புதிய ஆட்சியில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW)

Spread the love

பெப்ரவரி 17, 2020

சென்ற நவம்பர் மாதம் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தது முதல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களும், செயற்பாட்டாளர்களும் பாதுகாப்புப் படையினராலும், உளவு நிறுவனங்களினாலும் அச்சுறுத்தப்படுவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஞாயிறன்று வெளியிட்ட அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்துக்குக்கு உறுதிமொழி கொடுத்ததற்கிணங்க ‘காணாமற் போனவர்களைக்’ கண்டுபிடிக்க அரசாங்கம் முயற்சிகளை எடுப்பதோடு, அவற்றுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்குமுன் நிறுத்தவேண்டுமெனவும் அது அதனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கிலும், கிழக்கிலும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பாகப் பணியாற்றிவரும் ஆறு இடங்களைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பும், மிரட்டலும் மிக மோசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்குக் கூறியதாக அது தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுடனான கடைசிச் சந்திப்புக்கு முன்னதாக, பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் அத்தனை பேருக்கும் குறைந்தது ஆறு வித்தியாசமான உளவு நிறுவனங்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் சென்றிருந்ததென அவர்கள் கூறியதாக ஒரு செயற்பாட்டாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்குத் தெரிவித்திருக்கிறார். “கூட்டம் எங்கே நடைபெறவிருக்கிறது?”, “கூட்டத்தை யார் ஒழுங்கு செய்கிறார்கள்?”, “கூட்டத்தில் என்ன பேசப்படவிருக்கிறது?” என அத் தாய்மாரிடம் கேட்கப்பட்டதாக ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்திருக்கிறார். ” நாங்கள் வெளிப்படையாக எதையுமே செய்ய முடியாது. அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டோம்” என்று இன்னுமொரு செயற்பாட்டாளர் கண்காணிப்பகத்துக்குத் தெரிவித்திருக்கிறார்.

‘காணாமற் போனவர்களின் தாய்மார்’ என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர்- அவரது மகன் 2009 இல் வலிந்து காணாமலாக்கப்பட்டவர் -மனித உரிமைகள் கண்காணிப்பகத்துடன் பேசும்போது, புதிய ஜனாதிபதி பதவியேற்ற நாளிலிருந்து, காவற்துறையின் குற்ற விசாரணைப் பிரிவினர் பல தடவைகள் வந்து விசாரித்துச் சென்றிருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.

காணாமலாக்கப்படுவதில் இலங்கை அரசின் நீண்டகால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இச் சம்பவங்கள் நடைபெறவேயில்லை என்று அது தட்டிக்கழிக்க அனுமதிக்க முடியாது எனக் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. பெப்ரவரி இறுதியில் நடைபெறும் சந்திப்பின்போது, பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும் பாதுகாப்பதில் சர்வதேச சட்ட நியமங்களை அனுசரிக்க வேண்டுமெனவும், ஐ.நா. சபைக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கால நிரற்படி நிறைவேற்றும்படியும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென மனித உரிமைகள் ஆணையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் கண்காணிப்பகம் கேட்டுக்கொள்வதாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கை | பாராளுமன்றத் தேர்தல் காலவரையின்றி பின்போடப்பட்டது

Leave a Reply

>/center>