சிவதாசன்

பி.பி.சி. சம்பவம்: மோடி அரசை வீழ்த்துவதற்கான மேற்கின் சதியின் ஆரம்பம்?

சிவதாசன்

கடந்த மாதம் நடைபெற்ற அல்லது பிரபலப்படுத்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் உலகின் வல்லாதிக்க சக்தி ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட உலக உழுங்கு மாற்றத்தின் ஒரு அங்கமா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நீண்ட காலத் திஉட்டங்களுடன் இப்படியான உலக ஒழுங்கு மாற்றங்களைச் செய்யக்கூடிய ஒரே நாடு அமெரிக்கா என்பதில் சந்தேகமில்லை. ஐந்து கண்கள் எனப்படும் அதன் ஆங்கிலோ சக்சன்ஸ் அடிவருடிகள் அதற்குத் துணைபோவதும் புதிய விடயமல்ல.

மோடியின் இந்துத்வ ஆட்சி மிகவும் விரும்பப்படாத ஒன்றாக இருப்பினும், இந்தியாவை ஒன்றிணைத்து ஒரு பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப வல்லரசாக்குவதற்கு பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட ஆயுதம் இந்துத்வா தான். அது அவர் விரும்பிய விளைவைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இந்தியாவின் இந்த வெற்றிக்கான பெரும்பொறுப்பும் மோடியின் மீதே அமர்ந்திருக்கிறது.

யூக்கிரெய்ன் போரின் பின்னணியில் இந்தியாவின் இப்பன்முக வளர்ச்சி அமெரிக்க நோக்கங்களைப் புறந்தள்ளி இந்தியா தனக்கேயுரிய தனித்துவமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு உதவியிருக்கிறது என்பதும் உண்மை. இதனால் தான் அது மேற்கின் பொருளாதாரத் தடைகளையும் மீறி ரஸ்யாவுடனும் ஈரானுடனும் வர்த்தகம் செய்துகொள்ள முடிகிறது. இதை நிறுத்த முயன்று தோற்றுப்போன அமெரிக்கா இப்போது தனது வழமையான கபட நாடகங்களில் இறங்கியிருக்கிறது எனவே நம்பவேண்டியிருக்கிறது.

பி.பி.சி. சம்பவம்

2002 இல் குஜராத்தில் நடைபெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தின்போது சுமார் 1,000, பெரும்பாலும் முஸ்லிம்கள் இந்துக்களால் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு முன்னர் இந்துக்கள் பயணம் செய்த ரயில் வண்டியொன்று முஸ்லிம்களால் தீயிட்டுக்கொழுத்தப்பட்டதென்றும் அதில் சுமார் 60 இந்துக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்றும் அதன் பழிவாங்கலே 1,000 முஸ்லிம்களின் கொலை எனவும் பரவலாகக் கூறப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு பி.பி.சி.யால் வெளியிடப்பட்ட ஆவணத் திரைப்படமொன்றில் இச்சம்பவத்தோடு பிரதமர் மோடியை இணைத்துக் கூறப்பட்டிருந்ததென்பதுமே இப்போதைய பிரச்சினை. எனவே பி.பி.சி. யின் இந்த ஆவணத் திரைப்படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கண்டன ஊர்வலங்கள் சமீபத்தில் நடைபெற்றிருந்தன. இவ்வாவணத் திரைப்படத்தை வெளியிடாமல் தடைசெய்ய மோடி அரசு முயன்றதெனவும் கூறப்பட்டது.

2014 இல் மோடியின் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்து அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சின் திட்டப்படி இந்தியாவை ஒரு இந்துமதத்தை மையமாகக்கொண்ட நாடாகக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் பிரதமர் மோடி வெற்றிகரமாகவும் செயற்பட்டு வருகிறார். ஆனால் அதன் வெற்றி இந்துத்வத் திட்டங்களையும் மீறி அதன் அடுத்த கட்ட நகர்வான உலக அணுவாயுத வல்லரசுகளில் ஒன்றாக நிர்மாணிக்கும் போட்டிக்குள் இந்தியாவைத் தள்ளிவிட்டிருக்கிறது. இந்த இடத்தில் தான் அமெரிக்க / மேற்கு வல்லாதிக்க சக்திகள் எரிச்சலுக்குள்ளாகின்றன.

