Columnsமாயமான்

பிளவுபடும் அரகாலயர்கள் – ரணிலின் சூழ்ச்சிக்குத் தற்காலிக வெற்றி?

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும் இதுவே நல்ல சந்தர்ப்பம்

மாயமான்

அரகாலயர்களின் கடும் உழைப்பின் பெறுபேறாக ஆட்சியில் அமர்த்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்க விரைவிலேயே மின்னல் வேகத்தில் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டார். கோதாபய ஆட்சியின்போதல்லாது ரணிலின் அதிரடி நகர்வுகள் தற்காலிக வெற்றியைத் தந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. முறையான தலமையில்லாத அரகாலயர்களினால் ரணிலின் நகர்வுகளுக்கேற்ப பதில் நகர்வுகளை மேற்கொள்ள முடியாமலிருக்கிறது. அரசாங்கத்தைப் போல அவர்களிடம் வளங்களில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதொன்று எனினும் அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு அவர்களது பின்னடைவுக்குக் காரணமெனக் கூறப்படுகிறது.

தற்போதைய அவர்களது நடவ்டிக்கைகள் வெறும் தகர டப்பாக்களில் ஒலி எழுப்புவதைப் போல் இருக்கிறது. கோதாபயவைத் தூக்கி எறிந்த அந்த மகா எழுச்சி வெகுவாக மங்கிப்போய்விட்டதாகவே தெரிகிறது. இதற்கு காரணம் அவர்களுக்குக் கிடைத்த வெற்றிக் கேடயத்தை அவர்கள் தேவைக்கதிகமாக வைத்துக் கொண்டாடியதும் அதைத் தொடர்ந்த அவர்களது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் அவர்களைப் பற்றி மக்கள் மனதில் இருந்த விம்பத்தை வெகுவாகக் கலைதுவிட்டதாகப் பார்க்கலாம். அவர்கள் தமது குறியைச் சற்றே தவறிவிட்டார்கள் போலவும் தெரிகிறது. தமது பலவீனக்களை அவர்கள் எதிரியின் கையில் ஒப்படைத்து விட்டார்கள்.

ரணிலின் வியூகம்

ரணில் மக்கள் ஆதரவில்லாது ஆட்சியைப் பிடித்தவர் என்ற வாதத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் சலவை செய்து பாவித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் அது உண்மையாக இருந்தாலும், 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் அவர் ஜனாதிபதியாக வந்திருப்பதும் 120 பேரின் ஆதரவுடன் அவரது அவசரகாலச்சட்ட்ம் நிறைவேற்றப்பட்டதும் அவருக்கு வெற்றி என்பதை விடவும் எதிர்க்கட்சிகளின் கையாலாகத் தனத்தையும் புட்டுக் காட்டி விட்டன. இதுவும் அரகாலயர்களுக்குக் கிடைத்த இன்னுமொரு தோல்வி. ரணிலின் பசப்பு வார்த்தைகள் மக்களை மயக்கிவிட்டன என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. அரகாலயர்களும் எதிர்க்கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டு நகர்வதே நல்லது. மக்கள் மனதில் ரணில் மீது நம்பிக்கை ஏற்பட்டிருப்பது நியாயமானது. . மக்களிடையே ஏற்பட்ட இந்த மனமாற்றம் ஆறாகப் பெருக்கெடுத்து கோதாகோகம ஊரை இரண்டாகப் பிளந்துவிட்டது. இதை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த ரணில் தனித்துவிடப்பட்ட அரகாலயர்களைக் குறிவைத்து நிர்மூலமாக்கத் தயாரானார்.

ரணிலின் மகா மூளையில் உதித்த பல்முனைத் தாக்குதல் திட்டங்களில் முதலாவது பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து அவர்கள் மீது போடப்பட்ட விலங்குகளைக் கழற்றிவிட்டது. இரண்டாவது, தீவிரமான அரகாலயர்கள் மீது வழக்குகளைச் சோடித்து அவர்களைத் தனிமைப்படுத்தியது. இதனால் பலர் தாமாக ஒதுங்கியும், இரகசியப் பொலிசாரால் மிரட்டப்பட்டு ஒதுங்கியும் போயிருக்கிறார்கள். துணிச்சலாகப் போராடியவர்கள் மீது நீதித்துறையைப் பாயவிட்டிருக்கிறார் ரணில். மூன்றாவது வியூகம் அரகாலயர்கள் மீது சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளைக் கொண்டு சேறு பூசுவது. நான்காவது, அரகாலயர்கள் மீள ஒன்றுகூடாது தடுக்கும் வழிவகைகளைப் பிரயோகிப்பது. ஐந்தாவது, தொடரும் பொருளாதாரச் சீரழிவால் பொதுமக்கள் மனங்களில் எழும் கோபத்தை அரகாலயர்களில் மீது திசைதிருப்பி விட்டுத் தனது இருப்பிற்காகக் கால அவகாசம் வாங்குவது.

