Columns

பிறையான் மல்றோனி (1939 – 2024): அரசியலை விஞ்சிய மனிதாபிமானி

பிறையான் மல்றோனியைக் கேள்விப்படாத தமிழர் கனடாவில் இருந்தால் அவர்கள் வெட்கப்படவேண்டியவர்கள். அவர்கள் இரண்டாம் தலைமுறையினராக இருப்பின் அது பெற்றோர்களின் தவறு. அந்தளவுக்கு தமிழர் இதயங்களில் இடம்பெறவேண்டிய மனிதர் அவர். அவரது அரசியலோடு உடன்படவேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு மனிதனாக அவர் தமிழரால் கொண்டாடப் படவேண்டிய ஒருவர்.

1984 இல் கனடியப் பிரதமராக வருவதற்கு முன்னர் அவர் கனடியருக்கே புதியவர். கியூபெக் மாகாணத்தின் பே கோமோ என்ற சுரங்கத் தொழில் நகரத்தில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து இரு மொழிக் கலாச்சாரத்தின் சங்கடங்களையும் தாண்டி நாட்டின் பிரதமராக வந்தவருக்கு ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் வேண்டும். வேலைகள் மிகவும் அரிதான காலத்தில் வேலைக்காக பே கோமோ என்ற பிரஞ்சு நகரத்தில் குடியேறிய ஆங்கிலக் கனேடியரின் சவால்கள் பொதுவாக ஒரு பிரஞ்சு எதிர்ப்பாளராகவே மகனையும் உருவாகியிருக்க வேண்டும். பாடசாலையில் இருந்த ஒரே ஒரு ஆங்கிலக் கனேடியர் பிறையான். அப்படியிருந்தும் பின்னாட்களில் கியூபெக் மாகாணத்தின் தனித்தன்மையை அனைத்து மாகாணங்களும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வைத்த ஒரு அரசியல்வாதி.

அதுவேன் நமக்கு என இலகுவாகக் கடந்துபோகக்கூடிய ஒருவரல்ல அவர். ஜூலை 07, 1987 இல் நியூ பவுண்ட்லாந்தின் வட அத்லாந்திக் பெருங்கடலில் இரு படகுகளில் ஐந்து நாட்களாகத் தத்தளித்துக்கொண்டிருந்த 155 தமிழ் அகதிகளை ஒரு மனிதாபிமானமுள்ள கடற் தொழிலாளி காப்பாற்றிக் கரை சேர்த்த போது அவர்களை உடனே திருப்பி அனுப்பவேண்டுமென கனடியர்கள் ஓலம் வைத்தார்கள். அப்போது “அகதிகளைத் திருப்பி அனுப்பும் தொழிலில் உள்ளவர்களில்லை நாங்கள். இதில் நாங்கள் தவறிழைத்தால் அது நாங்கள் நேர்மை மற்றும் காருண்யங்களின் பக்கம் இருக்கிறோம் என்பதையே காட்டும்” (‘We are not in the business of turning away refugees, If we err, we err on the side of fairness and compassion.’) எனக் கூறியவர். அகதிகள் உடனேயே திருப்பி அனுப்பப்படவேண்டும் எனப் பாரிய அழுத்தம் அவரது கட்சியினராலேயே அப்போது அவருக்கு கொடுக்கப்பட்டது. அதை உதாசீனம் செய்து தனது தலைமைத்துவப் பண்பை அவர் நிரூபித்திருந்தார். “அகதிகள் அனைவரையும் தடுப்பு முகாம்களில் போடவேண்டும்” என அப்போதைய லிபரல் கட்சியின் உறுப்பினராக இருந்த சேர்ஜியோ மார்ச்சி பாராளுமன்றத்தில் கூறியபோது ” அவர்கள் சுதந்திரத்தையும் சந்தர்ப்பங்களையும் தேடி வரும் அச்சுறுறுத்தப்பட்ட மனிதர்கள்” ( frightened human beings searching for freedom and opportunity) எனக்க்கூறி அதை மிகவும் கடுமையான ஆத்திரத்தோடு எதிர்த்தவர். அது அரசியல் தனத்துக்கும் அப்பாற்பட்ட மனிதத்தின் வெளிப்பாடு. அப்போது கல்கரி கிழக்கு பிரதிநிதியாக இருந்த இன்னுமொரு கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர் அலெக்ஸ் கிண்டி என்பவர் “இந்த அகதிகளை அவர்கள் வந்த படகுகளிலேயே ஏற்றித் திரும்பவும் கடலில் தள்ளிவிடவேண்டும்” என ஓங்கி ஒலித்திருந்தார். இவரும் போலந்திலிருந்து கப்பலில் வந்த ஒரு அகதி என்பது வேறு விடயம்.

கியூபெக் மாகாணத்தின் பே கோமோ என்னும் நகரிலுள்ள நோர்த் ஷோர் என்னுமிடத்தில் மார்ச் 20, 1939 அன்று பிறந்தவர் மல்றோனி. தந்தையார் பென் (Ben) ஒரு மின்சாரத் தொழிலாளி. அமெரிக்க நிறுவனமொன்றினால் நிறுவப்பட்ட ஒரு சுரங்கத் தொழிலாலையில் அவர் பணி புரிந்தார். பெரும்பான்மையான பிரஞ்சு நகரத்தில் ஆங்கில மொழியைப் பேசும் இக்குடும்பம் அப்போதைய வேலையின்மைப் பிரச்சினை மற்றும் வறுமை காரணமாக பல சிரமங்களை எதிர்கொண்டு இங்கு வாழவேண்டி ஏற்பட்டது. தந்தையார் அப்போது ஒரு லிபரல் கட்சி ஆதரவாளராக இருந்தாலும் அமெரிக்க நிறுவனங்களின் வியாபார விஸ்தரிப்பு காரணமாகவே தனது தந்தையாருக்கு வேலை கிடைத்தது என்ற காரணத்தினால் மல்றோனியின் மனம் கன்சர்வேட்டிவ் கட்சி மீது சாய்ந்தது. இதன் காரணமாகவே அவர் பின்னர் அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (NAFTA) கொண்டுவர முடிந்தது. ஆனாலும் 1956 இல் அப்போதைய கன்சர்வேட்டிவ் அரசியல்வாதி ஜோன் டீஃபன்பேக்கருடனான தொடர்பு அவரைக் கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைய வழி கோலியது.

1976 இல் மல்றோனி கன்சர்வேட்டிக் கட்சியின் தலைவராகப் போட்டியிட்டபோது அவரின் அமெரிக்க சார்புக் கொள்கை காரணமாக போட்டியாளர் ஜோ கிளார்க்கிடம் தோல்வியுற நேர்ந்தது. 1980 இல் ஜோ கிளார்க் அரசு தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1983 இல் அவர் கட்சித் தலைவராகி 1984 இல் கனடிய பிரதமாராகிறார். இதுவரை கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கியூபெக் மாகாணத்தில் அதிக ஆதரவு இல்லாமலிருந்தபோதும் மல்றோனியின் கியூபெக் வேர்கள் அக்கட்சிக்கு 58 உறுப்பினர்களைத் தேடிக்கொடுத்தன. 1984 தேர்தலில் 282 தொகுதிகளில் 211 கன்சர்வேட்டிவ் கட்சி வசமானது. ஜோன் டீஃபன்பேக்கருக்குப் பிறகு மலோறினியாலேயே இச்சாதனையைச் செய்ய முடிந்தது. மல்றோனியின் இரு மொழிப் புலமை இதற்கு முக்கிய காரணமென்று கூறப்படுகிறது.

