புட்டின்-செலென்ஸ்கி நேரடி சந்திப்புக்குத் தயார் – துருக்கி ஒழுங்கு செய்கிறது
நேட்டோவில் இணைவதைத் தவிப்பதற்கு யூக்கிரெய்ன் இணக்கம்?
நேற்று (மார்ச் 17) ரஷ்ய அதிபர் புட்டினுக்கும் துருக்கி அதிபர் ரேயிப் எர்டோகனுக்குமிடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதன் பிரகாரம் ரஷ்ய-யூக்கிரெய்ன் நாடுகளின் தலைவர்கள் இருவருக்குமிடையிலான நேரடி சந்திப்பு ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
புட்டின் – செலென்ஸ்கி இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய அதிபர் 6 நிபந்தனைகளை முன்வைப்பார் எனவும் அவற்றில் நேட்டோ தவிர்ப்பு உடபடப் பலவற்றை செலென்ஸ்கி ஏற்றுக்கொள்ளலாமெனவும் எர்டோகனின் ஆலோசகரான இப்ராஹிம் கேலின் அவர்களை மேற்கோள் காட்டி, பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இச் சந்திப்பின்போது ரஷ்யா முன்வைக்கவிருக்கும் 6 நிபந்தனைகளில் முதல் நான்கும் பெரும்பாலும் செலென்ஸ்கியால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவை எனவும், மிகுதி இரண்டையும் நிறைவேற்றுவது செலென்ஸ்கிக்குச் சிரமமாக அமையலாம் எனவும் தான் நம்புவதாக கேலின் தெரிவித்துள்ளார்.
இவற்றில் முக்கியமான் நிபந்தனை “யூக்கிரெய்ன் எப்போதுமே நடுநிலையான நாடாக இருக்க வேண்டும்; எச் சந்தர்ப்பத்திலும் அது நேட்டோவில் இணையக்கூடாது”. இந் நிபந்தனைக்கு செலென்ஸ்கி ஏற்கெனவே இணங்கிவிட்டார் எனக் கூறப்படுகிறது.
மீதி 5 நிபந்தனைகளிலும் இன்னுமொரு முக்கியமானதும் செலென்ஸ்கிக்குப் பிரச்சினை தரக்கூடியதுமான ஒன்று – “எக்காலத்திலும் யூக்கிரெய்ன் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதற்காக அது தன்னிடமுள்ள ஆயுதங்களைக் களைய வேண்டும்”.
மீதமுள்ள 3 நிபந்தனைகளில் இரண்டு இலகுவானவை. ஒன்று யூக்கிரெய்ன் நாட்டில் ரஷ்ய மொழிக்குப் பாதுகாப்பு வேண்டும். அடுத்தது யூக்கிரெய்ன் நாட்டிலிருந்து நாஜிகள் களையப்படவேண்டும். செலென்ஸ்கி ஒரு யூதராக இருப்பதும், அவருடைய உறவினர்கள் ஹிட்லரினால் படுகொலை செய்யப்பட்டதும் இவ் விடயத்தில் செலென்ஸ்கி இணக்கப்படுவதற்கு வாய்புக்கள் உண்டு என எதிர்பார்க்கலாம்.
இதே வேளை செலென்ஸ்கிக்குத் தலையிடியத் தரக்கூடியதும், இறுதியானதுமான நிபந்தனை இதுதான். “2004 இல் பிரிந்துபோன கிரைமியா பிரதேசம் ரஷ்யாவுக்கு உரியது என்பதற்கு இணங்குவதோடு கிழக்கு யூக்கிரெய்னிலிருக்கும் பிரிவினைப் பிரகடனங்களைச் செய்த டொன்பாஸ் பிரதேசங்களைப் பிரிந்துபோக அனுமதிக்கவும் வேண்டும்” என்பதாகும்.
இந் நிபந்தனை செலென்ஸ்கியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருப்பதற்கான சாத்தியங்களுமுண்டு.
புட்டினின் இந் நிபந்தனைகள், தேவையற்ற போரென உலகத்தால் கண்டிக்கப்படும் இப் போரிலிருந்து வெற்றியுடன் வெளியே வந்து தனது முகத்தைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற விருப்புடன் முன்வைக்கப்படுவனவாக இருக்கலாம். அதே வேளை நேட்டோ தவிர்ப்பு விடயத்தில் மட்டுமே ஆரம்பத்திலிருந்து ரஷ்யா விடாப்பிடியாக இருந்து வருவதும் அதற்கு ஆரம்பத்திலேயெ இணக்கம் தெரிவித்திருந்தால் இத்தனை மனித, உடமைப் பேரழிவுகளையும் தவிர்த்திருக்க முடியுமே என மக்கள் செலென்ஸ்கி மீது வெறுப்பை உமிழவும் சாத்தியமுண்டு. இதனால் அவருக்கும் ‘முகம் காக்கும்’ வழிமுறையொன்றைக் கொடுப்பது அவசியமென்ற வகையில் புட்டினின் அத்தனை நிபந்தனைகளையும் செலென்ஸ்கி ஏற்றுக்கொள்வார் எனக் கருதுவதற்கு இடமில்லை.
எனவே இவற்றைப் பேசித் தீர்க்க செலென்ஸ்கியுடன் தான் நேரடியாகச் சந்தித்துப் பேசவேண்டுமென புட்டின் நிர்ப்பந்தித்ததாகவும் அதன் மூலம் ஒரு இணக்கத்துக்கு வரமுடியுமெனப் புட்டின் கூறியதாகவும் இத் தொலைபேசி உரையாடலின்போது உடனிருந்த இப்ராஹிம் கேலின் பி.பி.சி. க்குத் தெரிவித்துள்ளார்.