இச் சகல வியூகங்களிலும் ஏக காலத்தில், மின்னல் வேகத்தில் இயங்கியதுமல்லாது வெற்றியும் கண்டதால் அவர் ஒரு இராணுவத் தளபதியின் அந்தஸ்தையும் பெற்று தனது கோட்டையைப் பலப்படுத்திவிட்டார். பகிரங்கப்படுத்தப்பட்ட அரகாலயர்களின் கைதும் மானபங்கப்படுத்தலும் அவர் எதிர்ப்பர்த்த விளைவுகளை ஈட்டியிருக்கின்றன். பல அரகாலயர்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். அவர்கள் விட்டுப்போன இடத்தில் நின்று சரத் ஃபொன்சேகா போன்றவர்கள் அரகாலயா 3.0 அல்லது 4.0 இற்காக (ஆகஸ்ட் 09) சங்குகளை ஊதுகிறார்கள். அது சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

அரகாலயர்கள் ரணிலின் வீட்டை எரியூட்டியதும், ஜனாதிபதி மாளிகையில் நீண்ட நாட்கள் விடுமுறை கொண்டாடியதும் சிறுபிள்ளைத்தனமென்று கருதினாலும், இதைப் பகிரங்கமாக ஊக்குவித்த ஜே.வி.பி. (சுனில் ஹந்துநெத்தி) போன்றோர் குமார் குணரத்னம் போன்றோரது புத்திமதிகளைக் கேட்டிருக்க மாட்டார்கள் என்றே கருதவேண்டும். இதனால் அரகாலயர்களிடையே பாரிய பிளவு ஏற்பட்டிருக்கச் சாத்தியமுண்டு. அத்தோடு அரகாலயர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய உளவு நாசகாரிகளை ஏற்கெனவே ரணில் தரப்பு அரகாலயர்கள் மத்தியில் நடுகை செய்திருந்தது. துபாய்க்குப் போகும் வழியில் ‘கைது செய்யப்படும்’ அலி எனப்படும் அரகாலய முன்னணி செயற்பாட்டாளர் மீது எனக்குப் பலத்த சந்தேகங்கள் இருக்கின்றன. ஜூலை 09 ‘புரட்சியிலன்று’ இவர் ரூபவாஹினி தொலைக்காட்சியுள் புகுந்து அட்டகாசம் செய்திருந்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னாள் இவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சவுடன் நின்று சந்தோஷமாக உரையாடிக்கொண்டிருந்த படமொன்றை ஒருவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார். இவரது பெயர் விடயத்திலும் சந்தேகங்கள் உள்ளன. இவர் விமானத்தில் வைத்துக் கைதுசெய்யப்படும்போது முதன் முதலாக ஒரு முஸ்லிம் பெயருடன் அறிவிக்கப்படுகிறார். ஆனால் இன்னுமொரு பதிவில் அவர் ஒரு சிங்களவர் என்பதுபோலவும் காட்டப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அரகாலயர்களை மக்கள் வெறுப்பதற்கான ஒரு psy-op நடவடிக்கையாக இது இருக்குமெனவே நான் கருதுகிறேன்.

ஊடகங்கள்

கடந்த சில நாட்களாக ருவிட்டர் வலைத் தளத்தில் அரகாலயர்களுக்கு ஆதரவாகப் பதிவிட்டுவந்தவர்களின் எண்ணிக்கை அருகிப்போயிருக்கிறது. தொடர்ந்து ஆதரவாகப் பதிவிடுபவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்தே பதிவிடுகிறார்கள். இவர்களில் பலர் முஸ்லிம்களாகவும் தமிழர்களாகவும் இருப்பது ஒரு விடயத்தை உணர்த்துகிறது. ஒன்று சிங்களப் பதிவாளர்கள் சலித்துப்போய்விட்டார்கள் அல்லது அச்சமடைந்துவிட்டர்கள். ரணிலின் psy-op வெற்றியீட்டுகிறது. அதைவிட இதில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பங்கு அதிகமாக இருப்பதால் அரகாலயர்களுக்கு வெளிநாட்டு புலி உறுப்பினர்களும், முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் நிதியுதவி செய்கின்றன என்ற சுசில் பிரேமஜயந்த, பிரசன்னா ரணதுங்க போன்றவர்களது பிரச்சாரம் மக்களிடையே சென்றடைய வாய்ப்புண்டு. இவர்கள் ரணிலின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு முலாமைப் பூசிப் பொதுமக்களை மீண்டும் ராஜபக்ச காலத்துக்கு கொண்டு செல்கிறார்கள். டெறானா போன்ற ராஜபக்ச ஊடகங்கள் மீண்டும் பிரச்சாரச் சங்குகளை ஊதி ரணிலைத் தெய்வமாக ஆக்க முற்படுகின்றன. ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்கள் முன் நெளிந்து நின்ற ரணில் இன்று அவர்களைத் தூக்கியெறிந்து பேசுவது சிங்கள பெளத்த தீவிரவாதிகள் மத்தியில் ஒரு பிரபாகரன் உதித்திருப்பதான எண்ண அலைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

