புரிதல்: கூர்ப்படையும் டார்வின்
சிவதாசன்
சில நாட்களுக்கு முன்னர் செய்தியொன்றை வாசித்தேன். இந்திய பெண் யானைகள் தந்தங்கள் இல்லாது பிறக்கின்றன. இது கடந்த 15 வருடங்களாக அவதானிக்கப்பட்டுவரும் உண்மை என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காரணம்? தாய்மை. அதே இயற்கையின் அதிசயம்.
யானைகளை இன்னும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் பூமியின் இரு கண்டங்கள் ஆசியாவும் ஆபிரிக்காவும் தான். ஆனாலும் தமது ஆபரண, மருத்துவ தேவைகளுக்காக சீனா போன்ற நாடுகள் தமது தந்தங்களை இங்குதான் வாங்குகின்றன. வேகமாக அழிந்துகொண்டுவரும் விலங்கினங்களிலொன்றான யானைகள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்படுகின்றன. பெண் யானைகளுக்கு இது புரிந்துவிட்டது. தமது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக அவை தந்தங்களின்றிப் பிறக்கின்றன என்று அச்செய்தியில் இருந்தது.
தேவைகளுக்கேற்ப உயிரினங்கள் இசைவாக்கமடைகின்றன என கூர்ப்புக்கொள்கை கூறுகின்றது. குறைந்தது அதைத்தான் டார்வினும் லாமார்க்கும் கூறியிருந்தார்கள். தக்கன பிழைக்குமென அதை எங்கள் உயிரியல் ஆசிரியர்கள் இலகுவாக விளங்கப்படுத்தியிருந்தார்கள். மரபணுக்களில் இம்மாற்றங்கள் நிகழ வேண்டும். இப்படியான இசைவாக்கங்கள் நிகழ பல மில்லியன் வருடங்கள் கூட எடுக்கலாம். ஆனால் இந்த ஆசிய யானைகளோ 15 வருடங்களில் இசைவாக்கமடைந்து விட்டன என்கிறது செய்தி. எனவே இதுபற்றி ரொறோண்டோவில் வாழும் ஒரு தமிழ் விஞ்ஞானி ஒருவரிடம் கேட்டேன். கூர்ப்பு பற்றி அவர் எடுத்த வகுப்பு ஆச்சரியமாகவிருந்தது. கூர்ப்பு பற்றி நான் இதுவரை கொண்டிருந்த புரிதல் திருத்தப்பட்டுவிட்டது.
முதலாவது, எல்லா யானைகளும் தந்தங்களோடு பிறப்பதில்லை. குறிப்பாக ஆசிய யானைகள். அநேகமான ஆபிரிக்க யானைகளுக்குப் பொதுவாகத் தந்தங்கள் இருக்கும். ஆனால் ஆசிய யானைகளில் பல பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருப்பதில்லை. காரணம் தந்தங்கள் இல்லாத காரணத்தால் அவை வேட்டையாடப்படுவதில்லை. இதனால் அதற்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் பலவும் தந்தங்களில்லாது பிறக்கின்றன (தாயின் மரபணுவைப் பின்பற்றி?). தந்தங்களில்லாத பெண் யானைகள் தமது குழந்தைகளைப் பாதுகாத்து பராமரித்து வளர்த்து விடுகின்றன. இதனால் பெண் யானைகள் வேட்டையாடுவார் இல்லாது பல்கிப் பெருகுகின்றன. தந்தங்களுடைய ஆண் யானைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டுவதில்லை. Survival of the weakest?.
ஆண் யானைகளுக்கு தந்தம் ஒரு முக்கியமான கருவி. மரங்களில் பட்டைகளை உரிப்பது முதல் போரிடுவது வரையில் அவற்றுக்கு தந்தங்கள் அவசியம். அதை விடவும் அது ஒரு பலத்தின் அடையாளம். தந்தங்கள் இல்லாமல் பிறந்த சில ஆண் யானைகள் இறந்த யானைகளின் தந்தங்களை எடுத்து தமது முகங்களில் பொருத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இருபினும் பெண் யானைகள் பலத்தை விடத் தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது வணக்கத்திற்குரிய ஒன்று.
இச்செய்தியின்படி பெண் யானைகள் தக்கனவா தகாதனவா? கருத்துக்களும் கூர்ப்படையக்கூடாதென்பதில்லையே!