Spread the love

கோவிட்-19 க்கு எதிரான போரின் அடுத்த கட்ட நடவடிக்கையாக மனிதரில் பிறபொருளெதிரி (antibody) பரிசோதனைக்கான அங்கீகாரத்தை கனடிய அரசின் சுகாதாரத் திணைக்களம் வழங்கியுள்ளது.

ஒருவரில் நோய் தொற்றும்போது கிருமிகளுட்பட, உடலுக்குள் நுழையும் எந்தவொரு ‘பிற பொருட்களையும்’ உடலின் பாதுகாப்புப் பொறிமுறையான நிர்ப்பீடன ஆற்றல் எதிரிகளாகவே நோக்குகின்றன. இப்படி எதிரிகளை அடையாளம் கண்டவுடன் அவற்றைத் தாக்கி அழிக்கப் புறப்படும் காவலாளித் துணிக்கைகளை ‘பிறபொருளெதிரி’ (antibody) என்பார்கள்.

அதே வேளை ஒவ்வொரு எதிரிக்கும் அவரவர் தன்மைக்கு ஏற்ப விசேடமான பிறபொருளெதிரிகளை உடல் தயாரிக்கிறது. மலேரியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பிறபொருளெதிரிகள் கோவிட்-19 நோய்க்கிருமிகளை அடையாளம் காணமாட்டாது.

தற்போது கனடா உட்படப் பல நாடுகளாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் பிறபொருளெதிரிப் பரிசோதனை என்பது, கோவிட்-19 நோய்க்கெதிராக, அதாவது SARS-CoV-2 வைரஸுக்கு எதிராக, மனித உடல் பிறபொருளெதிரிகளைத் தயாரித்துள்ளதா என்று பார்ப்பதற்காகவேயாகும். ஒருவரது உடலில் இப் பிறபொருளெதிரிகள் காணப்பட்டால் அவருக்கு கோவிட் நோய்த் தொற்று ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அர்த்தம்.


ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் பல நாடுகள் ஏற்கெனவே இப் பரிசோதனைகளைச் ஆராய்ச்சி ரீதியில் செய்துவருகின்றன. பிரித்தானியா இப்போது பொதுமக்களில் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது. கனடாவில், மார்க்கம் நகரிலுள்ள ஒரு நிறுவனம் இவ்வுபகரணங்களைப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகின்றதெனினும், கனடிய மத்திய அரசின் சுகாதாரத் திணைக்களம் உள்ளூர்ப் பாவனைக்கான அங்கீகாரத்தை இதுவரை வழங்காமலிருந்து வந்தது. இந்த மாதம் 12 ம் திகதி அரசு அத் தடையை நீக்கியுள்ளது. Rapid Tests என்ற பெயரில் இவ்வுபகரணங்களை மார்க்கத்திலுள்ள BNTX என்ற நிறுவனம் தயாரிக்கிறது. கைக்கடக்கமான இவ்வுபகரணத்தை முன்னணிப் பணியாளரும், மருத்துவர்களும் தமது அலுவலககங்களில் வைத்தே பாவிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அரை மணித்தியாலத்துள் ஒருவருக்கு நோய் தொற்றியுள்ளதா என அறிந்து விடலாம். இதற்கான செலவு $10.00 இற்குமுள்ளே தான் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

கனடாவில் DiaSorin LIAISON என்ற ஆய்வுகூடம் இப் பரிசோதனைகளைச் செய்யுமெனெ அரசு அறிவித்துள்ளது.

பிறபொருளெதிரிப் பரிசோதனை மூலம் ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறாரா, அவர் போதுமான எதிர்ப்பு சக்தியைத் தோற்றுவிதுள்ளாரா எனப் பல விடயங்களை அறிவதன் மூலம் இன் நோய்க்குக் காரணமான பல தெரியாத விடயங்களையும் அறிந்துகொள்ள வாய்ப்புண்டு. ஏற்கெனவே வேறு நாடுகளில் செய்யப்பட்ட பிறபொருளெதிரிப் பரிசோதனைகளின்போது நோய் தொற்றிய சிலரில் இப் பிறபொருளெதிரிகள் காணப்படவில்லை எனவும் கூறப்பட்டது. எனவே இப் பரிசோதனை ஒரு முற்றுமுழுதான பரிசோதனையாகக் கருதப்படமுடியாவிட்டாலும், இதன் செலவு, நேரச் சேமிப்பு போன்ற விடயங்கள் பரந்துபட்ட இடங்களில் விரைவாகப் பரிசோதனைகளைச் செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க ஏதுவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  முகக்கவசப் பாவனை | உலக சுகாதார நிறுவனத்தின் காணொளி