World

பி.பி.சி. ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையாவுக்குப் புற்றுநோய்

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல பி.பி.சி. ஊடகவியலாளரான ஜோர்ஜ் அழகையா புற்றுநோயால் பீடித்துள்ளார் என அறியப்படுகிறது. வயிற்றில் காணப்பட்ட இந் நோய் தற்போது சுவாசப் பைகளுக்குப் பரவியிருப்பதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.

64 வயதுடைய ஜோர்க் அழகையா,பி.பி.சி. செய்திச் சேவையில் 1989 இல் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். 2014 இல் அவருக்கு வயிற்றில் புற்றுநோயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஈரல், கணயக் கழலைகள் (lymph nodes) ஆகிய உறுப்புக்களுக்கு நோய் பரவியிருந்தது. ஐந்து தடவைகள் அறுவைச் சிகிச்சை, 17 கீமோதெராப்பி சிகிச்சைகள் மேற்கொண்டதன் பலனாக அவர் குணமாகியிருந்தார். இருப்பினும், 2018 இல் நோய் மீண்டும் அவரைப் பீடித்துக் கொண்டது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில், நோய் சுவாசப்பைகளுக்குப் பரவிவிட்டதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்திருந்ததாக அவர் ‘த ரைம்ஸ்’ சஞ்சிகைக்குத் தெரிவித்திருந்தார். மார்ச் மாதம் 17 ம் திகதி அவருக்கு கொறோணாவைரஸ் தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.



“நான் எப்போது எனது விடுதலைக்கான தயாரிப்புக்களைச் செய்யவேண்டுமென்று சொல்லிவிடுங்கள் என நான் எனது புற்றுநோய் மருத்துவரிடம் கூறியுள்ளேன். நோய் குணமடையுமென்றோ, நீடித்துப் போகுமென்றோ அல்லது இறுதி நிலைக்கு வந்துவிட்டதென்றோ அவர் என்னிடம் சொல்லவில்லை. நோய் மூன்றாவது உறுப்புக்குப் பரவியிருக்கிறது, அது என் சுவாசப் பைகள், என்பதை மட்டும் சொன்னார். இப்போது எனது கீமோவின் அளவு கூட்டப்பட்டிருகிறது” என்கிறார் ஜோர்ஜ்.

கடந்த 6-7 வருடங்களாக ஜோர்ஜ் அழகையா, பி.பி.சி. செய்திச் சேவையின் ‘6-மணிச் செய்திகளின்’ பிரதான செய்தி வாசிப்பவராகக் கடமையாற்றி வந்தார். பெரும்பாலான நேரங்களில் அவர் வெளிநாடுகளில் நடைபெறும் செய்திகளின் அறிவிப்பாளராகக் கடமையாற்றி வந்தார்.

கடந்த மாதம், தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஊழலையும், கொலையையும் பிந்தளமாகக்கொண்ட, அவருடைய முதலாவது நூலான ‘The Burning Land‘ வெளியாகியிருந்தது.