புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடை: ரணிலின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி
ஒரு அலசல் – சிவதாசன்
“சுமந்திரன் ஒரு மாதிரி விளையாடிப்போட்டுது, பாத்தியளோ” என்றார் நண்பர்.
“ஏன் என்ன நடந்தது?”
“அது தான் இந்த CTC, GTF அமைப்புகள் மேல போட்ட தடையை எடுத்த விசயம். கூட்டமைப்போட நல்லா இருக்கிற அமைப்புகளும் அவையோட ஆக்களும் தப்பிட்டினம்”
நண்பர் ஏற்கெனவே ஒரு சுமந்திரன் எதிர்ப்புவாதி. இந்த நேரத்தில் தடை நீக்கம் பற்றிய செய்தியும் வந்து அவரது வயிற்றைக் கலக்கி விட்டது.
உண்மையில் இப்படியான தடைகளால் அதிகம் இழப்பைச் சந்திப்பது இலங்கை தான். பரதேசங்களின் சுற்றுலாவாசிகளை விட புலம்பெயர் தமிழர்கள் இலங்கைச் சுற்றுலாக்களே நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டுகின்றன. இந்தத் தடவை பல முக்கிய அமைப்புகளும், முன்னூறுக்கும் அதிகமான தனிநபர்களும் தடைப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் இரட்டிப்பு நன்மை அரசுக்குக் கிடைக்கிறது. ஒன்று வருவாய் மற்றது அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. திருவிழாவில் நாம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டோம் என்று காட்டுவதற்கு ஒரு படம்.
சுமார் 40 வருடகால வாழ்வு புலம்பெயர் தமிழர்களை மிகவும் செழிப்பானவர்களாக்கியிருக்கிறது. பெரும்பாலானோர் ஓய்வு பெற்றுக்கொண்டு ‘ஊருக்குப் போய்வரும்’ ஆசையில் இருக்கிறார்கள். சுற்றுலாவாசிகளைப் போலல்லாது புலம்பெயர் தமிழர்கள் மாதக் கணக்கில் நின்று ‘டொலரில்’ செலவு செய்துவிட்டு வருகிறார்கள். பசும் புல்லைத்தேடி மாடுகள் வருகிறதென்றால் சாணத்தின் பெறுமதி தெரிந்தவனே படலையைத் திறந்துவிடுவான். யாழ்ப்பாணத்து விவசாயியிடமிருந்து இதைத்தான் விக்கிரமசிங்க கற்றிருக்கிறார். அரசியலும் பொருளாதாரமும் தெரிந்த மனுஷன்.
அதையும்விட இன்னுமொரு விசயத்தையும் ரணில் யாழ்ப்பாணத்தாரிடமிருந்து கற்றிருக்கிறார். அது தான் நண்டுக் கலாச்சாரம். நாலு அமைப்புகளின் தடையை எடுத்தது பற்றி சந்தோசப்படாமல் தங்கள் மீதான தடையை எடுக்காமல் விட்டதற்குச் சுமந்திரன் தலையில் பழிபோடும் வல்லமையும் உண்டு என்பதை ரணில் நன்றாக அறிந்துவைத்துள்ளார். எனவே தமிழ்ச் சமூகம், அது புலத்தில் இருந்தாலென்ன பெயர்ந்து இருந்தாலென்ன ஒரு நொடியில் நண்டுகளாக மாறிவிடும் என்பதை மனிஷன் அறிந்துவைத்திருக்கிறார்.
‘ரணில் ஒரு கெட்ட சாமான்’ என்று சொல்பவர்கள் பலர். அவர்களோடு நானும் உடன்படுகிறேன். கோதாவை ஊரைவிட்டு அனுப்பிய அரகாலயாவை உடைத்த மனிஷன். கருணாவைப் பிடுங்கி புலிகளைச் சிதைத்த மனிஷன். இலங்கையின் தூரகாலச் சிந்தனையாளர்களான N.Q. டயஸ், ஜே.ஆர்.ஜயவர்த்தனா போன்றோரைவிடவும் விஷத்தையும், விசயத்தையும் கொண்டு பிறந்த ‘கெட்ட சாமான்’. ஆனால் அது தமிழருக்கு மட்டும்தான். ரணில் விக்கிரமசிங்க அமைதியாக இருந்து அலுவலை முடிக்கும் ஒரு படு சிங்கள தேசியவாதி. விடுதலைப் புலிகள் மீதான வெற்றி ரணிலின்வெற்றி. அதை அவரிடமிருந்து பிடுங்கி அனுபவித்தவர்கள் ராஜபக்சக்கள். குடிசையிலிருந்து வந்தவர்கள் நாட்டைச் சிதிலமாக்கி தமது கோட்டைகளைக் கட்டியவர்கள். அவர்கள் காட்டிய படம் மக்களிடம் எடுபட்டது மாதிரியே விரைவில் பிடிபட்டும் போனது. ஒதுங்கி ஓரமாக இருந்த ரணில் அச்சிதிலத்தில் கோட்டையை மீண்டும் எழுப்ப முயற்சிக்கிறார். அதற்காக அவர் எதையும் செய்யத் தயார். புலம்பெயர் தமிழர் மீதான தடை நீக்கம் அதில் சிறிதான ஒன்று மட்டுமே.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்காவிட்டாலும் பரவாயில்லை சஜித் பிரேமதாசவுக்கு பதவி போய்விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்து கோதாபயவுக்கு அச்சந்தர்ப்பத்தை வழங்கினார். இப்போது கோதாவை அவரது சகோதரர்களிடமிருந்து பிரித்து ஆட்சியைக் கைப்பற்றியது மட்டுமல்ல அவரது கட்சிக்காரர்களையும் தன் பின்னால் அணிவகுக்க வைத்திருக்கிறார். அது போதாதென்று இதர கட்சிகளிலிருந்தும் ஒவ்வொருவராகச் சீவி எடுத்து வருகிறார். தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பும் ஒருவர் ஏனைய கட்சிகளின் தலைவர்களோடு தான் பேசுவார். ரணில் அப்படியல்ல ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தூண்டில்களைப் போட்டுவிட்டுச் சிரித்துக்கொண்டிருப்பவர். தமிழர் தரப்பில் நமது நீதியரசர் முதலில் கவ்வினார். கூட்டமைப்பில் நான்கு மீன்கள் கவ்வியதாக ரணிலே சொல்லியிருக்கிறார். அமைச்சரவையைப் பெருப்பித்து இன்னும் பல மீன்களுக்குத் தூண்டில்களைப் போட்டிருக்கிறார்.
