புதிய அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்பட்டதும் த.தே.கூ. தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் – எம்.ஏ.சுமந்திரன்
ஆகஸ்ட் 31, 2020: புதிய அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்பட்டதும் த.தே.கூட்டமைப்பு தனது நிலைப்பாடு, எதிர்கால செயற்பாடுகள் ஆகியன பற்றி அறிவிக்குமென பா.உ. எம்.ஏ..சுமந்திரன் தெரிவித்தார்.
சனியன்று வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுடன் பேசிய பா.உ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட, வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
தேர்தலுக்குப் பின்னான கட்சியின் முதலாவது கூட்டமாகையால், தேர்தலில் கட்சி சந்தித்த பின்னடைவு பற்றியே கூட்டத்தில் பெரும்பாலும் பேசப்பட்டது எனச் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
“கட்சியின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக, கட்சியின் தலைவருக்குத் தெரியாமல் அதன் செயலாளர், தேர்தல் ஆணையத்திற்குப் பெயரை அறிவித்தமை தவறு என்பதை ஏற்றுக்கொண்ட மத்திய குழு, அந்நியமனத்தை அங்கீகரிப்பதாகவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது
கூட்டம் பற்றித் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில், தேர்தலில் கட்சி எதிர்கொண்ட பின்னடைவு குறித்து கருத்துப்பகிர்வு மேற்கொள்ளப்பட்டது எனவும், இருப்பினும் அதுபற்றி மேலும் அறிவதற்கு ஒரு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகும் தெரிவித்தார்.
அத்தோடு, தேர்தல் பிரசாரத்தின்போது பகிரங்கமாக, பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் கட்சித் தலைவர்களைப் பற்றி எழுதியவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிறிதொரு குழுவொன்ற நியமிப்பதெனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.