அவான் கார்ட்

கோதாபயவின் கட்டளையின்பேரில் லசந்தா விக்கிரமதுங்கா, எக்னெலிகொட போன்றவர்களைக் கொன்றதாகக் கருதப்படும் அவான் கார்ட் நிசங்க சேனாதிபதி, கோதாபய தப்பியோடுவதற்கு சில நாட்களின் முன்னர் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார். அவரது பிரத்தியேக பாதுகாப்பு நிறுவனத்தில் முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட 1,000 பேர் மட்டில் பணிபுரிகிறார்கள். இராணுவத்தின் ஒரு அங்கம் போல் அவர்களது பண, ஆயுத, ஆலோசனை உதவிகளுடன் உருவாக்கப்பட்ட இந் நிறுவனம் இலங்கையில் மட்டுமல்ல மாலைதீவு போன்ற நாடுகளிலும் தமது ‘சேவைகளை’ வழங்கி வருகிறது. இவர்களால் பலன்பெற்ற ஒருவர் தான் மாலைதீவு சபாநாயகர் முகம்மது நஷீத். இப்படியான சேனாதிபதியை ஓடித்தப்பவைத்த அரகாலயர்கள் மீது அவர் இப்போது பழிவாங்குகிறார். பொலிசாரின் உதவியுடன், அடையாளமற்ற சீருடைகளுடன் அரகாலயர்களை முதலில் தாக்கி அவர்களது வாடிகளைத் தகர்த்தது சேனாதிபதியின் படைகள் என்ற சந்தேகம் வலுவாகவே உண்டு. இப்போது அவர்கள் வெள்ளை வானுக்குப் பதிலாக நீல நிற ஜீப்புகளில் வந்து அரகாலய தலைவர்களைத் தூக்கிப்போட்டுக்கொண்டு போகிறார்கள். ரணிலின் வியூகத்தில் இதுவுமொன்று. அரகாலயா 4.0 மீண்டும் உருவாகாமல் பார்த்துக்கொள்ள அத்தனை தயாரிப்புகளையும் ரணில் செய்துவிட்டார்.

ஆரம்பத்தில் ஆங்காங்கே தோன்றி மறைந்த காவிக்காரர் இப்போது தமது விகாரைகளுக்குள் முடங்கிவிட்டார்கள். ஒரே ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மட்டும் சளைக்காது பாடுபடுகிறார். அவரையும் கைதுசெய்யும்படி உததரவு விடப்பட்டிருக்கிறது. முஸ்லிம், இந்து மதத் தலைவர்கள் சாதுரியமாகக் கலந்துகொள்ளாது விட்டிருந்தது அனுகூலமாகப் போய்விட்டது.

எனவே அரகாலயா = 1, ரணில் = 5 என்று ஆட்டம் முடிவுக்கு வரலாமென்ற உணர்வே தலை நீட்டி நிற்கிறது. இந்த இடத்திலிருந்து அடுத்த ஆட்டத்தைத் தொடர எதிர்கட்சிகளுக்குப் பலமில்லை. உள்ளூர் சிவில் சமூக அமைப்புகள் அவ்வப்போ கையைத் தூக்கி ‘உள்ளோம் ஐயா’ என்றுவிட்டு மீண்டும் வாங்குகளில் தூங்கப்போய்விடுகின்றன. ரணிலுக்கு நல்லதொரு இடைவெளி கிடைத்திருக்கிறது. அவரிடம் தற்போது கையளிக்கப்பட்டிருக்கும் திருடர்களையும், கொலைகாரர்களையும், கடத்தல்காரர்களையும் வைத்துக்கொண்டு அவர் தான் எடுத்த சபதத்தை நிறைவேற்ற முயற்சிப்பார். ஓரிரு ஊடகங்களைத் தவிர ஏனைய அனைத்தும் zero வில் இருந்த அவரை ஒரே இரவில் hero ஆக்கியிருக்கின்றன. எனவே மக்கள் வழமைபோல கோதாவின் படத்தை எடுத்துவிட்டு ரணிலை வணங்கத்தான் போகிறார்கள். மண்ணை வீபூதியாக்கும் மந்திரம் அவரிடம் இல்லை என்றாலும் மக்களின் கண்களைக் கட்டிப்போட அவரால் இயலும். அதனால் மீதி இரண்டரை வருடங்களிலும் அலையில் தத்தளித்தாவது அவரது கப்பல் நகரும். கண்ணுக்கெட்டிய தூரத்தில் வேறெந்தக் கப்பலும் இல்லை என்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

