Columnsகிருஷ்ணானந்தா

புலம்பெயர் தமிழர் இலங்கையை மீட்க வேண்டுமா?

சிரி லங்கா-6

வடிவேலர் இன்றைக்கு வேளைக்கே வந்துவிட்டார். கோபால் பற்பொடி விளம்பரக்காரியைப் போல ஒரு full length சிரிப்பு அவரை ஆட்கொண்டிருந்தது.

“என்ன கிருசு சைக்கிள் மின்னுது. மோட்டார் சைக்கிளுக்கு எண்ணை கிடக்கேல்லப் போல” வடிவேலர் நக்கல் இன்றைக்கு கொஞ்சம் ஆழமாகத் தைத்தது. என்ன இருந்தாலும் அவர் ஒரு கறள் பிடித்த சைக்கிளில் வருகிறபோது கிருசுவின் மோட்டர் சைக்கிள் உறுமிக்கொண்டு வந்து நிக்கிற தருணங்களில் அவருக்கு உள்ளூரக் குத்துவது உண்மை தான். பாவம் ‘பொறாமை ஒன்றே கடவுள் ஏழைகளுக்குக் கொடுத்த நிவாரணி’ என எண்ணி உடனேயே மறந்துவிடுவார்.

“வடிவேலர் இது என்ன கொழும்பா பவுசரில பெற்றோல் வாங்கிறதுக்கு?. என்ர அப்பர் சொல்லுவார் ‘ஒரு காலத்தில யாழ்ப்பாணத்தின்ர ஒவ்வொரு கிராமத்திலும் மண்ணெண்ணை home delivery செய்யப்பட்டது எண்டு. அப்பவே எங்கட ஆட்கள் Uber வைச்சிருந்தவை. தபாலுக்கு ஒட்டிறதுக்கு முத்திரை இல்லாவிட்டால் சனம் அதுக்குரிய பெறுமதியைக் காசாகத் தபாற் பெட்டிக்குள்ள போடுவினம். தபால் காரன் தன்னட்ட இருக்கிற முத்திரையை ஒட்டிப்போட்டுக் காசை எடுப்பான். அந்தளவுக்கு ஒரு நேர்மையான honour system எங்கட நாட்டில இருந்தது. இப்பவும் எங்கட ஆக்கள் நேர்மையாகத்தான் இருக்கினம். எங்க காட்டுங்க பாப்பம் யாழ்ப்பாணத்தில பவுசர் எண்ணை விக்கிறதை? வாங்கிறதுக்கு ஆக்கள் இல்லாததால விக்கிறதுக்கும் ஆக்களில்லை”

“என்ன இருந்தாலும் நம்ம சனம் நம்ம சனம் தான்” வடிவேலருக்கு கண்ணீர் கசிந்தது. “அது சரி எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆள் சொல்லிச்சு நேவிக்காரர் தங்களுக்கு கிடைக்கிற டீசலைக் களவாக விக்கிறாங்களாம் எண்டு. இயக்கக்காரருக்கும் மகேஸ்வரன் கொழும்பில இருந்து ‘மண்ணெண்ணை’ கடத்தினது எண்டு சொல்லுவினம்”

“அது பொய்யண்ணை. பெடியளுக்குத் தேவையான எண்ணைய அவங்கள் தமிழ்நாட்டில இருந்து கொண்ணந்திடுவாங்கள். மகேஸ்வரன் கடத்தினது உண்மை. எண்ணை ராங்குக்கிள்ள சாமான் இருந்ததும் உண்மை. ஆனா அது மண்ணெண்ணை இல்லை. சரி அதை விடுவம். கள்ளுக் கொட்டிலில இப்பவும் அமர்க்களம் தானோ?”

“அதை ஏன் கேட்கிற கிருசு. போன கிழமை அடிபாடு வந்திடும்போல இருந்துது. ஒரு மாதிரிச் சமாளிச்ச்சுப் போட்டம்”

“என்ன அரசியல் தானோ அல்லது…”

“வேறேன்ன. எல்லாம் இந்த புலம் பெயர்ந்த தமிழரால தான். ஞாபகமிருக்கே தனிநாட்டைப் பிரிச்சுத் தந்தா இலங்கையின்ர கடன் முழுவதையும் தாங்க அடைப்பம் எண்டு அமெரிக்காவில இருந்து ‘பைடனுக்கான தமிழர்கள்’ எண்டு ஒரு அமைப்பு அறிக்கை விட்டுது. அதைபத்தி நீ என்ன நினைக்கிற?”

“வடிவேலர், ‘there are many ways to skin an apple’ எண்டொரு பழமொழி ஆங்கிலத்தில இருக்குது. உண்மையிலை அப்பிளுக்குப் பதிலாகப் பூனை எண்டுதான் இருக்கவேணும். இந்தக் காலத்தில அப்பிடியான பதங்களை பாவிக்கேலாதுதானே. ஒரு செயலைச் செய்யப் பல வழியள் இருக்குது எண்டது தான் அதின்ர கருத்து. ஆயுதப் போராட்டம் ஒரு வழியெண்டு தம்பிமார் நினைச்சினம். அதுக்கு தகப்பன் தாய்மாரும் ஆதரவு கொடுத்திச்சினம், சரிவரேல்ல. அதனால இனிமேல் வேற வழியளைப் பார்க்கோணும். யூதர்மார் எப்பிடி இஸ்ரேலை உருவாக்கிச்சினமோ அப்பிடி எங்களுக்கு இருக்கிற அடுத்த ஆயுதம் பொருளாதாரம் எண்டு சிலர் நினைக்கினம். அவைதான் இப்பிடி ஒரு நக்கல் நளினத்தோட வந்து இறங்குகினம். கொஞ்ச மில்லியன் டொலருக்காக, எப்பிடித் துன்பம் அனுபவிச்ச ருவாண்டா வாயைப் பிளந்து, பிரித்தானியா கழிச்சுவிட்ட அகதிகளை வாங்கேல்லயா? பணம் எண்டாப் பிணமும் வாய் திறக்கும். அப்பிடித்தான் தமிழருக்கு ஒரு நாடு கிடைக்கவேணுமெண்டா அதை ஏன் ட்றை பண்ணக்கூடாது?”

“அது தன்மானமுள்ள சிங்கள மக்களை அவமதிக்கிறதெண்டு அந்த மக்கள் பார்க்க மாட்டினமா? அதனால நல்லிணக்க முயற்சிகள் பின்னுக்குப் போடப்படமாட்டுதா?”

“இருக்கலாம் வடிவேலர். போர் முடிஞ்சப்பிறகு இதுவரைக்கும் எந்த ஒரு சிங்கள அமைப்பும் ‘இலங்கையின் தற்போதைய பிரச்சினைக்கு இனங்களுக்கிடையேயான சுமுகமான அரசியல் தீர்வு மட்டுமே ஒரு விடிவைக் கொடுக்கும்’ எண்டு நம்பினதாகவோ அல்லது அறிக்கை விட்டதாகவோ இல்லை கோதாகோகம ஆர்ப்பாட்டக்காரர் பிடிக்கிற அதே சிங்கக் கொடியத்தான் ஆமத்துறுமாரும், இராணுவமும், ஜே.வி.பி.யும், வீரவன்ச கோஷ்டியும் பிடிக்கினம். தமிழரைப் பொறுத்தவரை அது ஒரு ஆகிரமிப்புக் கொடி. அதுக்குக்கீழ இனங்களை ஒரு இலங்கைக்குள்ள ஐக்கியப்படச் சொல்லி கேட்கிறது இப்போதைக்கு நியாயமில்லை. வடக்கு கிழக்கு மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வைக் குடுத்துப் போட்டு ‘நாங்க ஒரே இலங்கைக்குள்ள வாழுவம்’ எண்டு கேக்கிறதில நியாயம் இருக்கு. எண்ட படியால நாங்க மட்டும் நல்லிணக்க முயற்சிகள் பத்திப் பேசிக்கொண்டிருக்க அவங்கள் அதைப்பத்திப் பேசாதபோது அது எப்பிடி நியாமனதாகும், சொல்லுங்கோ”

“சரி இப்ப நான் இதைக் கேக்கிறன். நம்ம சிறிசு ராசமாணிகத்தின்ர பேரப்பெடி இப்ப சுவிட்சர்லாந்தில நிண்டு “நாங்க இலங்கையை மீட்டெடுக்க வேணும். நீங்க எல்லாரும் டொலரில காசை அநுப்பவேணும்” எண்ட மாதிரிப் பேசியிருக்கு. “அதே வேளை இவ்வளவு சொல்லியும் அரசாங்கம் எங்களைக் கண்டுக்குற மாதிரி இல்ல” எண்டும் சொல்லுது. இது நியாயமா? எங்கட புலம் பெயர்ந்த தமிழர் இலங்கையை மீட்டெடுக்க வேணுமா? நீ சொல்லு”

“அண்ணை, நான் போன கிழமை ரெண்டு மூண்டு புலம் பெயர் இளசுகளோட பேசினன். இளசுகள் எண்டா, அடுத்த பரம்பரைத் தமிழர்கள். எல்லாரும் பி.எச்.டி. காரர், கலாநிதியள். சுத்தமாத் தமிழ் கதைக்குதுகள்”

“புல்லரிக்குது” வடிவேலர் தனது கைகளைத் தடவிக்கொண்டார்.

“அதுகள் சொல்லுதுகள் ‘இப்போதைய இலங்கைப் பிரச்சினை முள்லிவாய்க்கால் முடிவோட ஆரம்பிச்சிட்டிது. அதை ஆரம்பிச்சு வைச்சதும் நாங்க தான். அது இன்னும் முடியேல்ல. அது முடியேக்க எங்களுக்கு விடிவு கிடைக்கும்’ எண்டு சொல்லுதுகள். அது அதுகளின்ர ஒரு பார்வை”

“அப்ப இலங்கை நாசமறுந்து போகோணும் எண்டு அதுகள் சொல்லுதுகளோ”

“அப்பிடி வார்த்தைப் பிரயோகம் அவங்களிட்ட இருந்து வரேல்ல. ‘இந்த அழிவில எங்களுக்கும் பங்கு இருக்கு. அது work in progress’ எணட மாதிரிச் சொல்லுகினம்”

“அப்ப எங்கட சனம் பட்டினியால சாகோணும் எண்டு அவை நிநைக்கினமோ”

“இல்லை. எங்கட சனத்தின்ர தாங்கு தன்மை, அந்த resilience பற்றி அவங்களுக்குத் தெரியும். போர் எங்களை அதுக்குத் தயாரிச்சுப் போட்டுது. எங்கட சனம் ஒருநாளும் பட்டினியால சாகாது. எங்கட சனம் வீட்டுத் தோட்டம் வைக்கிறதும், விறகில சமைக்கிறதும் புதிசான விசயங்களல்ல”

“அப்ப சிங்கள மக்களும் பாவம்தானே எண்டு அவை உணரவில்லையோ?”

