புட்டினின் நோக்கம் என்ன? அணுவாயுதம் பாவிக்கப்படுமா?
சிவதாசன்
யூக்கிரெய்ன் படையெடுப்பு தொடங்கி ஒரு வாரமாகியும் ரஷ்ய படைகளினால் தலைநகர் கீவைப் பிடிக்க முடியவில்லை. 60 மைல் நீளமான தரைப்படை ஊர்வதை நிறுத்திவிட்டது. ஆகாயப் படை நிலைத்தைவிட்டு எழும்பவில்லை. கப்பற்படையின் நகர்வை, ரஷ்யாவின் சம்மதத்துடன், துருக்கி நிறுத்திவிட்டது.
மேற்குநாடுகளின் தரவுகளின்படி சுமார் 7,000 ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பல நூற்றுக்கணக்கான ரஷ்யப் படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. திருப்’போர்க்’ கடலைக் கடைந்து தொழில்நுட்பத் தேவர்கள் புதிய செய்திகளைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். எதை நம்புவது, எதை விடுவது என்னும் அந்த வடிகட்டும் வித்தையை மட்டும் எமக்கு எந்தக் கடவுளரும் அருளவில்லை.
இந்த நிலையில் புட்டினின் அடுத்த நகர்வு எப்படி இருக்கப் போகிறது என ‘மை போட்டுப் பார்த்ததில்’ (மை போடுவது என்பது காணாமற் போனவறரைக் கண்டுபிடிக்க மாந்திரீகர்கள் கையாளும் ஒரு முறை) குல தெய்வம் சில கதவுகளைத் திறந்து காட்டியது. இக் குலதெய்வத்தையும் அமெரிக்கா விலைக்கு வாங்கியிருந்தால் அது காட்டியவைக்கு நான் பொறுப்பல்ல.

வழக்கம்போல அமெரிக்க வெறுப்புடன் ஆரம்பிக்கிறேன் எனக் கசப்புற வேண்டாம். ட்றம்பின் தேர்தலுக்கு முன்னரிருந்தே அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததுபற்றிப் பல வாரங்கள் விசாரணைகள் நடைபெற்று பல்லாயிரக் கணக்கான பக்கங்களுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அமெரிக்க உள்ளக விடயங்களில் தேவையற்ற ரஷ்ய தலையீடு இருந்தது என்ற நிரூபணத்துடன் புதிய அதிபர் பைடனின் ஆன்மா அமைதியடைந்தது. இப்போது ரஷ்யப் படையெடுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் அது உருக்கொண்டெழுந்து ரஷ்ய மக்களுக்கு புத்தி போதனை செய்ய ஆரம்பித்திருக்கிறது. “ரஷ்ய ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம், புடம் போட்டெடுத்த அமெரிக்க செய்திகளை நம்புங்கள்” என அவர் சங்கூதி வருகிறார். ஒரே ஒரு வித்தியாசம் போலிச் செய்திகளைத் தயாரிக்கும் ரஷ்ய ஊடகங்கள் மேற்குலக வாசகர்களை, ரசிகர்களை அடைவதை அவர் வெற்றிகரமாகத் தடைசெய்துவிட்டார். ஊடக சுதந்திரம் பற்றி வாய் கிழியக் கத்திக்கொண்டிருப்பவர்கள் வாய்களைத் தைத்துக்கொண்டுவிட்டார்கள்.
ரஷ்ய அதிபர் புட்டினுக்கு புத்தி பேதலித்துவிட்டது என்ற செய்திகளும் சில பரபரப்பு ஊடகங்களினால் வெளியிடப்படுகின்றன. போர் முடிந்து பல வருடங்களின் பின்னர் தான் உண்மை நொண்டி நொண்டி வந்து சேர்வது வழக்கம். அதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கிறது. அணுவாயுதப் பொத்தானைக் கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்த ஜனாதிபதி ட்றம்பையும் ‘ஒரு விசரன்’ எனக் கூறியவர்கள் பலர். இப்போது புட்டின் தன் கைகளில் அணுவாயுத பொத்தானை வைத்து விளையாடிக்கொண்டிருப்பதை ட்றம்ப் ரசித்துக் கொண்டிருக்கிறார்.
