பிளாஸ்டிக் கழிவுகள், வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்குத் தடை - பிரதமர் ராஜபக்ச உத்தரவு -

பிளாஸ்டிக் கழிவுகள், வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்குத் தடை – பிரதமர் ராஜபக்ச உத்தரவு

Spread the love
சிறு உற்பத்தியாளருக்கு ஊக்குவிப்பு
  • பிரதமர், தந்து நிதி அமைச்சுப் பொறுப்பின்கீழ் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை விடுத்துள்ளார்.
  • உள்நாட்டு உற்பத்தியாளரை ஊக்குவிக்குமுகமாக 9 வாசனைத் திரவியங்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது
  • கழிவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது
  • ஆனாலும் உள்நாட்டு மறுசுழற்சி (recycling) நிறுவனங்கள் தொடர்ந்தும் செயற்பட அனுமதியுண்டு
  • வெசாக் லாம்புகள், பட்டங்கள், ஊதுபத்தி இறக்குமதிக்குத் தடை
பிரதமர் ராஜபக்ச

சிறிய விவசாய, உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் பொருட்டு 9 பொருட்களின் இறக்குமதிக்கான தடையை இரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரகடனப் படுத்தியுள்ளார்.

இங்கு இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்குள்ளாக்கப்பட்டு மீளேற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இனிமேல் இப்படியான இறக்குமதிகள் அனுமதிக்கபடமாட்டாது. ஏற்கெனவே இலங்கையில் தொழிற்பட்டுவரும் மறுசுழற்சித் தொழிற்சாலைகள் தொடர்ந்தும் செயற்பட அனுமதியுண்டு.

பல வாசனைத் திரவியங்கள் (spices) இறக்குமதி செய்யப்பட்டு ‘இலங்கைத் தயாரிப்புகள்’ என மீளேற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இதனால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பொருட்களும் மீளேற்றுமதி செய்யப்படும்போது இலங்கையின் பெயருக்குக் களங்கத்தை உண்டுபண்ணுகிறது. இனிமேல் இப்படியான இறக்குமதிகளைச் செய்யமுடியாது. உண்மையானதும், தரமானதுமான இலங்கையின் உற்பத்திகள் மட்டுமே இனிமேல் ஏற்றுமதி செய்யப்படும். இதனால் உள்நாட்டு விவசாயிகள் இலாபமடைவர்.

பல ஏற்றுமதி / இறக்குமதியாளர்கள் தரங்குறைந்த வெளிநாட்டு வாசனைத் திரவியங்களை இறக்குமதி செய்து அவற்றுடன் உள்ளூர் உற்பத்திகளைக் கலந்து ‘உண்மையான சிலோன் உற்பத்திகள்’ என்ற பெயரொட்டிகளுடன் மீளேற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம், எங்களது தூய உற்பத்திகளின் நற்பெயர் கெட்டுப்போவதுமல்லாமல், உள்ளூர் உற்பத்தியாளர்களும் நட்டமடைகின்றனர் என நிதியமைச்சின் அறிக்கையொன்று கூறுகிறது.

இறக்குமதி தடைசெய்யப்பட்ட வாசனைத் திரவியங்களில் சில: மிளகு (pepper), சாதிக்காய் (nutmeg), புளி (tamarind), சாதிபத்திரி (mace), இலவங்கப்பட்டை (cinnamon), பாக்கு (areca-nut), இஞ்சி (ginger).

முதலாவது வர்த்தமானி அறிவித்தலின்படியான, வாசனைத் திரவியங்களின் மீதான இறக்குமதித் தடை, ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குப்பிடப்பட்டவற்றில் முக்கியமான ஒன்று. அதே வேளை பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி பல ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைத்த ஒன்று.

இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் வெசாக் கொண்டாட்டங்களின்போது பாவிக்கப்படும் லாம்புக் கூடுகள், பட்டங்கள் மற்றும் ஊதுபத்திகள் ஆகியவற்றைத் தடை செய்கிறது.

இரண்டு அறிவித்தல்களும் வியாழன் நள்ளிரவு நடைமுறைக்கு வருகின்றன.

9 மாவட்டங்களிலுமுள்ள விவசாயிகளும், உள்நாட்டு ஊதுபத்தி தயாரிப்பாளர், பட்டம் மற்றும் கூண்டுகள் தயாரிப்பாளர்களும் இதனால் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *