புத்தாண்டு 2022
தலையங்கம்

2021 ஆம் ஆண்டைக் கடந்து வந்தது எல்லோருக்கும் பெரு மகிழ்ச்சி. 5.43 மில்லியன் உயிர்களைக் காவெடுத்துகொண்டு அது சென்றிருக்கிறது. இதுபோல் பல கொடிய வருடங்களை உலகம் கண்டு வந்திருக்கிறது.
‘குழப்பத் தத்துவம் ( chaos theory) என்று கணிதத்தில் உண்டு. உலகத்தில் சகல நிகழ்வுகளுக்குமிடையே ஒரு இடையிணைப்பு (interconnectivity) இருக்கிறது என்பதும் ஓரிடத்தில் ஏற்படும் சிறிய குழப்பநிலை கூட இன்னுமொரு இடத்தில் பாரிய பிரளயத்தின் தோற்றத்துக்குக் காரணமாய் அமைந்துவிடும் என்பதும் இப்பாரிய தத்துவத்தைப் புரிந்துகொள்ள ஒரு சிறு துளி. Butterfly effect என அழைக்கப்படும் இத் தத்துவத்தை ஒரு வண்ணத்துபூச்சியின் சிறகசைப்பினால் உந்தப்படும் காற்று இன்னுமொரு இடத்தில் பெரும் புயலாக மாறுகிறது என இதைப் புரிந்துகொள்ளலாம். ஒரு குழப்பத்தின் பின்னர் இயற்கை விசைகளால் திட்டமிட்டபடி ஒழுங்கு தன் நியமத்தைத் தீர்மானித்துக்கொள்ளும் என்பதையே இத் தத்துவம் வலியுறுத்துகிறது.
போர்கள் ஓய்ந்து கந்தக மணம் காற்றிடம் விடைபெற்றபோது உலகம் குதூகலித்தது, ஆனால் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. எங்கோ நடந்த ஒரு சிறிய நிகழ்வில் கோவிட்-19 என்ற வண்ணத்துபூச்சி சிறகசைத்தது. பிரளயம் இன்னும் முடிந்தபாடில்லை. ஒழுங்கு இன்னும் வந்தபாடில்லை. ஆனால் விரைவில் வருமென்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. அதைக் கொண்டுவரும் கடமையை இயற்கை எம் தலைகள் மீதுதான் சுமத்தியிருக்கிறது. இயற்கையோடு இணைந்து அதன் ஒழுங்கின்படி வாழுங்கள் என்பதை நினைவூட்டவே இக் கோவிட் பிரளயம்.
பிறந்ததிலிருந்தே அதற்கு உயிரூட்டிய, உணவூட்டிய உலகோடு உயிர்கள் சமரசமாக வாழ்ந்துவந்தன. மரங்களின் வேர்களில் தஞ்சம் கொண்டிருக்கும் பக்டீரியாக்கள் அதற்குப் பிரதியுபகாரமாக வளியிலிருக்கும் நைதரசனை உள்வாங்கி நைட்றேட் ஆக மாற்றிக்கொடுக்கின்றன. விலங்குகளின் வயிற்றில் தஞ்சம் கொண்டிருக்கும் நுண்ணுயிர்கள் உணவின் சமிபாட்டுக்கு வழிசெய்கின்றன. மனிதரின் வயிற்றிலிருக்கும் நுண்ணுயிர்கள் எமது சமிபாட்டு விடயங்களில் மட்டுமல்ல பிற எதிரிகளிடமிருந்து பாதுகாப்பையும் வழங்குகின்றன.
உயிரினங்களுக்கிடையேயான இந்த பரஸ்பர உறவு (sympayotic relationship) பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்று. அது உயிரினங்களுக்கிடையே மட்டுமான ஒன்றல்ல அவற்றின் சூழலான சடப்பொருட்களுமுடனானது தான். இந்த இடையிணை உறவினை முறிக்க எவர் முனைந்தாலும் அங்கு மீளொழுங்கைக் கொண்டுவர இயற்கை முனையும். கோவிட் பிரளயமும் அப்படியான ஒன்றுதான்.
கொறோணா வைரஸ் வடிவத்தில் ஆரம்பித்த இக் குழப்பம் கோவிட்-மனிதர் (Covid vs Goliath) போரை ஏற்படுத்தியதன் பின்னர் இப்போது தணிந்திருக்கிறது. மனிதர் தம்மிடம் தொழில்நுட்பம் என்ற வஜ்ஜிராயுதம் இருக்கிறது என்ற ஆணவத்தால் சற்றே ஆசுவாசமாக எடுத்துக்கொண்டிருந்தார்கள். விளைவு சுமார் 6 மில்லியன் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தனது பலத்தை நிரூபித்த கோவிட் “என்னைப் பேசாமல் இருக்கவிடு, உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன்” என்ற பலத்தோடு இப்போது சமரசத்துக்கு வந்திருக்கிறது. 2022இல் இப் போர்நிறுத்த ஒப்பந்தம் எழுதப்படுமென எதிர்பார்க்கலாம்.
இந்த விவகாரங்களில் எல்லாம் தம்முயிர்களையே அர்ப்பணித்து பிற உயிர்களைக் காப்பாற்றிய முன்னணி மருத்துவ தேவதைகளுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
எல்லோருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்!