“அப்பிடிச் சொல்லேலாது. இதில தமிழரும், சிங்களவரும், முஸ்லிம்களும் மட்டும் பங்குதாரர் இல்லை. வேறு பங்காளிகளின்ர மறைமுகமான பங்களிப்புகளும் இருக்கு. இநப்பிரச்சினைக்கான, சகலராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய் தீர்வொன்றே இலங்கைக்கான நீண்டகால பொருளாதாரத் தீர்வு எண்டிறதை தமிழரும் முஸ்லிம்களும் சொல்லி சிங்களவர்கள் கேட்கப் போறதில்ல. மணி கட்டின மாடுகள் தான் அவற்றைச் சொல்ல வேணும். அந்த மணிகட்டின மாடுகளோட தான் நாங்க வேலை செய்ய வேணும். ஐ.நா. போன்ற சாதனங்கள் ஒண்டுமே புடுங்கேல்ல எண்டிறது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் மணிகட்டின மாடுகளுக்கு ஐ.நா.வும் ஒரு கொம்பு தான். அதனால கொழும்பில இருக்கிற எம்.பி. மார் சில வேளையில நடிக்கவேண்டியிருக்குமெண்டு நான் நினைக்கிறன். அவையளைக் காட்டிக் குடுக்காம புலம்பெயர்ந்த ஆட்கள் மணிகட்டின மாடுகளை மேய்க்கிற அலுவலப் பார்க்கிறதுதான் சரியெண்டு நான் நினைக்கிறன். ராசமாணிக்கத்தின்ர பேரன் சுவிட்சர்லாந்தில நிண்டு அப்பிடித்தான் சொல்லவேணும். அதுதான் அரசியல். அதை விட்டுப்போட்டு உடனே அந்தப் பெடிக்கு ‘துரோகி’ பட்டம் சூட்டிறது சாணக்கியமானதல்ல”

“அப்ப சிங்கள மக்கள்..?”

“தமிழ் மக்கள் பாவம் எண்டு சிங்கள மக்கள் உணராத வரைக்கும் அவை பாவம் எண்டு நாங்க ஏன் பரிதாபப்பட வேணும் எண்டு கேக்கிற ஆக்களுக்கு நீங்க என்ன சொல்லுவீங்க? உண்மையைச் சொல்லப்போனா முள்ளிவாய்க்கால் கொடுமைகள் சிங்கள மக்களிடத்தில முறையாகக் கொண்டுசேர்க்கப்படவில்லை. சிங்கள அரசியல்வாதிகளும் சரி, ஊடகங்களும் சரி அதை இருட்டடிப்புச் செய்து போட்டினம். தமிழ் ஊடகங்களும் வடக்கு கிழக்கை விட்டு அங்கால நகரேல்ல. எப்பிடி வெள்ளைக்காரரை ஆசிரியராகப் போட்டு அரேபியன் ‘அல்ஜசீரா’ என்று ஊடகம் நடத்தி வெள்ளையளுக்கு மாற்றுக் கருத்துக்களைச் சொல்லுறானோ அப்பிடி தமிழர் சிங்களத்தில ஊடகம் நடத்தி செய்தியளைச் சொல்ல வேணும். இல்லயெண்டு சொல்லுவியளோ?”

“அப்ப என்ன சொல்லுற, புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு உண்டியலால மட்டும்தான் காசு அனுப்பவேணுமோ?”

“அப்பிடி நான் சொல்லேல்ல. ‘தமிழருக்கு நியாயமான தீர்வொண்டைக் குடுத்தால் தான் இலங்கையில் நிரந்தரமான சமாதானம் நிலைக்கும், பொருளாதாரம் செழிக்கும் எண்டிற குரல் தெற்கில ஓங்கி ஒலிக்காதவரை தமிழர் எப்பிடியான அழுத்தங்களையும் பாவிக்கிறதில தப்பில்ல’ எண்டிற எண்ணம் புலம்பெயர்ந்த மூன்றாம் தலைமுறைத் தமிழரிடத்திலயே வந்திட்டுது ஆனால் பாவம் முதலாம் தலைமுறைச் சிங்களவரிடத்தில இன்னும் முளையே விடவில்லை எண்டிறதை கொட்டில்காராரிட்ட கொஞ்சம் உரத்துச் சொல்லுங்க” என்றார் கிருசு.

“உனக்கும் புலம் பெயர்ந்த தமிழர் காசு தந்தீட்டினம் போல” வடிவேலர் கிருசின் முதுகில் தட்டிவிட்டுப் புறப்பட்டார்.