இவ்விடயத்தில் மோடியின் அரசு மிகவும் அவதானமாக நடந்துகொண்டு வருகிறது. குறிப்பாக நீண்டகால எதிரியான சீனாவுடன் பலதடவைகள் ஏற்பட்ட எல்லை முறுகல்களை அது மிகவும் சாதுர்யமாகச் சமாளித்து விட்டது. இவ்விடயத்தில் BRICS எனப்படும் அமைப்பில் இந்தியா, ரஸ்யா, சீனா போன்றவற்றின் கூட்டு யூக்கிரெய்ன் போரில் ரஸ்ய தரப்ப்பின் பலத்தை அதிகரித்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவின் முன்னேற்றத்தைக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரவேண்டிய தேவை இப்போது அமெரிக்க நேச நாடுகளுக்கு வந்திருக்கிறது. பி.பி.சி.யும் இந்த நிகழ்ச்சி நிரலில் தான் இயங்குகிறது என்பதையே இந்த ஆவணப் படம் காட்டுகிறது என்றே இந்திய கொள்கைவகுப்பாளர்கள் நினைக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக நேற்று (பெப் 14) இந்தியாவின் பி.பி.சி. அலுவலகத்தை இந்திய வருமான வரித் திணைக்களம் முற்றுகையிட்டுத் தேடுதல்களை நடத்தியிருக்கிறது. இவ்விடயத்தில் இந்தியா இன்னும் கற்கால நாகரிகத்தில் இருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது. இருப்பினும் பி.பி.சி.யின் ஆவாணத் திரைப்பட வெளியீட்டின் காலநிரல் குறித்தும் சந்தேகப்படவேண்டியிருக்கிறது. அத்தோடு பிரித்தானிய அரசின் வசமிடமிருந்த 2002 படுகொலை பற்றிய பிரத்தியேக தகவல்களை பி.பி.சி பிரித்தானிய அரசிடமிருந்து பெற்று இவ்வாவணத் திரைப்படத்தில் சேர்த்திருக்கிறது. அதே வேளை இலங்கையின் இறுதிப்போரின்போது பிரித்தானிய அரசினால் சேகரிக்கப்பட்ட பல பிரத்தியேக தகவல்களை வெளியிடுவதற்கு அது மறுத்துவிட்டது என்பதையும் இங்கு நாம் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். எனவே பி.பி.சி.யின் இந்நடவடிக்கை மோடி அரசுக்கு எதிரான ஒரு பிரசார நடவடிக்கை என மோடி ஆதரவாளர்கள் இரைச்சலிடுவதிலும் காரணமில்லாமலில்லை.

அதானி குழுமம்

இதே வேளை இந்தியாவின் – அல்லது மோடியின் – அல்லது பா.ஜ.க.வின் – வெற்றியின் முகமாகக் காட்டப்பட்டு வந்த உலகப் பெரும் தனவந்தர்களில் ஒருவரான அதானியின் நிறுவனமும் கடந்த சில நாட்களில் மிகப்பெரிய பல்டியை அடித்துவருகிறது. அவரது நிறுவனமான அதானி குழுமம் பங்குச் சந்தைகளில் தமது பங்குகளின் பெறுமதியை ஊதிப்பெருப்பித்தமையினால்தான் அவரால் உலகின் இரண்டாவது அதி பெரிய பணக்காரர் என்ற இடத்தை அடைய முடிந்தது என அமெரிக்க பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டென்பேர்க் றிசேர்ச் ஜனவரி 24 அன்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு விலைகள் அதல பாதாளத்தை நோக்கி வீழ்ந்துகொண்டிருக்கிறது. அதானி இப்போது உலகின் 20 ஆவது பணக்காரரிலும் கீழே தள்ளி விழுத்தப்பட்டுவிட்டார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

