News & AnalysisSri Lanka

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும்வரை மாகாணசபைத் தேர்தல்கள் பின்போடப்படவேண்டும் – புத்த பிக்குகள்

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும்வரை மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவேண்டாமென சில புத்த பிக்குகள் ஜனாதிபதி ராஜபக்சவையையும், அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுள்ளார்கள்.

அதே வேளை சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் ஜனாதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டதற்கமையத் தேர்தல்களை நடத்துமாறு கோரியுள்ளனர்.

அதிகாரப் பகிர்வு, தேர்தல் முறைகள் விடயத்தில் பல மாற்றங்களைப் புதிய அரசியலமைப்பு கொண்டிருக்கின்ற படியால் அது நிறைவேற்றப்படும்வரை மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டாமென மார்ச் 29, 2021 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் 10 பேர்களைக் கொண்ட புத்த பிக்குகளின் குழு கேட்டுள்ளது.

பிரபல சட்டத்தரணி றொமேஷ் டி சில்வா தலைமையிலான 9 பேர் கொண்ட சட்ட நிபுணர்கள் குழுவொன்று புதிய அரசியமைப்புக்கான சட்ட வரைவை உருவாக்கி வருகின்றது.

“கூடிய விரைவில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துங்கள்” என ஜனாதிபதி ராஜபக்ச விடுத்த அழைப்பு பற்றிக் கேட்டபோது “அது மார்ச் 23 ஐ.நா. மனித உரிமைகள் சபை வாக்கெடுப்புக்கு முன்னர் கூறப்பட்டது. மேற்கு நாடுகளினாலும் அவற்றின் கூட்டாளிகளாலும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியாவை எதிர்த்து வாக்களிக்கத் தூண்டுவதற்காகவே ஜனாதிபதி அப்படி அறிவித்திருந்தார். ஆனால், எதிர்த்து வாக்களிக்காதது மட்டுமல்ல இந்தியா, 13 வது திருத்தம் முற்றாக அமுல் செய்யப்படவேண்டும் என்பதோடு மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டுமெனவும் இலங்கையை நிர்ப்பந்தித்துள்ளது” என பிக்குகள் குழு தெரிவித்துள்ளது.

ஒரு உள்நாட்டு விவகாரம் பற்றி, ஜெனிவா ம.உ.சபையில் ஏன் இந்தியா தலையிடவேண்டுமென அவர்கள் கேள்வியெழுப்பினர். எனவே, தேவையற்ற அழுத்தங்களுக்கு இலங்கை பணிந்துவிடக்கூடாது என்பதோடு, 2019 ஜனாதிபதி தேர்தலிலும், 2020 பாராளுமன்றத் தேர்தலிலும் ஆணையைத் தந்த மக்களை ஏமாற்றிவிடவேண்டாமெனவும் தாம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய மாகாணசபைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுதல் பற்றியும், இதன் மூலம், பழைய சட்டத்தின் பிரகாரம் தேர்தல்களை நடத்த வழிசெய்வதனால் வரக்கூடிய ஆபத்துகள் பற்றியும் இக் குழு எச்சரித்துள்ளது. பெருந்தொற்றிநால் மக்கள் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் இத் தருணத்தில் மாகாணசபைத் தேர்தல்களுக்குப் பெருந்தொகையான பணத்தைச் செலவழிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் புத்த பிக்குகள் எச்சரித்துள்ளனர்.

இதே வேளை, பொதுஜன பெரமுன கட்சி ஸ்தாபகர் பசில், பிரதமர் மஹிந்த, ஜனாதிபதி கோதாபய அனைவருமே மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டுமெஅன்க் கோரியிருந்தார்கள். எந்த அரசியலமைப்பிந் கீழ் தேர்தல்கள் நடைபெறவேண்டுமென்பதைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. ஆனால் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட்டேயாக வேண்டும். மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளின்றித் தொடர்ந்தும் செயற்படக்கூடாது. மேலும் தாமதப்படுத்தாமல் தேர்தல்கள் நடத்தப்படவேண்டுமென மாகாண சபை உறுப்பினர்களின் அமைப்பு வலியுறுத்தி வருகின்றது.

மாகாணசபைத் தேர்தல்களுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இவ் விடயத்தில் மனதை மாற்றி தேர்தல்கள் நடைபெற வழிசெய்யவேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.