புதியதோர் உலகம் செய்வோம்
சிவதாசன்
[இக் கட்டுரை 1987ல் மொன்றியாலிலிருந்து ஈழத்தமிழர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட மாத சஞ்சிகையான ‘தமிழ் எழில்’ இல் ‘சிவதாசன் எழுதுகிறார்’ என்ற பத்தியில் பிரசுரமானது]
நடந்தே விட்டது.
நாம் ஒன்றை நினைக்கத் தெய்வமும் அதையே நினைத்து விட்டது – வழக்கத்திற்கு மாறாக!
இந்தியத் துருப்புக்களின் திடீர்ப் பிரசன்னம் ஈழ மண்ணிற்குக் கிடைத்திருக்கிறது.
பலர் விசனிக்கிறார்கள். ‘குய்யோ முறையோ’ என்று குமுறுகிறார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாத நம் மக்கள் மகிழ்கின்றார்கள், ஆரவாரிக்கின்றார்கள். அவர்கள் மகிழ்ச்சி அளப்பரியது. அவர்கள் காப்பற்றப்பட்டு விட்டார்கள்.
இன்னும் ஒரு ‘தீர்வும்’ கிடைக்கப் பெறவில்லை. இந்தியா லெபனானில் போல ஒரு ‘இடை வேளை’ யையே வாங்கித் தந்திருக்கிறது. ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதானாலுங்கூட இராணுவத் தலையீடு தான் வழி என்னும் அறிவுபூர்வமான மெய்ப்பாடு இங்கே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
மக்களின் விருப்பமில்லாது ஒரு அரசியல் தீர்வைத் திணிக்க முடியாது. அது காயத்துக்கு மருந்தில்லாத பிளாஸ்டர் போடுவதைப் போல. நிர்ப்பீடன ஆற்றல் இருக்கின்ற உடம்பிற்கு மருந்தோ பிளாஸ்டரோ தேவையில்லை. காயம் தானாகவே மாறிவிடும். அது இல்லாத போது புண் மேலும் புரையோடி பல விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கிவிடும்.
‘உணவு விநியோகம்’ என்ற பெயரில் இந்தியா நாடி பார்த்ததன் விளைவே இந்த இந்தியத் துருப்புக்களின் ‘ஈழ தரிசனம்’. மக்கள் துயரம், அவர்கள் விருப்பம், அரச/தமிழ்ப் படைகளின் பலம் இவற்றையெல்லாம் தெளிவாகக் கணித்த பின்னரே இந்தியா தலையிட்டு இருக்கிறது.
இவையெல்லாவற்றிலும் இந்தியாவின் அனுமானம் சரியானதாகவிருக்க வேண்டுமென்பதே எமது விருப்பம். அப்படியிருந்தால் சரியானதொரு அரசியல் தீர்வு சாத்தியமாகவும் கூடும்.
இந்தியா நமக்குப் பெற்றுத்தந்திருக்கும் ‘இடைவேளை’யின் போது நம் மக்களுக்கும் தலைவர்களுக்கும் சில கடமைகளுண்டு.
எவருடைய நிர்ப்பந்தமுமின்றி சுயமாக, நிதானமாகச் சிந்தித்து தலைவர்கள் முன்வைக்கும் அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டோ அல்லது நிராகரித்தோ ஒரு முடிவைத் தெரிவிக்க வேண்டும். கடந்த கால அனுபவங்களைக் கணக்கிலெடுத்து அரசியல் முதியவர்களின் ஆலோசனைகளை அனுசரித்து மக்களுக்கு ஏற்றதொரு தீர்வை பேரம் பேசிப் பெற்றுக் கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட தலைவர்களின் கடமை.
காரியம் நிறைவேறுமட்டும் நம் மக்களுடன் தாளம் தப்பாது சதிராட வேண்டியது இந்தியாவின் கடமை.
இக்கடமைகள் நிறைவேறின் அமைதியான, பரிபூரணமான நிரந்தரமான தீர்வு எம்மக்களுக்குக் கிடைக்கும்.
இல்லாவிடில் கதை ‘யாவும் கற்பனை’ யில் முடிந்து விடும்.