Spread the love

மறு சுழற்சி செய்யமுடியாமல் குப்பை மேடுகளை நிரப்பும் பொலியூறெத்தேன் கழிவுகளை உண்ணும் பக்டீரியா நுண்ணுயிரிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பொலிய்யூறெத்தேன் (polyurethane) எனப்படும் மூலப்பதார்த்தத்தில் செய்யப்படும் பிளாஸ்டிக் பண்டங்கள் பொதுவாக மீள் சுழற்சி செய்யப்படுவதில்லையாதலால் அவை பெரும்பாலும் குப்பைமேடுகளைச் சென்றடைகின்றன.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் இப் பக்டீரியம் பொலியூறெத்தேன் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதனால் சூழலுக்கு மிகவும் உகந்த விடயமாக இது பார்க்கப்படுகிறது.

குப்பை மேடுகளில் காணப்படும் பக்டீரியம் வேறு பல வகையான பிளாஸ்டிக் பொருட்களை உடைத்துத் துகள்களாக மாற்றுவது ஏற்கெனவே அறியப்பட்டதாயிருப்பினும், பொலியூறெத்தேன் எனப்படும் நச்சுப் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் வகை இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

விளையாட்டு வீரர்கள் அணியும் சப்பாத்துக்கள், குழந்தைகளின் சல, மலக் கழிவுகளைத் தாங்கும் ‘நப்பி’ கள் (nappies), சமையற்கூடத்தில் பாத்திரம் கழுவுவதற்குப் பாவிக்கும் பஞ்சு (sponge), குளிர் நாடுகளில், வீடுகளின் சுவர்களுள் வெப்பத்தைச் சேமிப்பதற்காகப் பாவிக்கும் நுரை போன்ற பண்டங்களின் தயாரிப்பில் பொலியூறெத்தேன் முக்கிய மூலப்பொறுளாகப் பாவிக்கப்படுகிறது. இப் பொருட்கள் மீள் சுழற்சிக்குப் பாவிக்காத வகை என்பதால் குப்பை மேடுகளில் வீசப்படுகிறது.

இது துகள்களாக்கப்படும்போது நச்சு மற்றும் புற்றுநோய்க்குக் காரணமான இரசாயனப் பொருட்களை வெளியிடுவது வழக்கம். இவ்விரசாயனப் பொருட்கள் பக்டீரியாவைக் கொல்லும் குணமுடையது. இருப்பினும் இப் பக்டீரியாவின் விகாரமடைந்த (mutated strain) ஒரு ரகம் பொலியூறெத்தேனை உண்டு உயிர்வாழ்வதற்கு இசைவாக்கமடைந்துள்ளதென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.“மீள்சுழற்சி செய்வதற்குக் கடினமான பொலியூறெதேன் கழிவுகளை உடைப்பதன் மூலம் சூழலைச் சுத்தப்படுத்த உதவும் அதே வேளை, அவற்றை மீள் சுழற்சி செய்து மீள் பாவனைக்கு உட்படுத்தவும் முடியுமென இக் கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன” என ஜேர்மனியில், லேய்ப்சிக் நகரிலுள்ள ஹெல்ம்ஹோல்ட்ச் சூழல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஹேர்மன் ஹைபைப்பெர் தெரிவித்தார்.

இப் பக்டீரியத்தை பாரிய அளவில் பாவித்து கழிவுகளை மீள்சுழற்சி செய்ய இன்னும் குறைந்தது 10 வருடங்களாவது பிடிக்குமெனவும் ஆனாலும் மீள்சுழற்சி செய்யமுடியாதிருந்த ஒரு கழிவைத் தற்போது சுழற்சி செய்வதற்கு வழியுண்டு என அறிந்ததே மிகப் பெரிய சாதனை என அவர் மேலும் தெரிவித்தார்.

1950 களிலிருந்து 8 பில்லியன் தொன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை நாம் உற்பத்தி செய்துள்ளோம். அதில் பெரும்பங்கு இப் பூமியையும், சமுத்திரங்களையும், குப்பைக் கிடங்குகளையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது. சூழல் நிரந்தரமாகவே நச்சுநிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாராய்ச்சி, ‘நுண்ணுயிரியலின் எல்லைகள்’ என்ற சஞ்சிகையில் (Frontiers in Microbiology) வெளிவந்த கட்டுரையின்படி, ‘சூடோமோனாஸ் பக்டீரியா’ (Pseudomonas bacteria) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஒரு குறிப்பிட்ட வகையான பக்டீரியா அதியுயர் வெப்பநிலை, அமிலத்தன்மை போன்ற மிகவும் மோசமான சூழல்களிலும் வாழும் திறமையைக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதெனத் தெரிவித்திருந்தது.

Related:  நம்மாழ்வார் தூதர்கள் | தமிழ்நாட்டில் பரவும் முருங்கை விவசாயம்

இப் பக்டீரியாவுக்கு விஞ்ஞானிகள் பொலியூறேத்தேன் துகள்களை ஊட்டியபோது “அது தனக்குத் தேவையான கார்பன், நைட்றொஜின், சக்தி ஆகியவற்றை இத் துகள்களிலிருந்து பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது” என ஹைபைபெர் தெரிவித்தார்.

பொலியூறெத்தேனை உடைப்பதற்கு ஒரு வகையான பூஞ்சணத்தை (Fungi) பாவிக்க முடியுமெனினும், பாரிய அளவில் கழிவுகளை உடைப்பதற்கு பக்டீரியாவே இலகுவாக இருக்கும் எனவும், அடுத்த படியாக இப் பக்டீரியாவின் மரபணு வரிசைகளை அறிவதன் மூலம் அவை சுரக்கும் நொதியங்களைப் (enzymes) பற்றி அறிய ஆவலாயுள்ளோம். அவைதான் இப் பொலியூறேத்தேனை உடைக்கும் பதார்த்தங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு விகாரமடைந்த (mutant enzyme) நொதியம் பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தல்களைத் துகள்களாக்கும் என, 2018 இல் விஞ்ஞானிகள் தற்செயலாகக் கண்டுபிடித்திருந்தனர். அதுவே முதன் முறையா பிளாஸ்டிக் மீள் சுழற்சிக்கு வழிவகுத்திருந்தது. இந்த ஆராய்ச்சியில் முன்னணி வகுத்த, போர்ட்ஸ்மத், இங்கிலாந்திலுள்ள, நொதிய ஆராய்ச்சி மையத்தின் (Centre for Enzyme Renovation) பேராசிரியர் ஜோன் மக்கீஹன், புதிய பொலியூறெத்தேன் ஆராய்ச்சி விடயத்தில் மிகுந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email
பொலியூறெத்தேன் கழிவுகளை உண்ணும் பக்டீரியா- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பொலியூறெத்தேன் கழிவுகளை உண்ணும் பக்டீரியா- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு