப்போதும் கூறிவருகிறார்கள். சீன முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவர இந்த அரசு காட்டும் ஆர்வத்தின் மிகச் சிறிய பங்கை மட்டும் காட்டட்டும். இனப்பாகுபாடுகளின்றி எல்லா இலங்கையர்களையும் வரவேற்கிறோம் என முதலில் அவர்களது சித்தாந்தத்தில் மாற்றம் காணவேண்டும். இரட்டைக் குடியுரிமைக்கான கட்டணத்தைக்கூட அவர்கள் குறைக்க முடியும்.

கே: பாராளுமன்றத்தில் த.தே.கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் உறுப்பினர் என்ற வகையில், வடக்கு கிழக்கு மற்றும் இலங்கைக்கான எதிர்காலம் எப்படி இருக்கவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?

ஒன்றுபட்ட, பிரிக்க முடியாத இலங்கைக்குள், தமிழ் சிறுபான்மையினரின் அரசியல் பார்வைகள் மதிக்கப்பட வேண்டுமென்பதே எனது விருப்பம். சகல சமூகங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கையர் என்ற அடையாளத்தை நாம் கூர்மையாக்க முடியும். என்னை முதலில் இலங்கையராகவும் பின்னர் தமிழராகவும் கருதுவதில் நான் பெருமையடைபவன். நாம் முதலில் ஒற்றுமையாக வேண்டும். ஒற்றுமையாவது என்பது நாம் எமது அரசியலபிலாட்சைகளைக் கைவிட்டு விடுவதாக எண்ணப்படக் கூடாது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கை, மற்றவர்களால் மதிக்கப்படும், எங்களுக்காக ஒரு அரசியல் கட்டமைப்பு வேண்டுமென்பது. அது நடைபெற்றால் இந் நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவும் இருக்காது. (டெய்லி மிரர் ஒன்லைன்)