அரகாலயர்கள் வீடுபோய்க் குளித்து முழுகிப் பெற்றோரிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி விட்ட படிப்பைத் தொடரவும், புதிய வேலைகளைத் தேடிப் பெறவும் இந்த இடைவேளை நல்ல சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இவ்விரண்டரை ஆண்டு காலத்தில் ஜே.வி. பி. ‘தோழர் மதத்தை’ விட்டு ‘தாராள ஜனநாயக மதத்தைப்’ பின்பற்றி ‘சாம் மாமா’ வின் உதவியால் ஆட்சியில் அமர்த்தப்பட்டு சகல செளகரியங்களுடனும் மக்களை வாழவைக்க ஒரு ‘ட்றை’ பண்ணிப்பார்க்கலாம்.

அதே வேளை ரணிலுக்கும் இது ஒரு வித்தியாசமான அரிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இதற்காக உடனடியாக அவர் நாடுகடத்தப்பட்டாலும், ஒரு 20-25 வருடங்களுக்குப் பிறகாவது அவருக்கு நகரின் மத்தியில் 300 அடியில் சிலை ஒன்று வைக்கப்படலாம். அது இதுதான். ஏழு கிரகமும் இலக்கின வீட்டில் அடைக்கப்பட்டது போல அவர் கையில் தற்செயலாக மாட்டியிருக்கிறது ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி’ என்ற வஜ்ராயுதம். கிட்டத்தட்ட மந்திரவாதியின் கையிலுள்ள தடியைப் போல. இதை வைத்து அவர் எதையும் செய்யலாம். பாராளுமன்றத்தில் 113 ஆகவிருந்த கட்சியை 134 ஆக்கிவிட்டார். கொள்கை பேசித்திரிந்த விடுதலை வீரர்கள் எல்லாம் வெறும் பத்து மில்லியனோடு அவரிடம் அடைக்கலம் கொண்டுவிட்டனர். சொல்வதைச் செய்கிறோம் என இராணுவம் காலடியில் கிடக்கிறது. வரிசையில் நின்று களைத்துப்போன மக்களுக்கு உரத்துப் பேசச் சக்தியில்லை. டக்ளஸ் தேவாநந்தா சொன்னதுபோல கஞ்சா புகைக்க இடமில்லாததால் அரகாலயர்களும் சார்ஜ் இல்லாத ஃபோன்களைப்போல மின்னி மறைந்துவிட்டார்கள். இப்போது ரணில் தனிக்காட்டு ராஜா. அவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

அவர் செய்யவேண்டுமென்று நான் விரும்புவது இதைத்தான். தனது மந்திரக்கோலைப் பாவித்து தமிழரின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு. தனிநாடு தேவையில்லை. சமஷ்டி என்ற பெயர்கூடத் தேவையில்லை. தமிழர்களின் நிலங்களைத் திருப்பித் தந்து, அவற்றை அவர்களே ஆள்வதற்கு வழிசெய்வது. இதனால் நாட்டில் செல்வம் கொழிக்கும் மக்களும் இனிதே வாழ்வார்கள். இதை நிறைவேற்றத்தக்க துணிச்சலானவரும் தூரப்பர்வையுடைவருமான தலைவர் ஒருவரும் சிங்களவர் மத்தியில் தோன்றவில்லை. தற்போது நிலவும் இலங்கையின் பிரச்சினைக்கான ஒரே தீர்வு இதுவே என்பதை நன்குணர்ந்த ஒருவரும் ரணில் தான். மனம் இருக்குதோ இல்லையோ அதை நிறைவேற்றத் தேவையான ஒருவித பிடிவாதப்போக்கும் அவரிடம் தான் இருக்கிறது. நாட்டில் கொள்ளையடித்து வாழவேண்டுமென்ற தேவை அவருக்கு இல்லை. சிஙகள மக்கள் களைத்துப்போயிருப்பதால் அவர்களால் களத்துக்கு இறங்கிப் போராட முடியாது. அருமையான சந்தர்ப்பம் ஒன்று கைகூடி வந்திருக்கிறது. நிறைவேற்றினால் நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்துசமுத்திரப் பிராந்தியமே குதூகலப்படும். நாட்டைவிட்டுத் தப்பி ஓடினாலும் ஒரு நாடுகளும் அவரைத் திருப்பி அனுப்பப் போவதில்லை. 20 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் மிகப்பெரிய சிலையாக அவர் நின்றுகொண்டிருப்பார். கடைசி காலத்துக்குப் புண்ணியமாவது கிடைக்கும்.

நடந்தால் எல்லோருக்கும் நல்லது.