புத்தாண்டு 2023

தலையங்கம்

இன்னுமொரு ஆண்டு தன் கடமையை முடித்துக்கொண்டு ஓய்வு பெறுகிறது. கோவிட் பெருந்தொற்றின் மூன்று வருட அட்டூழியத்தின் தடயங்கள் இன்னும் சோகக் குரல்களாக இருக்கையில் 2023 கடமையை ஏற்கிறது.

பெருந்தொற்றின் அதிர்வலைகள் ஓய்வதற்கு முன்பதாகவே போர்ப் பறைகள் ஓலமிடத் தொடங்கிவிட்டதால் தொற்று இரண்டாமிடத்தை எடுத்துவிட்டது. இரண்டுமே அதிகார வர்க்கத்திற்குப் பணமுலைகள். சுரந்து கொண்டே இருக்கும். இலாபம் போரினால் அதிகம் என்பதால் இன்னும் ஓரிரு வருடம் அது முன்னணியில் வைக்கப்படும். 2023 இன் தலையில் கடுமையான பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது.

சகல பேரழிவுகளும் மனித மனங்களில் பெருவடுக்களை விட்டுச் செல்லும். மாயா ஆஞ்சலூ கூறியது போல “மாற்ற முயற்சியுங்கள் முடியாவிட்டால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்” என்பதையே இப் பெருவடுக்கள் எமக்கு ஞாபகப் படுத்துகின்றன. பெருந்தொற்றை இல்லாதொழிக்க முடியவில்லை நாம் தான் மாறியிருக்கிறோம். எமது வாழ்வு முறைகள் கணிசமாக மாற்றமடைந்திருக்கின்றன. போரையும் இல்லாதொழிக்க முடியாது. எனவே நாம் தான் மாறவேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் மாற்ற முடியாதென நினைக்கப்பட்ட அரசியல் தலைமைகள் மாற்றப்பட்டிருக்கின்றன. மக்கள் மாறியமையின் காரணமாகவே இது சாத்தியமானது. இம் மாற்றம் கோவிட் பெருந்தொற்றின் ஒரு பக்க விளைவு. பெருந்தொற்று உலகப் பொருளாதாரத்தின் தொண்டையை நெருக்கியதன் விளைவு அது. அத்தனை சமூகங்களும் ஒரு சிறு மாற்றத்துக்குள் தள்ளப்பட்டுள்ளன. பக்க விளைவாக தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு மற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது போலத் தெரிகிறது. தமிழ் மக்கள் தம் கைகளை நம்பி வாழ்பவர்கள். அதனால்தான் அவர்களது கைகள் கட்டுப்பட்டன. இத்தளைகளை நீக்குவதே தனது முதற் கடமையாக 2023 வரித்துக் கொள்ளும் என நாம் நம்புகிறோம். அதற்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் தடங்கல்களாக எவரும் இருக்கக்கூடாது என நாம் மனதார வேண்டுகிறோம்.

எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்து!