புட்டினின் நடவடிக்கைகளை அவதானித்து அவரது குணாம்சங்களையும், திட்டங்களையும் அறிய /உய்த்துணரக்கூடிய வல்லமையோடு ஒரு நிபுணர் அமெரிக்காவில் இருக்கிறார். அவரது பெயர் ஃபையோன ஹில். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி நிர்வாகங்களில் பணியாற்றிப் பல தசாப்தங்களாக அவற்றுக்கு ஆலோசனை வழங்கி வந்தவர். உண்மைகளைப் பேசுபவர் என சிலாகிக்கப்படுபவர். அவரது அவதானிப்புகளின்படி புட்டின் அணுவாயுதப் பொத்தானை அழுத்தக்கூடிய மனநிலைக்கு வந்திருக்கிறார் என்கிறார். ஆனால் அது அவரது புத்தி பேதலித்த நிலையினாலல்ல எனவும் மாறாக அந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார் எனவும், அது மேற்கினால் மட்டுமல்ல அவருக்கு முந்திய ரஷ்ய, சோவியத் தலைவர்களினால் என்பதும் காரணம் என அவர் கூறுகிறார்.
“நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோமோ இல்லையோ நாம் ஏற்கெனவே மூன்றாம் உலகப் போரைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். யூக்கிரெய்னில் அது ஆரம்பித்துவிட்டது. வரலாற்றின் சமபவங்கள் எவை மீண்டும் நடைபெறக்கூடாது என நாம் செயற்பட்டு வந்தோமோ அவை மீண்டும் அரங்கேறுகின்றன” என்கிறார் ஹில்.
உலகில் சர்வாதிகாரிகள் தாமாக உருவாகவில்ல்லை. மாறாக உருவாக்கப்பட்டவர்கள். ஹிட்லர், முசோலினி, சதாம் ஹூசேய்ன், கடாஃபி எனப் பலரையும் உருவாக்கியது மேற்கத்தைய வணிகர்கள். அவர்களது பணத்தால் நிரப்பப்பட்ட கஜானாக்களே போர்களின்போது பாவிக்கப்பட்டன. இவ் வணிக குலத்தின் தற்போதைய விளைபொருள் புட்டின். புட்டினைத் திருப்பி அனுப்புவதானால் அது யூக்கிரேனிய மக்களாலோ அல்லது நேட்டோவினாலோ முடியாது. மேற்கு நாடுகளின் மக்களாலும், வணிக நிறுவனங்களினாலும் மட்டுமே முடியும் என்கிறார் ஹில்.
“புட்டினது சமீபகால நடவடிக்கைகள் பல மனச் சஞ்சலத்தோடு எடுக்கப்படுபவையாக இருக்கின்றன. அணுவாயுதங்கள் உட்பட அவரது கைகளில் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அவர் பாவித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் எதைச் செய்யமாட்டார் என நாம் கூறிக்கொண்டிருந்த போதெல்லாம் அவர் அவற்றைச் செய்தது மட்டுமல்லாது தான் அப்படியானவர் என்பதை எமக்குத் தெரியப்படுத்துவதற்காகவே செய்பவராகவும் காணப்படுகிறார். இதற்காக நாம் பயப்படவேண்டுமென்று சொல்லவில்லை ஆனால் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என எச்சரிக்கிறார் ஹில்.
“புட்டினின் படையெடுப்பு யூக்கிரெய்ன் இராணுவத்துக்கு எதிரானதல்ல. அதனாலேயே அது நத்தை வேகத்தில் நகர்கிறது. மேற்கு நாடுகள் பரவலாக எதிர்பார்த்து விமான எதிர்ப்பு ஏவுகணைகள், பீரங்கிகளுடன் காத்திருந்தும் ரஷ்ய விமானப் படைகள் தலைகாட்டவில்லை என்பது மேற்கு இராணுவ நிபுணர்களுக்கு குழப்பமாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து யூக்கிரெய்ன் இராணுவத்தினருக்கு புட்டின் தந்துவரும் ஆலோசனை ‘போதைவஸ்து அருந்தும் உங்கள் நாஜி ஆட்சியாளர்களைத் தூக்கியெறியுங்கள்’ என்பதே. அதனால் ஆரம்பத்தில் இராணுவத் தளங்கள் மீது ரஷ்ய தாக்குதல்கள் இடம்பெறவில்லை. தகவற் தொடர்பு நிலையங்கள், எண்ணைக் குதங்கள் போன்றனவே ரஷ்யாவின் இலக்குகள். எனவேதான் அதன் நகர்வு நத்தை வேகத்தில் இருக்கிறது.
“புட்டினின் தர்க்கரீதியான, திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் சமீப காலமானவையல்ல. 2007 இல் அவரது திட்டங்களுக்கான சுழி இடப்பட்டது. அப்போது நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் நடைபெறக்கூடாது என புட்டின் உலகிற்கும், குறிப்பாக ஐரோப்பாவிற்கும் எச்சரித்திருந்தார். அதையும் மீறி 2008 இல் நேட்டோவில் இணைவதற்கான அழைப்பை அது ஜோர்ஜியாவுக்கும் யூக்கிரெய்னுக்கும் வழங்கியது. அப்போது நான் தேசிய புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றினேன். நேட்டோவின் இவ்வழைப்பு எதிர்காலத்தில் பாரிய எதிர்வினைகளைச் சந்திக்கப் போகிறது. அது கிரைமியாவை மட்டுமல்ல யூக்கிரெய்ன், ஜோர்ஜியா ஆகியவற்றின் மீதான படையெடுப்புக்கு வழி வகுக்கலாம்” என நாம் எச்சரித்திருந்தோம்.