நீதியரசர் பாவம். ரணில் ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டதாக இப்போது புலம்ப…மன்னிக்க வேண்டும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ரணில் தனது அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதால் அவருக்கு வாக்களித்தேன் என முதலில் கூறினார். பின்னர், அவரைச் சந்தித்தபோது, 13 ஆவது திருத்தத்தையே முழுமையாக நடைமுறைப்படுத்த ரணில் மறுத்துவிட்டார் என்கிறார். தனக்கு அமைச்சுப் பதவிகூட வேண்டாம் தான் எதிர்க்கட்சியிலிருந்துகொண்டே அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறேன் என இப்போது கூறிவருகிறார்.
சுமந்திரனும் சாணக்கியனும் கழுவிய மீனுக்குள் நழுவிய மீன்களாக ரணிலின் தூண்டிலில் அகப்படாமல் திரிகிறார்கள். அவர்களையும், கூட்டமைப்பையும் உடைப்பதுதான் ரணிலின் நோக்கம். துர்ப்பாக்கியமாக அது வெற்றிபெறும் சாத்தியமே அதிகம் இருக்கிறது என்கிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கம் தொடர்பாகச் சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் இப்போதே பறைகளை அடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
‘சின்னப் பாம்பென்றாலும் அதைப் பெரிய தடியால் அடித்துக் கொல்லவேண்டும்” எனத் தலைவர் பிரபாகரன் கூறுவதாகச் சொல்வார்கள். ஆனால் பெரிய மரக்குற்றியானாலும் சின்னதாகச் சீவி எடுத்தே அதை அழித்துவிடலாம் என்று நம்புபவர் ரணில். அதனால் தான் அரை நூற்றாண்டு காலமாக அவர் அரசியல் செய்கிறார். மக்கள் ஆணையில்லாமலேயே ஒரு நாட்டின் அதிபராக வந்திருக்கிறார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவைப் போல் ரணில் மேற்கத்தய விசிறி அல்ல. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பிறகு மேற்கிடம் அதிகாரம் குவிவதை விரும்பாத ஒருவர் ரணில். ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு என ஒவ்வொரு பிராந்தியமும் தத்தம் வலுக்களை விருத்திசெய்யவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை அவரது பல நடவடிக்கைகள் மூலம் காட்டி வருகிறார். ஆனால் எதையும் அவர் வெளிப்படையாக அறைகூவுவதில்லை.
யூக்கிரெய்ன் – ரஸ்யா போர் அமெரிக்காவின் proxy war என அவர் கூறுகிறார். இதனால் அவர் ரஸ்ய சார்பை எடுப்பதுபோலத் தெரிகிறது. இப் போரினால் அதிகம் பாதிக்கப்படப் போவது ஆசிய, ஆபிரிக்க கண்டங்களின் மக்களே என அவர் நம்புவதால் ஆசியாவின் இந்தோனேசியாவைக் கொண்டு இப் போரை நிறுத்துவதற்கு பின்னரங்குகளில் முயற்சி செய்வதாகவும் கேள்வி. அதே வேளை இந்து சமுத்திரத்தில் இந்தியா-சீனாவுக்கான ஆதிக்க பலத்தையும் அவர் அங்கீகரிக்கிறார். எனவே இதில் அமெரிக்க தலையீட்டை அவர் விரும்பவில்லை. சமீபத்தில் தாய்வானுக்குச் சென்ற அமெரிக்கப் பெண்மணி நான்சி பெலோசியின் விஜயத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவே பார்க்கப்படும் என்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். எனவே அவரை ஒரு அமெரிக்க ஏகாதிபத்தியவாதி எனக் கூறமுடியாது. வீரவன்ச, நாணயக்கார போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தேசியவாதியாக அவர் மாறியிருக்கிறார். எனவே அவரிடம் அரகாலயர்கள் மட்டுமல்ல தமிழர்களும் தோற்றுப் போயிருக்கிறார்கள்.
புலத்திலும் வெளியிலும் தமிழர்களைப் பிரித்தாள ரணிலுக்குப் புதிய உத்திகள் எதுவும் தேவையில்லை. தசமப் புள்ளிகாளகத் தமிழர் தலைமைகள் பிரிந்துபோயிருப்பது அவருக்குக் கிடைத்த வரப்பிரசாதம். படலையைத் திறந்து விட்டிருக்கிறார். சாணத்தின் பெறுமதி அவருக்குத் தெரியும்.
ரணிலின் To Do List மிக நீண்டது. அதுதான் அச்சத்தைத் தருகிறது.