இதன் பிறகு அவரது வெளிச்சம் மங்கத் தொடங்கியது. ஊழல் காரணமாக 8 அமைச்சர்கள் பதவி விலகவேண்டி ஏற்பட்டது. ஊழல் பெருச்சாளிகளை அமைச்சர்களாக நியமித்தமை குறித்து மல்றோனியின் தலைமைத்துவம் மீது கேள்விகள் வைக்கப்பட்டன. இருப்பினும் தனது பாதையிலிருந்து அவர் மாறிக்கொள்ளவில்லை. 1987 இல் அவர் கூட்டிய மாகாண அரசுகளின் தலைவர்களின் கூட்டத்தில் (மீச் லேக் ஒப்பந்தம் (Meech Lake Accord)) கியூபெக் மாகாணத்திற்கான விசேட அந்தஸ்தை (distinct society) ஏகமனதாகப் பெற்றுக்கொடுத்ததுடன் மாகாணங்களுக்கான வேறு பல உரிமைகளையும் பெற்றுக்கொடுத்தார். கனடாவின் அரசியற் சாசனத்தில் இதுவரை கொடுக்கப்படாதிருந்த கியூபெக்கின் விசேட அந்தஸ்து அவரது கட்சிக்கு கியூபெக்கில் ஆதரவையும் ஏனைய மாகாணங்களில் எதிர்ப்பையும் பெற்றுக்கோடுத்தது. அத்தோடு கியூபெக் அம் மாகாணத்திற்கான குடிவரவு விடயங்களில் தனித்து முடிவெடுக்கும் அந்தஸ்தையும் இச்சந்திப்பு பெற்றுக்கொடுத்தது. இதன் மூலம் பல தமிழர்கள் நன்மை பெற்றதும் வரலாறு. கியூபெக் மாகாண பிரஞ்ச் மொழிப் பிரதமாரான பியர் எலியட் ட்றூடோவுக்கும் பிரிவினைவாத அரசியல்வாதிகளுக்குமிடையே இருந்த உறவைவிட மல்றோனிக்கும் அப்போதிய லிபரல் மாகாண முதல்வர் ரோபேர் பூராசாவுக்குமிடையே இருந்த நல்லிணக்க உறவினால் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தினால் கியூபெக் மாகாணத்தின் பிரிவினைப் போராட்டம் ஓரளவுக்கு நிரந்தர ஓய்வைப் பெறவேண்டி ஏற்பட்டது. இதற்குக் காரணமானவர் என்ற வகையில் மல்றோனி ஒரு statesman ஆகிறார்.

மீச் லேக் ஒப்பந்தத்தின் மூலம் மல்றோனி ஒரு ‘ஸ்டேட்ஸ்மன்’ ஆகக் கருதப்பட்டாலும் கியூபெக் மாகாணத்திற்கு விசேட அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்து பிரிவினைவாதத்தை முறியடித்தமை இதர கனடியர்களால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணம் இவ்வொப்பந்தத்திற்கு முன்னாள் பிரதமர் பியர் எலியட் ட்றூடோ தெரிவித்த கடும் எதிர்ப்பும் ஒரு காரணமாகும். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் ‘சார்லட்டவுண் ஒப்பந்தம்’ என்று இன்னுமொரு ஒப்பந்தத்தை உருவாக்க மல்றோனி முயன்றார். இதில் கியூபெக் மாகாணம் தனது விசேட அந்தஸ்த்திற்கு உரியதென ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அங்குள்ள ஆதிக்குடிகள் தம்மைத் தாமே ஆள்வதற்கான உரிமைகள் வழங்கப்படவேண்டுமெந்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு ஆதரவு இருந்தாலும் கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் இது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது அது தோல்வியைத் தழுவியதால் அரசமைப்புச் சட்டத்தை மாற்ற மல்றோனி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அமெரிக்காவுடன் அவர் செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.ரி. வரியும் பல வியாபாரிகளைத் தமது செயற்பாடுகளில் பல வலிதரும் அனுசரிப்புகளைச் செய்ய நிர்ப்பந்தித்தது. 1939 இல் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு கனடா அனுபவித்துக்கொண்டிருந்த கனத்த பொருளாதார வலியை இது மேலும் உக்கிரமாக்கியது. 1.6 மில்லியன் மக்கள் வேலையற்றுப் போயினர். G7 நாடுகளிலேயே கனடாவில் தான் வரி விதிப்புகள் உச்சத்தைக் கண்டன. குழந்தை பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சிறு உதவித்தொகை நிறுத்தப்பட்டது. நாட்டின் கொடி தூக்கிகளான எயர்கனடா, வியா ரயில் ஆகியன விற்கப்பட்டன. 1988 இல் எயர் கனடா செய்த எயர் பஸ் விமானக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக அவர் மீது வழக்குப் பதிவானது. மக்கள் விரைவாக மல்றோனியை வெறுக்கவும் மறக்கவும் ஆரம்பித்தனர்.