புக்கரெஸ்ட் உச்சி மாநாட்டில் நேட்டோ அழைப்பு விடுத்து நான்கு மாதங்களில் ரஷ்யா ஜோர்ஜியா மீது படையெடுத்தது. யூக்கிரெய்ன் தனது நேட்டோ விண்ணப்பத்தை மீளப் பெற்றுக்கொண்டதால் அதன் மீது படையெடுப்பு நடைபெறவில்லை. இச் சம்பவங்கள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்தத் தவறிவிட்டோம்” என்கிறார் அவர்.
புட்டினின் ரஷ்ய விரிவாக்கம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “உடைக்கப்பட்ட சோவியத் குடியரசை மீளக் கட்டியெழுப்புவது புட்டினின் நோக்கமல்ல. ஒருகாலத்தில் ரஷ்ய சாம்ராஜ்யம் எனக் கருதப்பட்ட நிலப்பரப்பில் ஒரு பகுதியே சோவியத் குடியரசுக்குள் இருந்தது. சமீபத்தில் புட்டினால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் ரஷ்யர்களும், யூக்கிரெய்ன் மக்களும் ஒரே மக்கள் என்பதை அவர் வலியுறுத்துகிறார். ஒரு காலத்தில் ரஷ்ய ஆட்சிக்குள் இருந்த, ரஷ்ய மொழி பேசிய அனைத்துக் ‘குடும்பத்தினரையும்’ மீளவும் ஒன்றிணைப்பதே அவரது கனவு.

இதை ஆராய்வதற்காக, கோவிட் தொற்றுக் காலத்தில் புட்டின் கிரெம்ளின் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பழைய வரைபடங்களை எடுத்து பழைய ரஷ்யாவின் எல்லைகளைத் தெரிந்துகொண்டார் எனவும் தெரியவந்தது. இரண்டாம் உலகப் போரின்போது உடைக்கப்பட்ட யூக்கிரெயின் சோவியத் உடைவின்போது முற்றாக இழக்கப்பட்டுவிட்டது என புட்டின் தனது பேச்சுக்களில் குறிப்பிட்டு வருகிறார். எல்லைகள் மாற்றப்பட்டாலும் பழைய ரஷ்ய சாம்ராஜ்யத்தின் எல்லைகள் இன்னமும் அப்படியே இருக்கின்றன என்பதுவே புட்டினின் தற்போதைய நிலைப்பாடு.
கிரைமியாவைப் போலவே இழந்துபோன இந்த நிலங்களையும் இணைத்து ரஷ்ய கூட்டரசைக் கட்டியெழுப்புவதே புட்டினின் நோக்கம். கசாக்ஸ்தான் மீதும் தற்போது அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. சீனாவுக்கும், ரஷ்யாவுக்குமிடையில் தொங்கு நிலையில் இருக்கும் இந் நாட்டை நிரந்தரமாக ரஷ்ய குடியரசில் இணையும்படி ரஷ்யா வற்புறுத்துகிறது. ஆஜர்பஜான் ஏற்கெனவே ரஷ்யாவுடன் இருதரப்பு இராணுவ ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுவிட்டது. பெலாருஸ் கைமுறுக்கப்பட்டு இப்போது ரஷ்யக் குடும்பத்துக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. யூக்கிரெயினைப் பொறுத்தவரையில் சோவியத் உடைவுடன் கொஞ்சம் கைநழுவிப் போயிருந்தது. இப்போது புட்டின் கூறுவது ‘யூக்கிரெய்ன் யூக்கிரெய்ன் மக்களுடையதல்ல அது ரஷ்ய மக்களினுடையது’ என்பதே. டொணெட்ஸ்க், லுஹான்ஸ்க் இல் ஆரம்பித்து ஒடிசா வரையிலுள்ள பிரதேசங்களை புட்டின் விரைவில் கையகப்படுத்தி விடுவார். 2014 இல் ஆரம்பித்து தடைப்பட்ட அவரது ‘நொவொரொஸ்யா’ (New Russia) பயணம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான படைபலமும் அவரிடமிருக்கிறது” என்கிறார் ஃபையோனா ஹில்.
மூலம்: மோறா றெணொல்ட்ஸ் / பொலிற்றிக்கோ