புலம்பெயர் தமிழர் விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சிக்கிறார்கள் – பாதுகாப்புச் செயலாளர்
கொழும்பு ஜனவரி 15, 2020

சர்வதேச சமூகத்துடன் இணைந்து, அரசாங்கத்துக்கெதிராகப் பரப்புரைகளை மேற்கொள்வதன் மூலம் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கப் புலம்பெயர் தமிழர் முயற்சிக்கிறார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகளால் ஆயுதத்தினால் சாதிக்க முடியாததைப் புலம்பெயர் தமிழர் தமது பரப்புரையால் சாதிக்க முயல்கிறார்கள். ஆநால் அவர்களது முயற்சிகளெல்லாம் பிரயோசனமற்றவை என நிரூபிக்கப்பட்டு விட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.
திங்களன்று, இலங்கை விமானப்படையின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள படையினர் முன் உரையாற்றும்போது குணரத்னா இதைத் தெரிவித்தார்.
“தேசிய பாதுகாப்பு முன்னர் உதாசீனம் செய்யப்பட்டிருப்பினும், தற்போதைய அரசாங்கம் அமைதியானதும், பாதுகாப்பானதுமான தேசமொன்றை உருவாக்கியுள்ளது. முந்தய அரசாங்கம் தனது அறியாமையாலும், அலட்சியத்தாலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடைபெற அனுமதித்திருந்தது.”
“தேசிய பாதுகாப்பு தொடர்பாகத் தம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட பொறுப்புக்களின் காத்திரத்தை முந்தைய அரசு உணர்ந்திருந்தால் அது வித்தியாசமாகச் செயற்பட்டிருக்கும். தற்போது நாட்டின் பாதுகாப்பைக் குலைப்பதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியையும் முறியடிக்கும் தயார் நிலையில் இராணுவம் இருக்கிறது” அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இலங்கை விமானப்படையினரதும், அவர்களது குடும்பங்களினதும் நல்வாழ்வுக்கான முழு ஆதரவையும் தான் தருவேன் என்றும், அதே வேளை நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் தன்னுடன் ஒத்துழைக்கும்படியும் அவர் தனது உரையின்போது படையினரைக் கேட்டுக்கொண்டார்.