புதுச்சேரி | 350 வருடங்களுக்குப் பிறகு புத்துயிர் பெறும் அலம்பறைக் கோட்டை
ஜனவரி 14, 2020

350 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் முஸ்லிம்களினதும், பிரஞ்சுக்காரரிரனதும் சின்னமாக விளங்கிய அலம்பறைக் கோட்டை மீண்டும் புத்துயிர் பெறுகிறது.
அகழ்வாராய்ச்சித் திணைக்களம் இதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறது. இதற்கான செலவாக ரூ.8.02 கோடி நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி கொடுத்துதவுகிறது. ஏழு மாதங்களில் இப்பணிகள் பூர்த்தியாகுமெனக் கூறப்படுகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் வட்டத்தில், சென்னை – புதுச்சேரி கிழக்குக்கரை வீதியில் அமைந்துள்ள, செங்கற்களினாலும், முருகைக்கற்களினாலும் கட்டப்பட்ட 15 ஏக்கர் கட்டிடம், 17ம் நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சியாளரால் நிறுவப்பட்டது. 1735 இல் நவாப் டோஸ்ட் அலி கானின் கட்டுப்பாட்டில் இருந்த இக் கோட்டை 1750 இல் பிரெஞ்சு ஆளுனர் ஜோசப் ஃப்ரான்சுவா டுப்பிளெக்ஸ் இற்கு தானமாகக் கொடுக்கப்பட்டது.
பிரான்ஸ் இக் கோட்டையைக் கையேற்றதும் ‘அலம்பரை வராகன்’ என்றொரு நாணயம் வெளியிடப்பட்டது. அப்போது அதன் பெறுமதி ரூ.3. ஆகும். உப்பு, ஆடைகள், நெய் ஆகியன இக் கோட்டையிலிருந்து மரக்காணம் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஒரு காலத்தில் வணிகத்தில் பிரபலமாக விளங்கிய இக் கோட்டை, 1760 இல் சேர் தோமஸ் அயர் கூட்டெ இக் கோட்டையக் கைப்பற்றியபோது மிக மோசமான அழிவுக்குள்ளாகியிருந்தது. அதன் பிறகு இன்றுவரை அது கவனிப்பாரற்றிருந்தது. கடற் காற்றின் பாதிப்பும், பராமரிப்பின்மையும் அதை மேலும் பாதித்திருந்தது.
மிகவும் தரமான வேலைப்பாட்டுடன் கட்டப்பட்டதாலேயே, 1.2 மீட்டர் அகலமுள்ள அதன் சுவர்கள் இந்தனை காலமும் தாக்குப்பிடிக்க முடிந்தது என மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கோட்டையின் உடைந்துபோன பகுதிகளுக்கு கர்நாடகாவிலிருந்து பெறப்படும் விசேட செங்கற்கள் பாவிக்கப்படுமெனவும் கழுகுமலையில் இருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்பு அவற்றின் ஒட்டு வேலைக்குப் பாவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாரம்பரிய கட்டுமான முறைகளை அனுசரித்து மேற்கொள்ளப்படும் இப் புனர்நிர்மாணத்தை ‘ஆர்க்கியோலொஜிகல் சேர்வே ஒஃப் இண்டியா’ மேற்பார்வை செய்கிறது.