புதிய அரசியலமைப்புடன் புதிய தேர்தல் முறையும் விரைவில் அறிவிக்கப்படும் – கோதாபய ராஜபக்ச
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி, புதிய தேர்தல் முறைமையுடன் கூடிய புதிய அரசையலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருட நிறைவை முன்னிட்டு அநுராதபுரம், சாலியபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின்போது உரையாற்றிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச மேற்படி வாக்குறுதியை அளித்துள்ளார்.
“ஒரு நாடு, ஒரு சட்டம்” என்ற முறைமையின் கீழ் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு, ஊழலில்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஆதரவை நல்க வேண்டுமென அவர் தனது உரைமூலம் கேட்டுக்கொண்டார்.
1949 இல் நிறைவேற்றப்பட்ட இராணுவச்சட்டம் 17 இன் பிரகாரம் இலங்கையின் இராணுவம் உருவாக்கப்பட்டது. இதில் 25 காலாட்படை, ஆதரவு மற்றும் சேவைப் பிரிவுகள் அடங்கும்.
சாலியபுரத்தில் அமைந்துள்ள கஜபா படையணித் தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டிடத்தைத் திறந்து வைத்ததோடு புதிய விளையாட்டரங்குக்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி நாட்டி வைத்தார்.