கருத்துக்கணிப்புகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை அதி குறைந்த புள்ளிகளைப் பெற்ற பிரதமர் என்ற சாதனை இன்னும் மல்றோனியை ஒட்டிக்கொண்டிருக்கிறது. எயர் பஸ் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனினும் சந்தேகம் தொடர்ந்தும் அவர் பின்னால் திரிந்தது. பெப் 24 அன்று அவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். இருப்பினும் 2008 இல் எயர் பஸ் ஊழல் அவரை மீண்டும் எட்டிப் பிடித்தது. வெளிநாட்டு அரசுகளிடம் எயர் பஸ் பற்றிப் பரப்புரை (lobbying) செய்வதற்கென்று கார்தீன்ஸ் ஷ்றைபர் என்னும் ஜேர்மானியப் பெண்ணிடம் பணம் பெற்றதை அவர் ஒத்துக்கொண்டார். ஆனால் அது கனடிய அரசாங்கத்திற்கு பரப்புரை செய்வதற்கே அப்பணத்தை மல்றோனிக்கு கொடுத்ததாக அப்பெண் ஒத்துக்கொண்டு வரி இறுப்பு விடயத்தினால் சிறை சென்றார். அப்பணத்தை $1,000 டாலர் நோட்டுகளாகச் சேமிப்புப் பெட்டியில் ஒளித்து வைத்தமையும் அதற்கான வரியைச் செலுத்தாமையும் தவறு என்பதை மல்றோனி ஒத்துக்கொண்டார்.

என்னதான் இருந்தாலும் அவர் மீது எந்தவொரு அழுக்கும் நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளாதவாறு அவரது ‘ஸ்டேட்ஸ்மன்’ ஆடை பாதுகாத்தது. பல உலக அரசியல் தலைவர்களிடம் அவர் கொண்டிருந்த நட்பு அவருக்கு மிகவும் அனுகூலமாக இருந்தது. பல உலக வணிக நிறுவனங்கள் அவரைத் தமது முகவராக / ஆலோசகரகாக நியமித்தன. அவரது கஜானா தொடர்ந்து நிரம்பிய நிலையிலேயே இருந்தது.

1998 இல் கனடிய அரசு அவருக்கு ‘ஓர்டர் ஒஃப் கனடா’ விருதையளித்துக் கெளரவித்தது. வேறு பல சர்வதேச விருதுகளும் அவரைத் தேடி வந்தன.

மல்றோனி ஒரு தொடர் புகையாளியாகப் பல வருடங்கள் இருந்து பின்னர் இருந்து அப்பழக்கத்தை விட்டவர். பலவித வகையான புற்றுநோய்களும் அவரது உடலில் குடிகொண்டதால் சிகிச்சைகள் செய்யப்பட்டன. இருந்தும் அவரது மரணம் அவற்றினால் நிகழவில்லை. புளோறிடாவிலுள்ள பாம் பீச் என்னும் இடத்திலுள்ள மருத்துவ மனையில் அவரது மரணம் நிகழ்ந்தது. விழுந்ததனால் ஏற்பட்ட காயம் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

தமிழரைப் பொறுத்தவரை அவர் நேர்மையான பக்கத்திலேயே இருந்திருக்கிறார். நல்லவர்களை நியாயம் இனம் கண்டுகொள்ளும். சென்று வாருங்கள்! (Pic Credit: WSJ)