பிரித்தானியாவால் விரைவில் பாவனைக்கென அங்கீகரிக்கப்படவிருக்கும் கோவிட் தடுப்பு மருந்தான அஸ்ட்றாசெனிக்கா, புதிய கோவிட் வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்குமென இம் மருந்தைத் தயாரிக்கும் அஸ்ட்றாசெனிக்கா நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி பஸ்கால் சோறியொட் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இத் தடுப்பு மருந்து ஏனைய தடுப்பு மருந்துகளைப் போல் செயற்திறனைக் கொண்டதல்ல எனப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஃபைசர், மொடேர்ணா ஆகியவற்றின் 95% செயற்திறனுடன் ஒப்பிடுகையில் அஸ்ட்றாசெனிக்காவின் செயற்திறன் 70% த்தில் இருக்கிறது. இதற்குப் பதிலளித்த சோறியொட், ” இரண்டு அளவுகளில் (doses) எங்கள்து மருந்தும் ஏனைய மருந்துகளைப் போல் செயற்திறனைக் காட்டுகிறது. அதை நான் இப்போது கூறமுடியாது, விரைவில் பிரசுரிப்போம்” எனத் தெரிவித்தார்.
அஸ்ட்றாசெனிக்காவின் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனைகளின் பெறுபேறுகளை பிரித்தானிய மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் தற்போது ஆராய்ந்து வருகிறது. ஜனவரி 2021 முதல் வாரத்தில் இம் மருந்து மக்கள் பாவனைக்கு வருமென பல ஊடகங்கள் எதிர்வுகூறியுள்ளன.
புதிய கோவிட் வைரஸுக்கு எதிராக இம் மருந்து பயனளிக்குமா என்று கேட்டதற்கு, “இதுவரை அது பலனளிக்க்மெனவே நாம் எதிர்பார்க்கிறோம். தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இப்போதைக்கு எம்மால் எதையும் உறுதியாகக் கூறிவிட முடியாது” என ஸோறியொட் பதிலளித்தார்.
நாட்டின் 24 மில்லியன் மக்களை (சனத்தொகையின் 43%) மிகக் கடுமையான நடமாட்ட முடக்கத்துள் தள்ளியதன் மூலம் பிரித்தானிய அரசு கோவிட் கட்டுப்பாட்டில் மிக இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறது.
பல நாடுகள் பிரித்தானியாவிலிருந்து பயணிகள் வருவதைத் தடை செய்துள்ளன.
பிரித்தானியாவில், ஃபைசர் தடுப்பு மருந்து ஏற்கெனவே பாவனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. டிசம்பர் 24 வரை, 600,000 மக்கள் இம் மருந்தை எடுத்துள்ளனர்.