‘பிறெக்சிட்’ (Brexit) – ஒரு பார்வை

Spread the love

இன்னும் சில வாரங்களில், அக்டோபர் 31, 2019, கிறீன்விச் நேரம் இரவு 11:00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரியவிருக்கிறது. இதனால் பிரித்தானிய மக்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் என்ன என்பதை இக் கட்டுரை அலசுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் என்பது 28 நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டரசு. மக்களும், வர்த்தகமும் இன்நாடுகளின் எல்லைகளைக் கட்டுப்பாடுகளின்றி நகர்ந்து கொள்வதற்கு இக் கூட்டாட்சி அனுமதியளிக்கிறது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்க நாடுகளில் ஒன்று.

பிறெக்சிட்

பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? எனக் கேட்டு , 2016 ம் ஆண்டு ஜூன் மாதம் 23 ம் திகதி, பிரித்தானியப் பொது மக்களிடம் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்களித்த 17.4 மில்லியன் மக்களில், ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமென 52% மக்களும், தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டுமென 48% மக்களும் வாக்களித்திருந்தார்கள். அதன் பிரகாரம் வருகின்ற அக்டோபர் 31ம் திகதி பிரித்தானியா விலகுவதாக இருக்கிறது.

தெரேசா மே யின் பிரச்சினை

உண்மையில் பிறெக்சிட் மார்ச் 29, 2019 இல் நிறைவேறியிருக்க வேண்டும். விலகுவதற்கு முன்னர் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் முக்கியமாக இரண்டு விடயங்களில் இணக்கப்பாடு காணவேண்டியிருந்தது. அது சுங்க ஒன்றியம் (Customs Union) மற்றும் ஒற்றைச் சந்தை (Single Market). தற்போது தன்னுள் வைத்திருக்கும் நாடுகள் அனைத்திற்கும் தேவையான சுங்க தீர்வைகள் (tariffs) போன்ற விடயங்களுக்கான பேச்சுவார்த்தைகளியும், பேரம் பேசுதலயும் ஒன்றியம் தான் செய்து கொள்கிறது. உலக வர்த்தக சம்மேளனம் (WTO) போன்ற அமைப்பில் 28 நாடுகளையும் ஒன்றியம் தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந் நாடுகள் அனைத்தும் விதிக்கும் வரி ஒன்றாகவே இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு சுங்க ஒன்றியம் எனப்படும். அதே போல, இந்த 28 நாடுகளிடையேயுள்ள மக்கள், பண்ட பரிமாற்றங்கள் எல்லாமே எல்லைகளற்றதாக, கட்டுப்பாடுகளற்றதாக (free movements of labour and commodities) இருப்பது ஒற்றைச் சந்தை எனப்படும். தற்போதய ஒன்றியத்தில் இவ்விரண்டு அம்சங்களும் முக்கியமானவை.

பிரித்தானியா ஒன்றியத்திலிருந்து பிரியவேண்டுமென விரும்புபவர்களின் முக்கிய நோக்கம் இந்த இரண்டு அமசங்களிலிருந்தும் விடுபட வேண்டுமென்பதே. இதற்கு கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிற் கட்சிகளிலிருந்து ஆதரவு இருந்தது. இதைச் சட்டபூர்வமாகச் செய்யவேண்டுமென்பதற்காக பிரித்தானியாவிற்கும் ஒன்றியத்திற்குமிடையில் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டி இருந்தது. இதற்குப் பெயர்தான் விடுபடல் ஒப்பந்தம் / ‘விவாகரத்து ஒப்பந்தம்’ (Withdrawal Agreement), சொல் வழக்கில் ‘டீல்’ (deal) எனப்பட்டது.

மார்ச் 2019 இல் தெரேசா மேயின் அரசாங்கத்தில் இவ்வொப்பந்தத்தின் வரைவு தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டபோது அது சபையினால் நிராகரிக்கப்பட்டது. ஒன்றியத்தின் ஒப்புதலுடன் மே பிரிவதற்கான திகதியைப் பின்போட்டுவிட்டு ஒப்பந்தத்தை இரண்டு தடவைகள் திருத்திச் சமர்ப்பித்த போதும் இரண்டு தடவைகளிலும் பாராளுமன்றம் அவற்றை நிராகரித்துவிட்டது. மே பதவியைத் துறந்தார்.

இவ்வொப்பந்தம் நிராகரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் வட அயர்லாந்துக்கும் அயர்லாந்துக்குமுள்ள உறவு. தற்போதுள்ள ஒழுங்கில் மக்கள் எல்லையற்ற நடமாட்டத்தை மேற்கொள்ளலாம். ஒப்பந்தம் எதுவுமில்லாது பிரித்தானியா பிரிந்தால் பழையபடி ‘அயர்லாந்துப் பிரச்சினை’ கிளம்பிவிடச் சாத்தியங்களுண்டு.

பொறிஸ் ஜோன்சன்

இப்படியான பிரச்சினைகளுடன் பொறிஸ் ஜோன்சன் பிரதமராகிறார். அயர்லாந்துப் பிரச்சினைக்கு ஒரு இணக்கப்பாட்டைக் காண விழைந்தாலும், அது கிட்டாத பட்சத்திலும் அக்டோபர் 31 அன்று விலகுவாதக் தீர்மானித்து விட்டார். இதைக் குழப்புவதற்குப் பாராளுமன்றத்துக்கு அவகாசம் கொடுக்காமல் அதை முற்கூட்டியே தற்காலிக இடைநிறுத்தம் செய்கிறார். ஆனால் அவரது முயற்சிகளுக்குப் பாராளுமன்றம் தொடர்ந்தும் முட்டுக்கட்டை போடுகிறது. துர்ப்பாகிய நிலைமை என்னவென்றால் அவரது கட்சிக்காரரே அவருக்கு எதிராக நடந்துகொள்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

பிரிவினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள்

‘டீல்’ எனப்படும் ‘விவாகரத்து ஒப்பந்தம்’ கொண்டிருக்கும் சில முக்கியமான அம்சங்கள்:

 • ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்களினதும் பிரித்தானிய குடிமக்களினதும் உரிமைகள்
 • பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கொடுக்கவேண்டிய பணம் (அண்னளவாக 39 பில்லியன் பிரித்தனிய பவுண்ட்ஸ் எனப்படுகிறது)
 • அயர்லாந்து – வட-அயர்லாந்து எல்லை / மக்கள் நடமாட்டம்
 • மாற்றத்தை அமுலாக்கும் காலம் 21 மாதங்கள்
 • பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல சட்டங்களுக்கும் கட்டுப்படவேண்டும் அதே வேளை ஒன்றியத்தின் ஸ்தாபனங்களின் அங்கத்துவத்தையும் இழக்கும்
 • மாற்றத்தை அமுலாக்கும் காலம் ஒன்றோ அல்லது இரண்டோ வருடங்களுக்கு நீடிக்கப்படலாம்
 • பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கால நீடிப்புக்காக ஒரு இணக்கப்பாட்டுக்கு வரலாம்
நன்மைகள்

பிரித்தானியாவுக்கு இருக்கக்கூடிய முக்கிய நன்மைகளில் முக்கியமானவை எனக் கருதப்படக்கூடியவை :

 1. தமது கலாச்சாரத்தையும் தனித்துவத்தையும் பேணுதல்
 2. எல்லையற்ற மக்கள் குடிவரவைத் தடுத்து நிறுத்தல்.
 3. தமக்கு இசைவான வர்த்தக, பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளல்.
 4. வேலைவாய்ப்பு அதிகரித்தல்
 5. வருடா வருடம் பிரித்தானியா ஒன்றியத்துக்கு வழங்கும் 9 பில்லியன் பவுண்டுகளைக் கொடுக்கத் தேவையில்லை.
குடிவரவு /குடியகல்வு வதிவிடப் பிரச்சினைகள்

பிரித்தானியா ஒன்றியத்திலிருந்து ‘டீல்’ இல்லாது விலகும் பட்சத்தில், பிரித்தானியாவில் வதியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரஜைகள் பிரித்தானியாவிலேயே தங்கிக்கொள்ளலாம். ஒன்றியத்தில் இருக்கும் பிரித்தானியர்கள் அந்தந்த நாடுகளில் பதிவுசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

ஒன்றிய நாடுகளுக்குப் போகும் பிரித்தானியர்கள் அக்டோபர் 31 அன்று குறைந்தது 6 மாதங்களாவது பெறுமதியுள்ள கடவுச் சீட்டுக்களை வைத்திருக்க வேண்டும். சாரதிகள் சர்வதேச சாரதிப் பத்திரங்களை வைத்திருக்க வேண்டும்.

தீமைகள்
 1. அயர்லாந்துப் பிரச்சினை சுமுகமாகக் கையாளப்படாவிடில் அது கடந்த காலத்திற்குள் பிரித்தானியாவைக் கொண்டுசென்று விடும்.
 2. ஸ்கொட்லாந்த் , வேல்ஸ் பிரிவினைக்கு வழிவகுக்கலாம்
 3. தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படலாம்
 4. பொருளாதாரத்தில் உடனடியான பாதிப்பு, மக்கள் வருமானத்தில் பற்றாக்குறை ஏற்படலாம். பண்டங்களின் விலை ஏறும்.
 5. மருந்துகள் பற்றாக்குறை ஏற்படலாம்
 6. ஒன்றியத்தின் ஸ்தாபனங்களான ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய காவல்துறை (Europol) போன்றவற்றிலிருந்து உடனடியாக நீக்கப்படும்
 7. எல்லைகளில் மக்கள், பண்டங்கள் நகர்வுகள், போக்குவரத்து மிகவும் தாமதமாகும். இதனால் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும்
 8. நாணயத்தின் பெறுமதி சரிவடையும்
 9. ஐரோப்பிய மருத்துவ காப்புறுதிகள் செல்லுபடியாகாது

தீர்வு

சுமுகமான ஒப்பந்தம் / இணக்கப்பாடு ஏற்படாவிடில் பிரித்தானியா அக்டோபர் 31 இல் ஒன்றியத்துடனான சுங்க ஒன்றியத்திலிருந்தும், ஒற்றைச் சந்தையிலிருந்தும் ஒரே நாளில் பிரிந்துவிடும். பிரிவினால் ஏற்படும் உடனடிப் பிரச்சினைகளைச் சமாளிக்க பெருந்தொகையான பணச் செலவிற்கு பிரித்தானியா தயாராக இருக்கவேண்டும்.

பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் இடையில் முதலில் இணக்கப்பாடு ஒன்று வந்தால் மட்டுமே பிரிவிற்கான ஒப்பந்தம் நிறைவேறும்.

யார் முதலில் கண் சிமிட்டுவது? பிரதமரா? பாராளுமன்றமா?

இரண்டு பேரும் முரண்டு பிடித்தால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து புதிய அரசில் பிறெக்சிட் டுக்கான புதிய கால எல்லையைப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிறெக்சிட் முற்றாகவே நிறுத்தப்படலாம். இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் தேவையில்லை.

ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் பிறேக்சிட்டையே விரும்புகிறார்கள் ஆனால் ‘டீல்’ தான் அவர்களுக்கு வேண்டும். எனவே பிறெக்சிட் கால எல்லையைத் தள்ளிப்போடுவதற்கான சாத்தியங்களே அதிகம்.

Print Friendly, PDF & Email
>/center>