• Post category:World / Health
  • Post published:November 13, 2020
புதிய அமெரிக்க அரசின் கோவிட் செயலணி இணைத் தலைவராக டாக்டர் விவேக் மூர்த்தி நியமனம்

புதிய அமெரிக்க அரசின் கோவிட் செயலணி இணைத் தலைவராக டாக்டர் விவேக் மூர்த்தி நியமனம்


ஜனவரியில் பதவியேற்கவிருக்கும் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதி ஜோ பைடன், கோவிட் நோயைக் கட்டுப்படுத்த நிறுவியிருக்கும் செயலணியின் இணைத் தலைவராக இந்திய பூர்வீகத்தைக் கொண்ட டாக்டர் விவேக் மூர்த்தியை நியமித்திருக்கிறார்.

கன்னட பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்த விவேக் மூர்த்திக்கு இப்போது 46 வயது. ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த இவர், ஒபாமா நிர்வாகத்தில் (2013) அமெரிக்காவின் சேர்ஜென் கெனெரலாக நியமிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி சேர்ஜென் ஜெனெரல் இவராவார். 2011 இல் ஜனாதிபதி ஒபாமாவின் சுகாதார ஆலோசகராக கடமையாற்றினார். 2017ல், ட்றம்ப் பதவியேற்றதும் சேர்ஜென் கெனெரல் பதவியிலிருந்து இவரை நீக்கிவிட்டு இவரது உதவியாளரை அப்பதவிக்கு நியமித்தார்.

அத்தோடு, அமெரிக்க கடற்படையில் வைஸ் அட்மிரலாகப் பணியாற்றிய மிகவும் வயதில் இளமையானவராகவும் பெயரெடுத்திருப்பவர்.

இங்கிலாந்தின் யோர்க்‌ஷயர் நகரத்தில் ஹட்டர்ஸ்ஃபீல்ட் என்னுமிடத்தில் 1977இல் பிறந்த டாக்டர் மூர்த்தி மூன்றௌ வயதாகவிருக்கும்போது பெற்றோருடன் அமெரிக்கவுக்குக் குடிபெயர்ந்தார். ஹாவார்ட், யேல் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மற்றும் வியாபார முகாமைத்துவ பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்த நாட்களில் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் HIV/AIDS கல்வியை ஊக்குவிப்பதற்காக VISIONS என்னும் இலாபநோக்கற்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக எட்டு வருடங்கள் பணியாற்றினார். 1997 இல் இந்தியாவில் பெண்களை சமூக சுகாதாரப் பணியாளர்களாகப் பயிற்றுவிக்க சுவாஸ்த்ய சமூக சுகாதார அமைப்பொன்றின் இணை நிறுவனராக இருந்தார்.

தற்போது Doctors for America என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருக்கிறார். அமெரிக்க முழுவதும் 15,000 மருத்துவர்களையும், மருத்துவ மாணவர்களையும் அங்கத்தவர்களாகக் கொண்ட இவ்வமைப்பு நோயாளிகளுக்கு உயர்தர மலிவான சிகிச்சை சேவைகளை அளித்து வருகிறது.

Print Friendly, PDF & Email