வீழ்ச்சிக்கு முன்னர் அதானி குழுமத்தின் சந்தைப் பெறுமதி $218 பில்லியன்கள். போக்குவரத்து (துறைமுகம்), உட்கட்டுமானம், சுரங்கம் எனப் பலதுறைகளிலும், உலகின் பல நாடுகளிலும் தனது கரங்களை ஆழமாகப் பதித்துள்ள அதானி குழுமம் இந்தியாவில் போலவே இந்நாடுகளிலும் ஊழல் அரசியல்வாதிகளைக் கையகப்படுத்திக்கொண்டு உள்ளூர்ச் சட்டங்களைத் தனக்கு இசைந்த வழியில் வளைத்துப் போட்டு தனது இலாபத்தைப் பெருக்கிக் கொள்கிறது என சூழலியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலகாலமாகக் கூறிவருகிறார்கள்.

அமெரிக்க ‘ஹிண்டென்பேர்க் றிசேர்ச்’ நிறுவனத்தின் அறிக்கையின்படி பங்குகளின் பெறுமதியைச் செயற்கையாக ஊதிப்பெருக்கும் நடவடிக்கைகளையும் கணக்கு வழக்குகளைப் பொய்யாகக் காட்டும் நடவடிக்கைகளையும் அதானி குழுமம் பல தசாப்தங்களாகச் செய்துவருகிறது எனப்படுகிறது. அதானி முழுமத்தின் முன்னாள் பணியாளர்களிடம் பேசியும், குழுமத்தின் பல ஆவணங்களைப் பரிசீலித்தும், ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள அதானி குழுமத்தின் அலுவலகங்களில் விசாரணைகளை மேற்கொண்டும் ‘ஹிண்டென்பேர்க்’ இந்த்க முடிவை எடுத்துள்ளதாகச் சொல்கிறது. நிறுவனத்தின் பெறுமதியை ஊதிப்பெருக்கிக் காட்டுவதன் மூலம் அதானி குழுமம் பெருந்தொகையான கடன்களைப் பெற்றிருக்கிறது எனவும் அது தெரிவிக்கிறது.

அதானி குழுமத்தின் இப்பெருவீழ்ச்சி தற்போது உலகப் பெருநகரங்களில் பேசுபொருளாக ஆகியிருக்கிறது. அத்தோடு உள்ளூர் (இந்திய) பங்குச் சந்தையையும் அது தற்காலிகமாக சரிவடையைச் செய்திருந்ததது. பல சிறிய பங்கு முதலீட்டாளர்கள் அதானி குழுமத்தை விட்டு பெருந்தொகையையாக விட்டு ஓடத் தொடங்கியிருந்தார்கள். ஆனாலும் இந்திய ‘தேசிய பொருளாதாரக் காவலர்கள்’ இந்திய சந்தையை வெற்றிகரமாக மீட்டெடுத்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பெரும்பாலான இந்திய ஊடகங்கள் அதானி – மோடியைச் சுற்றிக் காப்பரண்களைப் போட்டு வருவது இப் பிரச்சினையை ஒரு இந்திய எதிர்ப்பு நாசகார நடவடிக்கை எனக் காட்டி இந்திய சந்தையைப் பாதுகாக்க முற்படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகின்றது.

பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் உலக வல்லாதிக்கப் போட்டிகளில் யப்பான், ஜேர்மனி ஆகிய நாடுகளைப் போன்று ‘பேசாமல் பின்னால்’ போகவேண்டுமெனவே அமெரிக்க /நேசநாடுகள் எதிர்பார்ப்பது வழக்கம். மோடியின் ஆட்சியில் இந்தியா அப்படியானதொரு கட்டத்தைத் தாண்டி ‘அணுவாயுத வல்லரசுக்கான அத்தனை தகுதிகளும் எனக்கும் இருக்கிறது’ என மோடியின் இந்தியா மார்தட்டிக் கொள்கிறதா? பி.பி.சி., அதானி பிரச்சினைகள் இந்தியாவுக்கு அமெரிக்காவினால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளா? என்பதே நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டிய ஒன்று.